Thursday, May 17, 2018

நலம், நலமறிய ஆவல் 34: சப்பாத்தி சாப்பிட்டால் அலர்ஜியா?

Published : 12 May 2018 11:50 IST


டாக்டர் கு. கணேசன்

 


எனக்கு வயது 38. வியாபாரம் செய்கிறேன். தினமும் ஒரு ஊரில் சாப்பிடுகிறேன். வெளி மாநிலங்களிலும் சுற்றுவேன். பெரும்பாலும் சப்பாத்திதான் சாப்பிடுகிறேன். சாப்பிட்டதும் வயிறு வலிக்கிறது. வாயு சேர்ந்து வயிறு உப்புகிறது. வயிற்றைக் கலக்குகிறது. மலம் சென்றுவிடுகிறது. மீண்டும் பசிக்கிறது. களைப்பாகவும் உணர்கிறேன். அல்சராக இருக்கும் என்று பல மருந்துகள் சாப்பிட்டும் பலனில்லை. என்னுடைய பிரச்சினைக்கு என்ன காரணமாக இருக்கும், டாக்டர்? நான் என்ன செய்ய வேண்டும்? என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்?

உங்களுக்கு இரைப்பையில் புண் இருப்பதோடு, உணவு ஒவ்வாமையும் இருக்க வாய்ப்புள்ளது. சப்பாத்தி சாப்பிடும்போது உங்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படுவதாக இருந்தால், குளூட்டன் ஒவ்வாமை இருக்கலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொதுவான உணவு வகைகளில் கோதுமை ஒரு முக்கியமான தானியம். இதில் ‘குளுட்டன்’ (Gluten) எனும் புரதம் இருக்கிறது. இதுதான் பலருக்கு வில்லனாகி, குடல் - செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு ‘சிலியாக் நோய்’ (Coeliac Disease) என்று பெயர். இது ஒரு தன்தடுப்பாற்றல் நோய் (Auto immune disease). வம்சாவளியாக வருவது.

நோய் ஏற்படும் விதம்

குளுட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு அது உள்ள உணவைச் சாப்பிட்டதும், உணவுப் பாதையில் உள்ள ஐஜிஏ (IgA) எதிரணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன. இவை குளுட்டனைத் தம் எதிரியாகப் பாவித்துக் குடலை விட்டு விரட்டுகின்றன. இந்தப் போரில் குடலில் உள்ள குடல் உறிஞ்சிகள் (Villi) அழிக்கப்படுகின்றன. இப்படி, ஒவ்வொரு முறையும் குளுட்டன் உள்ள உணவை உண்ணும்போதும் இந்தப் போராட்டம் நிகழ்வதால், ஒரு கட்டத்தில் இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்னும் நிலை உருவாகிறது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சி ரத்தத்தில் சேர்ப்பதற்குக் குடல் உறிஞ்சிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்றபோது, உணவுச் சத்துகள் உறிஞ்சப்படாமல் மலத்தில் வெளியேறிவிடும். இதனால், சத்துக் குறைவு நோய்களும் செரிமானப் பிரச்சினைகளும் ஏற்படும்.

என்ன பரிசோதனை?

நீங்கள் சொல்லும் நோய் அறிகுறிகளை மட்டும் பரிசீலித்து, சிலியாக் நோய் உள்ளது என்று கணிப்பது மிகவும் சிரமம். காரணம், கிரான் நோய் (Chron’s disease), குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome - IBS) போன்ற மற்ற நோய்களின் அறிகுறிகளும் இவ்வாறே இருக்கும். இதனால், மருத்துவர்களுக்கே குழப்பம் உண்டாக்கும். ரத்தத்தில் ‘ஐஜிஏ எதிரணுக்கள் பரிசோதனை’ செய்து. இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றால், சிலியாக் நோய் உள்ளதை உறுதி செய்யலாம். குடலில் ‘பயாப்சி’ எடுத்துப் பரிசோதனை செய்தும் இதை உறுதிப்படுத்தலாம்.

‘கேப்சூல் எண்டாஸ்கோப்பி’ பரிசோதனையில் குடல் உட்சுவரின் தன்மையைப் பார்த்து, இந்த நோயைச் சரியாகக் கணிக்கலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு மரபணுப் பரிசோதனைகளும் வந்துள்ளன. DQ2, DQ8 எனும் மரபணுக்கள் (Genes) ரத்தத்தில் காணப்படுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது. நீங்கள் அனுபவம் நிறைந்த குடல் நல நிபுணரை நேரில் சந்தித்து, எண்டாஸ்கோப்பி மற்றும் மேற்சொன்ன பரிசோதனைகளை மேற்கொண்டு, உங்கள் பிரச்சினைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

என்ன சிகிச்சை?

உங்களுக்கு இருப்பது சிலியாக் நோய்தான் என்பது உறுதியானால், குளுட்டன் இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுவதுதான் இந்த நோய் வராமல் தடுக்கும் ஒரே வழி. காரணம், சிலியாக் நோய்க்கென்று தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. முக்கியமாக, கோதுமை, ஓட்ஸ், பார்லி உணவைத் தவிர்க்க வேண்டும். இரைப்பையில் புண் இருந்தால், அதற்கான சிகிச்சையும் உணவுமுறையில் மாற்றமும் தேவைப்படும்.

அரிசி மாவு, உருளைக்கிழங்கு மாவு, கடலை மாவு, சோயா மாவு, சோள மாவு, மக்காச்சோள மாவு, கம்பு மாவு, கேழ்வரகு மாவு, ஆரோரூட் மாவு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் உங்களுக்குப் பாதுகாப்பான உணவு வகைகள் என்று பொதுவாகச் சொல்லலாம். பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். காரம், புளிப்பு, மசாலா, எண்ணெய் குறைந்த உணவையே சாப்பிடுங்கள்.

இந்த நோயின்போது வைட்டமின்கள், தாதுக்களின் அளவும் உடலில் குறைவதால், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை, இரும்புச் சத்து மாத்திரை, கால்சியம், வைட்டமின்-டி மாத்திரை, துத்தநாகம், ஃபோலிக் அமிலம், தாமிரம் கலந்த சத்து மாத்திரைகளை மருத்துவரை ஆலோசித்துச் சாப்பிடுவதும் பலன் தரும்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...