Saturday, April 11, 2015

சி.பி.சி.ஐ.டி. மீது நம்பிக்கை

இப்போதெல்லாம் எந்த கொலையோ, கொள்ளையோ நடந்தாலும், உடனடியாக மக்கள் சி.பி.ஐ. விசாரணைவேண்டும் என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக ஒரு குற்றம் நடந்தால், மாநில போலீசார்தான் விசாரிப்பார்கள். சற்று கொந்தளிப்பை ஏற்படுத்திய குற்றம் என்றால், உடனடியாக மாநில அரசு நாங்கள் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுகிறோம் என்று கூறுவது வழக்கம். சில நேரங்களில் அதிலும் மக்கள் திருப்தியடையாமல், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படி உணர்வு ஏற்படுவது நல்லதல்ல.

ஆனால், சி.பி.சி.ஐ.டி.யும் எல்லா வழக்குகளையும் புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் சமூகஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சி.பி.சி.ஐ.டி.யில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற கேள்விகளை குறிப்பிட்டு, அதோடு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் பல முக்கியமான வழக்குகளைப்பற்றியும் கேட்டிருந்தார். ஆனால், சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஒரேவரியில், தகவல்களை அளிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி முடித்துவிட்டார்கள். பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் வழக்குகளுக்குள் செல்லாமல் பொதுவான விவரங்களை அளிக்க ஒரு கட்டாயம் இருக்கவேண்டும். இதற்கு அடுத்தநாள், ஐகோர்ட்டு மதுரை கிளையில் வந்த ஒரு வழக்குத்தான், எல்லோரையும் மனக்குறைக்கு ஆளாக்கியுள்ளது.

விருதுநகரில் 2005–ம் ஆண்டு நடந்த ஓய்வுபெற்ற வருமானவரித்துறை ஆணையர் எபநேசர் பால், அவர் மனைவி ஷீலா கொலை வழக்கில் குற்றவாளிகளின் கைரேகை கிடைத்தபிறகும், 9 அதிகாரிகள் புலன்விசாரணை செய்த நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சி.பி.ஐ. விசாரணைக்கோரி வழக்கு போடப்பட்டு இருந்தது. நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி.யின் பணி அளவை கருத்தில்கொண்டால், மேலும் பல அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள் என்று சூப்பிரண்டு அன்பு தெரிவித்த கருத்தும், தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பும் நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியதாகும்.

சி.பி.சி.ஐ.டி. முதன்மையான புலன்விசாரணை அமைப்பாகும். மக்கள் சி.பி.சி.ஐ.டி. மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வேகமான புலன்விசாரணை முடிந்து, நீதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், அவர்களாலேயே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தங்கள் குறைகளை தீர்க்க மக்கள் எங்கே போவார்கள்? என்றுதான் எனக்கு தெரியவில்லை. சமீபகாலமாக பல வழக்குகளில், பொதுமக்கள் சி.பி.ஐ. விசாரணைவேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த உணர்வு இப்படி வளர்வது தமிழக போலீசுக்கு நல்லதல்ல என்று கூறிய நீதிபதி எஸ்.நாகமுத்து, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து இந்த வழக்கை மீண்டும் விரைவாக புலன்விசாரணை செய்யவேண்டும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளார். ஆக, இந்த நிலையில், உடனடியாக சி.பி.சி.ஐ.டி.யின் உள்கட்டமைப்பு வசதிகளும், திறமைவாய்ந்த அதிகாரிகள், போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, இந்த படையை வலுப்படுத்தவேண்டும். இதுபோல, ஐகோர்ட்டு நீதிபதி குறைகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு இல்லாமல், தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இனி எந்த வழக்கும் புலன்விசாரணை செய்யமுடியாமல், குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டது என்ற நிலையை உருவாக்கிவிடாமல், ஒவ்வொரு வழக்கும் எவ்வளவு நாட்களுக்குள் கண்டுபிடிக்கவேண்டும் என்ற காலக்கெடுவை நிர்ணயிக்கவேண்டும். தமிழக போலீசார், ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் என்ற பெயரை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...