நம் நாட்டில் சினிமாதான் 1960 70ம் ஆண்டுகளில் முக்கிய பொழுதுபோக்காகத் திகழ்ந்தது. சாதாரணமாகச் சிறுவர் சிறுமியரைச் சினிமாக்களுக்கு அழைத்துப் போகும் வழக்கம் கிடையாது. கிரேட் ஈஸ்டர்ன் சர்க்கஸ், கமலா த்ரீ ரிங் சர்க்கஸ் போன்ற கம்பெனிகள் ஊர் ஊராக வருவார்கள். மூன்று நான்கு வாரங்கள் காட்சிகள் நடத்துவார்கள். சிறுவர் சிறுமியர் இதற்காகவே காத்திருப்பார்கள். கூட்டம் அலைமோதும்.
யானைகள் கால்பந்து விளையாடும்; ரிங் மாஸ்டர் சவுக்கைச் சொடுக்குவார். சிங்கங்கள் சாதுவாகச் சொன்னதைக் கேட்கும்: குரங்குகள் சைக்கிளில் வித்தைகள் காட்டும்: விளக்கை அணைப்பார்கள். சர்க்கஸ் அரங்கம் முழுக்கக் கும்மிருட்டு. ஒரு பெரிய உருண்டைக்குள் மட்டும் கலர் கலராய் விளக்குகள் கண் சிமிட்டும். ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த உருண்டைக்குள் நுழைவார். அதற்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவார். நம் நெஞ்சு படபடக்கும். ட்ரப்பீஸ் விளையாட்டும் இப்படித்தான். அந்தரத்தில் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் தாவிப் பிடிப்பார்கள். மாஜிக் காட்டுபவர் வருவார். காலி தொப்பியைக் காட்டுவார். “சூ மந்திரக் காளி” என்று என்று சொல்லுவார். காலி தொப்பிக்குள்ளிருந்து முயல் குட்டி குதித்துவரும். இவை அனைத்துக்கும் மேலாகச் சர்க்கஸ் கோமாளிகள். உருவத்தில் குள்ளமாக இருக்கும் இவர்கள் சகலகலா வல்லவர்கள். இவர் களைப் பார்த்தாலே அரங்கம் அதிரும்.
டி.வி.-யின் வரவு
1980 - களில் சமுதாய வாழ்க் கையில் முக்கிய மாற்றங்கள் வந்தன. தொலைக்காட்சியும், கம்ப் யூட்டரும், பொழுதுபோக்கைத் தேடி நாம் போகவேண்டிய தேவை இல்லாமல், அவற்றை நம் வீடுகளுக்குக் கொண்டுவந்தன. அம்மா, அப்பாக்கள் வீடுகளில் தொலைக்காட்சிகளில் சினிமாக்கள், சீரியல்கள் பார்க்கத் தொடங்கினார்கள். சிறுவர் சிறுமியருக்குக் கார்ட்டூன்கள், கிரிக்கெட் மாட்ச்கள்.
கம்ப்யூட்டர்,செல்போன்கள் ஆகிய கருவிகளில் பெரியவர்கள் ஈ மெயில், மெஸேஜிங், வெப் ஸர்ஃபிங் என்று நேரம் செலவிடுகிறார்கள். சிறுவர் சிறுமியரை வீடியோ கேம்ஸ் கட்டிப்போட்டு வைக்கின்றன. ஆகவே, குழந்தைகளுக்கு சர்க்கஸ் பார்க்கும் ஈடுபாடு குறைந்துவிட்டது.
மிருகங்களை பயன்படுத்த எதிர்ப்பு
சர்க்க்கஸில் மிருகங்களைக் கொடு மைப்படுத்துவதாகச் சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், மிருகங்களை வைத்துச் செய்யும் விளையாட்டுகளின்மீது அரசாங்க, நீதிமன்றக் கட்டுப்பாடுகள் வந்தன. இந்த வரைமுறைகளால், மிருகங்கள் பங்கெடுக்கும் விளை யாட்டுக்கள் சுவாரஸ்யம் இழந்தன. மக்கள் சர்க்கஸுக்கு வர இந்த விளையாட்டுக்கள் முக்கிய காரணம். வீட்டுக்கே வந்த பொழுதுபோக்குகள், ஷோக்களின் சுவாரஸ்யக் குறைவு ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால், சர்க்கஸுக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்தது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க சர்க்கஸ் கம்பெனிகளின் கதை இதுதான். நம் நாட்டைப்போலவே, கனடா நாட்டிலும் சர்க்கஸ் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. பல பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் இருந்தன. பிரம்மாண்ட டென்ட்கள், நூற்றுக்கணக்கான கலைஞர்கள், மிருகக் காட்சிசாலை போல் வகை வகையான மிருகங்கள், பறவைகள் என ஏகப்பட்ட வசதிகளோடு இந்தக் கம்பெனிகள் இயங்கின. இந்தக் கம்பெனிகள் தவிர, ஏகப்பட்ட கழைக் கூத்தாடிக் குழுவினர் இருந்தார்கள். இவர்கள் இருபது, முப்பது கலைஞர்கள், ஓரிரு மிருகங்கள் ஆகியவற்றோடு செயல்பட்டார்கள். சர்க்கஸ் கம்பெனிகள் டென்ட் போட்டு ஷோக்கள் நடத்துவார்கள்: கழைக் கூத்தாடிகள் தெருவுக்குத் தெரு சர்க்கஸ் வித்தைகள் காட்டுவார்கள். ஏராளமான மக்கள் கூடிப் பார்த்து ரசிப்பார்கள். டாலர்களை அள்ளி வீசுவார்கள். இதனால், சர்க்கஸ்காரர்களுக்கும், கழைக்கூத்தாடிகளுக்கும் நல்ல வருமானமும், மக்களிடையே மதிப்பும் இருந்தது.
சூப்பர் ஸ்டார்கை லாலிபெர்ட்டே (Guy Laliberte) என்னும் சிறுவனுக்கு சர்க்கஸில் பயங்கர ஈடுபாடு. தன் பள்ளி நாட்களிலேயே ஒரு கழைக் கூத்தாடிகள் கம்பெனியில் சேர்ந்தான். சகலகலா வல்லவன் ஆனான். அக்கார்டியன் (Accordion) என்னும் இசைக்கருவியைப் பிரமாதமாக வாசிப்பான். இரண்டு கால்களிலும் நீளமான மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு நடப்பான், வாயில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து, அந்த நெருப்பை ஸ்டைலாக ஊதுவான். விரைவில், கனடா நாட்டு சர்க்கஸ் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனான்.
1980 - களில், நம் ஊரைப்போலவே, கனடாவிலும் மக்களின் ரசனை மாறத் தொடங்கியது. கழைக்கூத்தாடிகளின் ஷோ, சர்க்கஸ் ஆகியவற்றைப் பார்த்த ஆண், பெண். குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ் ஆகிய மாற்றுப் பொழுது போக்குகளுக்கு மாறிவிட்டார்கள்.
சர்க்கஸ் கம்பெனிகள் மூடல்
சர்க்கஸ் கம்பெனிகளில் ஏராள மானோரால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை. பிஸினஸை மூடினார்கள். இருந்தவர்களுக்குள், போட்டி கடுமையானது. எதிராளியை ஜெயிக்கப் பல யுக்திகளைக் கையாண்டார்கள். சர்க்கஸ் நடத்தும் டென்ட்களை அதிகச் செலவில் ஜோடித்தார்கள். மக்களை ஈர்க்கும் அம்சமான ஜோக்கர்களின் காமெடியை அதிகமாக்கினார்கள். டிக்கெட் விலையைக் குறைத்தார்கள். ஏற்கெனவே சரிந்துகொண்டிருந்த வருமானம் இன்னும் குறைந்தது. பெரிய நிறுவனங்களே தள்ளாடும் போது, கழைக் கூத்தாடிகள் வறுமையின் எல்லைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டனர்.
லாலிபெர்ட்டேக்கு வேலை போனது. வேறு குழுக்களில் வேலை தேடினார். தொழிலே நொடிக்கும்போது யார் வேலை தருவார்கள்? எல்லாக் கதவுகளும் மூடிவிட்டன. லாலிபெர்ட்டேக்குத் தெரிந்த ஒரே வேலை சர்க்கஸ்தான். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
காரணம் என்ன?
