லண்டனில் எம்.எஸ் படித்துவிட்டு அங்கேயே கணினிப் பொறியாளராக வேலை பார்த்துவந்த விவசாயியின் மகன், சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வெள்ளரி சாகுபடியில் சாதித்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது உடுக்கம்பாளையம் கிராமம். நகரத்து வாகனங்களின் இரைச்சல் இல்லாத இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகவேல். இவருடைய மூத்த மகன் எஸ். செல்வா பழனியில் பொறியியல் படித்துவிட்டு, லண்டனில் எம்.எஸ். படிப்பில் சேர்ந்தார்.
பிறகு அங்கேயே கணினிப் பொறியாளர் ஆனார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிறு வயது முதல் பார்த்துப் பார்த்து வளர்ந்த மண்ணின் மீது கொண்ட நேசம் காரணமாக வேலையை உதறிவிட்டுத் தாய்நாடு திரும்பினார். தற்போது உடுக்கம்பாளையத்தல் வெள்ளரி சாகுபடி செய்துவரும் அவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
மண் பாசம்
"சில மாதங்களுக்கு முன் லண்டனில் இருந்து திரும்பி, விவசாயம் செய்ய விரும்பு கிறேன் எனப் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத் துள்ளது. விவசாயத்தைப் பற்றி உனக்குத் தெரியாது.
அதனால் விவசாயம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என்று சொன்னார்கள். குறைந்தபட்சம் திருமணம் வரையிலாவது வெளிநாட்டு வேலையில் இருக்குமாறு சொன்னார்கள். நான் என்னுடைய முடிவில் தீர்மானமாக இருந்தேன். அடுத்து என்ன விவசாயம் செய்வது என்று யோசித்தேன்.
அப்பாவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வேளாண் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தேன். அவர்களுடைய ஆலோசனைக்கு ஏற்பப் பசுங்குடில் அமைத்து வெள்ளரி விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். எங்களுடைய தென்னந் தோப்புக்குள் 25 சென்ட் பரப்பளவில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி, நிலத்தைச் சமன் செய்தேன்.
அதில் ரூ. 10 லட்சம் செலவில், புற ஊதாக் கதிர்களைத் தாங்கி சமன் செய்யும் பாலி எத்திலீன் பொருளைக் கொண்டு 2,500 சதுர அடி பரப்பளவில் கூடாரம் அமைத்து, கலப்பின வெள்ளரி ரகம் சாகுபடி செய்துள்ளேன்.
மானியத்தில் மாற்றம்
இதில் 40 நாட்கள் தொடங்கி 120 நாட்கள்வரை 12 டன் விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். முழுவதும் ரசாயன உரமாக இல்லாமல், 50 சதவீதம் இயற்கை உரம் கலந்து பயன்படுத்தி யுள்ளேன். தோட்டக்கலைத் துறை மூலம் பசுங்குடில்களுக்கு 50 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது.
அதேநேரம் பசுங்குடிலைச் சொந்தச் செலவில் செய்து முடிக்க வேண்டும். முதல் அறுவடைக்குப் பின்புதான் மானியம் வழங்கப்படும் என்று தற்போதுள்ள நிலையை மாற்றி, ஒவ்வொரு கட்டமாக மானியத்தை அரசு வழங்கினால், என்னைப் போலவே பலரும் விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டுவார்கள்" என்கிறார் இளம் விவசாயி செல்வா.
எதிர்காலத்தில் அதே கூடாரத்தில் பலவேறு காய்கறி வகைகளைச் சாகுபடி செய்யவும், அவற்றை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
விவசாயி செல்வா தொடர்புக்கு: 9698443675
No comments:
Post a Comment