Monday, May 14, 2018

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 25 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் : நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற தேவஸ்தானம் வேண்டுகோள்

2018-05-14@ 00:58:35



திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட நேரத்தில் கோயிலுக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் நேரம் ஒதுக்கீடு திட்டம்’’ கடந்த 2ம்தேதி முதல் முழு அளவில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 88 ஆயிரத்து 102 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை காண்பித்து டிக்கெட் பெற்ற 16 ஆயிரத்து 844 பக்தர்கள் 2மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால், தரிசனத்திற்கு 25 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். ரூ.300 மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் நேற்றுமுன்தினம் இரவு தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோயில் எதிரிலும் வெட்ட வெளியிலும் படுத்து உறங்கினர். எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்காமல் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024