Monday, July 6, 2015

இணையதளத்தில் கட்டண விவரங்கள் பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு

புதுடில்லி:பல்கலைக்கழகங்களில் சேர விரும்புவோருக்கு, பயன்படும் வகையில், அவற்றின் இணையதளங்களில், விரிவான கட்டண விவரம், பிற செலவுகள், சேர்க்கை நடைமுறை போன்ற தகவல்களை வெளியிடுமாறு, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள், அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லுாரிகள், பல தகவல்களை மறைப்பதாகவும், கட்டண விவரம் தொடர்பாக, மாணவர்களின் பெற்றோருக்கு தவறான தகவல்களை அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டி, சமீபகாலமாக எண்ணற்ற புகார்கள் குவியத் துவங்கி உள்ளன. இதையடுத்து, அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கு, யு.ஜி.சி., அனுப்பியுள்ள கடித விவரம்:




பல்கலைக்கழகங்கள், பயிற்றுவிக்கும் ஒவ்வொரு படிப்புக்கும் பெறப்படும் கட்டணம், நிறுவன மேம்பாட்டு கட்டணம் உள்ளிட்ட பிற கட்டண விவரங்கள் மற்றும் சேர்க்கை நடைமுறை விவரங்களை, இணைய தளங்களில் வெளியிட வேண்டும். பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் செயல்படும் கல்லுாரிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும், அவற்றில் சேர விரும்பும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இணையதளங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்.




மேலும், கல்லுாரி, பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்கள், கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி திறன், படிப்புகளை முடித்து செல்லும் மாணவர்கள், வேலைகளில் சேர்ந்தது தொடர்பான விவரங்கள் போன்றவற்றையும், இணைய தளங்களில் வெளியிட வேண்டும்.




இந்த உத்தரவை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 15 நாளில், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, யு.ஜி.சி., அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024