Saturday, May 5, 2018

தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்றினோம்? சிபிஎஸ்இ பதில்
 
விகடன் 23 hrs ago




தமிழ்நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் நீட் (NEET) தேர்வு எழுதுபவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ.

இந்தத் தகவலை நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் 82,272 பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். இந்த ஆண்டு 10 சதவிகிதம் மட்டுமே அதாவது, 90,000 மாணவர்கள் மட்டும் நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தோம். இதற்காக 170 தேர்வு மையங்களை ஏற்படுத்தி இருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட 25,206 பேருக்குக் கூடுதலாக தமிழ்நாட்டில் தேர்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இது கடந்த ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 09.04.2018. ஆனால், உச்சநீதிமன்றம் ஆதார் இல்லாத மாணவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நான்கு நாட்களை நீட்டித்தது. இதனால் எங்களுக்கு முன்னேற்பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் குறைந்தது. இதனால் தமிழ்நாட்டில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த முடியவில்லை. நீண்ட தூரத்தில் உள்ள ராஜஸ்தானில் நாங்களாகத் தேர்வு மையத்தை ஒதுக்கவில்லை. மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்க முடியும். நாங்களாக எந்த மையத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. கணினி வழியாகவே எல்லா மையங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே 8 முதல் 10 சதவிகித கூடுதல் இடங்களுடன் இந்த ஆண்டுக்கான தேர்வு மையங்களை அமைக்க முடிவு செய்தோம். இதில் தேர்வு மையத்தின் உள்கட்டமைப்பு, போதுமான தேர்வு அறைகள், தேர்வு பணிக்கான ஆசிரியர்கள், சுற்றுச்சுவர் உள்ள பள்ளியின் அமைப்பு, போதுமான இருக்கைகள் என எல்லாவற்றையும் கணக்கீட்டுத்தான் மையத்தை ஏற்படுத்தி உள்ளோம். இதற்காக வரிசை எண், தேர்வுத்தாள் என அனைத்தையும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு அனுப்பி விட்டோம்.

இந்த ஆண்டு கால்நடை அறிவியல், மீன்வளம், சித்தா, ஹோமியோபதி எனப் பிற படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மாற்றி இருப்பதால் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களும் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள தேர்வு மையமாக எர்ணாகுளத்துக்கு மாற்றி உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது சி.பி.எஸ் இ.

நீதிமன்றத்துக்குத் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களில் மையங்களை அமைத்துள்ளோம். இதில் சென்னையில் 49 மையங்களில் 33,842 மாணவர்கள், கோவையில் 32 மையங்களில் 15,960 மாணவர்கள், மதுரையில் 20 மையங்களில் 11,800 பேர், நாமக்கல்லில் 07 மையங்களில் 5,560 பேர், சேலத்தில் 26 மையங்களில் 17,461 பேர், திருச்சியில் 12 மையங்களில் 9,420 பேர், திருநெல்வேலியில் 10 மையத்தில் 4,383 பேர், வேலூரில் 14 மையத்தில் 9,054 பேர் என மொத்தமாக 170 மையங்களில் 1,07,480 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுத உள்ளனர் என்று சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.

கடைசி வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதுகின்றனர் என்ற விவரத்தை மட்டும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...