Thursday, May 3, 2018

2500 டிகிரி வெப்ப கார் இன்ஜின்... தன்னை எப்படி குளிர்விக்கிறது தெரியுமா?

ராகுல் சிவகுரு  03.05.2018







வெயிலின் வெப்பம், நம்மை வதைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வெப்பம் போதாதென மேலும் வெப்பத்தை உருவாக்கி, உற்சாகப் பிரவாகத்துடன் ஒன்று இயங்கிவருகிறது என்றால், அதுதான் இன்ஜின்! ஆம், பெட்ரோல்/டீசலை எரியூட்டுவதால் உண்டாகும் வெப்பத்தால்தான் வாகனம் முன்னோக்கிச் செல்வதற்கான உந்துசக்தி கிடைக்கிறது. ஆனால், முன்னே சொன்ன நிகழ்வால் உற்பத்தியாகும் வெப்பத்தில் 30 சதவிகிதம் மட்டுமே இன்ஜின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறது. மீதம் அனைத்தும் வீணாகிறது என்றாலும், அது இன்ஜினிலிருந்து வெளியே செல்லும் வழியெங்கும் இருக்கும் அனைத்தையும் வெப்பமயமாக்கிவிடும் தன்மையைக்கொண்டுள்ளது. இது சரியாகக் கவனிக்கப்படாவிட்டால், அது இன்ஜின் பாகங்களை உருக்கி, உச்சபட்சமாக Engine Seize ஆவதில் முடிவடையும்.



ஏனெனில், Power Stroke சுழற்சியின்போது இன்ஜின் அதிகபட்சமாக 2500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் இயங்கும் என்பதால், இன்ஜின் பாகங்களைக் குளிர்வித்தல் என்பது இன்ஜினின் நீடித்த ஆயுளுக்கு மிகவும் அவசியம். ஆனால், மனிதர்களைப்போலவே இன்ஜினும் குறிப்பிடத்தக்க வெப்பநிலையில் சிறப்பான பர்ஃபாமென்ஸைத் தரவல்லது. இன்ஜின் குறைவான வெப்பநிலையில் இருந்தால், பெட்ரோல்/டீசல் எரியூட்டப்படுவது சீராக இருக்காது. இந்நேரத்தில் இன்ஜின் ஆயிலும் தடிமனாக இருக்கும் என்பதால், அது Power Loss-க்கு வழிவகுக்கும். ஒருவேளை இன்ஜின் அதிகபட்ச வெப்பநிலையில் இருந்தால், பெட்ரோல்/டீசல் தானாகவே எரியூட்டப்படும் என்பதுடன், இன்ஜின் ஆயிலும் தனது மசகுத்தன்மையை இழந்திருக்கும். எனவே, இன்ஜின் பாகங்கள் செயல் இழப்பதற்கான சாத்தியங்கள் இங்கே அதிகம்.



ஒரு இன்ஜினின் கூலிங் அமைப்பின் பணி என்பது, இன்ஜினை அதன் சரியான வெப்பநிலையில் தொடர்ந்து இயங்கவைப்பதே. ஏர் கூல்டு மற்றும் லிக்விட் கூல்டு ஆகியவை, Engine கூலிங் முறையின் வகைகள். ஏர் கூலிங், மிகவும் எளிமையான வழிமுறை. இதில் எதிர் திசையில் வரும் காற்று, இன்ஜினைத் தாண்டிச் செல்லும். அப்போது Engine வெளியிடும் வெப்பத்தைத் தன்னகத்தே இழுத்துச் செல்வதால், இன்ஜினின் வெப்பநிலை தொடர்ந்து சம விகிதத்தில் இருக்கும். இந்த வகை இன்ஜின்களின் பாகங்களில், இதற்காக Fins இருக்கும். அவை Engine பாகங்களில் காற்று படர்வதை உறுதிசெய்யும். இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்ப்ளெண்டர், ஷைன் ஆகிய டூ-வீலர்கள், இந்த Natural ஏர் கூலிங் பாணியைத்தான் பின்பற்றுகின்றன.



இதுவே ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்களில், Engine பகுதி, பாடி பேனல்களால் சூழப்பட்டிருக்கும். இதற்கான தீர்வாக, இன்ஜினுக்குக் குளிர்ந்த காற்றை வழங்கும் பொருட்டு, சிறிய ஃபேன் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். இதன் பெயர்தான் 'Forced ஏர் கூலிங்'. இதுவே பம்ப்பின் உதவியுடன், இன்ஜினின் மேல் பகுதியைச் சுற்றி திரவம் ஒன்று படரும். அது தண்ணீராகவோ, அடிட்டீவ்களுடன்கூடிய கூலன்ட்டாகவும் இருக்கலாம். பழைமையான லிக்விட் கூல்டு இன்ஜின்களில் தண்ணீர்தான் பயன்படுத்தப்பட்டது. சமீபத்திய பவர்ஃபுல் லிக்விட் கூல்டு இன்ஜின்களில், கூலன்ட்தான் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அவை Engine பாகங்கள் துருப்படுவதைத் தவிர்ப்பதுடன், குளிர்க்காலங்களில் சீரான Engine இயக்கத்துக்கும் துணை நிற்பதே இதற்கான காரணம்.



பம்ப்பின் பணி என்பது, கூலன்ட்டை Engine பாகங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவதுடன், கூலன்ட்டின் வெப்பநிலையை 80 டிகிரி செல்சியஸ் முதல் 90 டிகிரி செல்சியஸ் வரை தக்கவைப்பதே ஆகும். எப்படி ஏர் கூல்டு இன்ஜின்களில் Fins இருந்ததோ, லிக்விட் கூல்டு இன்ஜின்களில் Jackets இருக்கின்றன. இதனுடன் டியூப்களுடன்கூடிய பெரிய Fin அமைப்பு இடம்பெற்றிருக்கும். இது முன்னோக்கிச் செல்லும்போது எதிர்வரும் காற்றை உள்வாங்கிக்கொண்டு, கூலன்ட்டின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். அதில் கூடுதலாக இருக்கும் ஃபேன், ThermoStat உதவியுடன் இன்ஜினின் வெப்பநிலையை அறிந்து, தானாகச் செயல்பட்டு கூலன்ட்டைக் குளிர்விக்கும். இதுதான் ரேடியேட்டரின் பணி. கேடிஎம் டியூக் மற்றும் பஜாஜ் பல்ஸர் NS200 ஆகிய பைக்குகளில் இந்த பாணி கூலிங் அமைப்பைப் பார்க்கலாம்.







லிக்விட் கூலிங் அமைப்பின் விலை அதிகம் என்பதால், இதற்கான மாற்றாக வந்தவைதான் ஆயில் கூலர்கள். இவை இன்ஜினுக்குள் இருக்கும் ஆயிலை, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றின் உதவியுடன் குளிர்வித்து, Engine ஆயிலின் மசகுத்தன்மை குறையாமல் பார்த்துக்கொள்ளும். இது ஏர் கூலிங் செட்-அப்புடன் இணைந்தே செயல்படும் என்பது ப்ளஸ். பஜாஜ் பல்ஸர் 220 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 பைக்கை உதாரணங்களாகச் சொல்லலாம்.

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...