சர்க்கஸ் தொழிலின் சரிவுக்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ச்சியே செய்தார். சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம் மிருக விளையாட்டுக்கள், வீர தீர ஆட்டங்கள், கோமாளிகளின் காமெடி. 1980 வரை சர்க்கஸ் கம்பெனிகளும், கழைக் கூத்தாடிகளும் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தார்கள். ஆகவே, பிசினஸ் லாபகரமாக நடந்தது.
1980-களில், தொலைக்காட்சியும், கம்ப்யூட்டரும் இந்தப் பின்புலத்தை முழுமையாக மாற்றிவிட்டன. அன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் சோப் ஆப்பராக்கள் (Soap Operas) என்று அழைக்கப்பட்டன. இவற்றை மக்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தார்கள். அதாவது, மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பு கதைகளை மையமாகக்கொண்ட பொழுதுபோக்கு.
மாற்று யோசனை
குழந்தைகள் மட்டுமல்லாமல், முழுக் குடும்பமும் பார்ப்பதாகத் தன் ஷோ அமையவேண்டும். என்ன செய்யலாம்? லாலிபெர்ட்டே மூளையில் இப்போது வெட்டியது ஒரு மின்னல். சாதாரணமாக சர்க்க்கஸில், டரப்பீஸ், மிருக விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் காமெடி, மாஜிக் காட்சிகள் போன்ற பல ஐட்டங்கள் இருக்கும். ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் சம்பந்தம் இருக்காது.
சர்க்கஸ் காட்சிகளோடு, ஜனரஞ் சகமான தொலைக்காட்சி சீரியல்களைக் கலந்தால்....விளையாட்டு வீரர்கள், கோமாளிகள் பங்கெடுக்கும் சீரியலின் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு என்று சர்க்கஸ் பற்றிய புதிய பொசிஷனிங்கை மக்கள் மனங்களில் உருவாக்கினால்.....
1985-ம் ஆண்டில் லாலிபெர்ட்டே தன் கனவை நனவாக்கினார். Cirque du Soleil (பிரெஞ்ச் வார்த்தை. சூரிய சர்க்கஸ் என்று அர்த்தம்.) என்னும் சர்க்கஸ் கம்பெனி தொடங்கினார். தன் சர்க்கஸ் காட்சிகளை வலுவான கதையமைப்புக்கொண்ட நாடகங்களாக உருவாக்கினார். சர்க்கஸ் விளையாட்டுக்கள் இந்த நாடகங்களில் நடக்கும் சம்பவங்களாக வரும். கோமாளிகளின் ஜோக்குகளும் கதையோடு ஒன்றியவையாக இருக்கும்.
9 கோடி ரசிகர்கள்
லாலிபெர்ட்டேயின் சர்க்கஸ் கம்பெனி தொடங்கி 30 வருடங்களாகிவிட்டன. இன்று 40 நாடுகளைச் சேர்ந்த 5020 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
கடந்த முப்பது வருடங்களில், அன்டார்ட்டிக்கா தவிர்த்த அத்தனை கண்டங்களிலும், 271 நகரங்களில் இதுவரை நடந்த ஷோக்களை ரசித்திருப்பவர்கள் 9 கோடி பேருக்கும் மேல். வருட வருமானம் 850 மில்லியன் டாலர்கள். லாலிபெர்ட்டேயின் தனிப்பட்ட சொத்து 1800 மில்லியன் டாலர்கள்.
வெற்றி இலக்கணம்
உலகத்தில் இருக்கும் எல்லா சர்க்கஸ் கம்பெனிகளும் நஷ்டத்தில் தள்ளாடும்போது, லாலிபெர்ட்டே மட்டும் ஜெயித்தது எப்படி? சர்க்கஸ் என்றால், கலைஞர்கள், மிருகங்கள் விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் ஆகியவைதாம் என்று நம் எல்லோர் மனங்களிலும் ஒரு பிம்பம் படிந்தி ருக்கிறது. சர்க்கஸ் கம்பெனிகளும், இந்த பிம்பத்தை உடைக்கத் துணிச்சல் இல்லாமல், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுகிறார்கள். லாலிபெர்ட்டே, சர்க்கஸ் என்னும், பிஸினஸின் இலக் கணத்தையே உடைத்தார். புதிய பொசிஷனிங் கண்டார். தேடி வந்தது வரலாறு காணாத வெற்றி!
slvmoorthy@gmail.com
No comments:
Post a Comment