சென்னையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கால் லிட்டர் (250 மி.லி) அளவு கொண்ட பாக்கெட் பால் வியாழக்கிழமை முதல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 26.50 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11.67 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றில் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 7.5 லட்சம் லிட்டரும், மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் 4.17 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.
தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலை, தரமான முறையில் கிடைக்கும் என்பதால் ஆவின் பாலை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
சந்தையில் தற்போது 4 வகையான பாலில், 500, 1,000 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
பிப்ரவரியில் அறிமுகம்: இந்த வரிசையில், நிகழாண்டில் பிப்ரவரியில் பொதுமக்கள் வசதிக்காக 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. ஆவின் நிறுவனம், சென்னை மாநகரில் ஒவ்வொரு பகுதியாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனையை விரிவுப்படுத்தி வந்தது.
இதுகுறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிலைப்படுத்தப்பட்ட பால் வகையில் (பச்சை நிறம்) 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் முதல் கட்டமாக ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை போன்ற வடசென்னைக்கு உள்பட்ட பகுதிகளிலும், வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர், விருகம்பாக்கம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் 2-ஆவது கட்டமாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை விரிவுபடுத்தப்பட்டது.
பரிசோதனை முயற்சியாக, நாளொன்றுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு பாக்கெட்டின் விற்பனை விலை ரூ.11 ஆகும். இதற்கு நுகர்வோர் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகையால் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் சென்னை மாநகரிலுள்ள ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகங்களில் 250 மி.லிட்டர் கொள்ளளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தற்போது வியாழக்கிழமை முதல் சென்னை மாநகரில் உள்ள அனைத்து சில்லறை விற்பனைக் கடைகளிலும், முகவர்கள் வாயிலாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம் நுகர்வோர் சிரமமின்றி அனைத்து இடங்களிலும் கால் லிட்டர் பாக்கெட் பாலை பெறலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment