Wednesday, May 16, 2018

சென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா?!
ரஞ்சித் ரூஸோ

vikatan   16.05.2018

கேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான மலையக மாவட்டமான வயநாடு, 34 டிகிரி அக்னி வெயில் கொளுத்தும் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை எப்போது சென்றாலும் இதன் செழிப்பைப் பார்க்கலாம், மேகக் கூட்டங்களோடு கைக்குலுக்கலாம், ஏலக்காய் முதல் ஏத்தம்பழம் வரை சுவைக்கலாம், அருவியில் குளிக்கலாம்... என்ஜாய் பண்ணலாம்.



உங்கள் வயநாடு ட்ரிப்பை முழுவதுமாக அனுபவிக்கச் சென்னையில் இருந்து பைக் ரைடு போவது சிறப்பானது. `எவ்வளவோ ரூட் இருக்கப்போ, நான் ஏன்டா பெங்களூர் வழியா பைக்ல போகணும்...' என விடிவி கணேஷ் குரலில் கேட்பது கேட்கிறது. காரணத்தை நீங்கள் ரைடு போனால்தான் உணர முடியும். ஒரு சின்ன பேக்பேக்கை எடுத்து அதில் 2 நாளுக்குத் தேவையானவற்றை மடித்துவைத்துக்கொண்டு கிளம்புங்கள். எந்த பைக்கில் வேண்டுமென்றாலும் ரைடு போகலாம். 200 cc-க்கு மேல் உள்ள பைக்கை தேர்ந்தெடுத்தால் ரைடு இன்னும் சிறப்பானதாக இருக்கும். ரைடிங் ஜேக்கட், பூட்ஸ், கிளவுஸ் அணிவது பாதுகாப்புக்கு மட்டுமல்ல பைக் ரைடில் களைப்பைக் குறைக்கும். நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் போவதால் DOT, ECE சான்றிதழ் ஹெல்மெட் பாதுகாப்பானது. மேற்சொன்ன விஷயங்கள் மிக முக்கியமானவை.



கூகுள் மேப் பேச்சை கேட்காதீர்கள். சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக வேலூர், ஆம்பூரை கடந்து பெங்களூருக்குள் நுழைந்த உடன் எலக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் மீது ஏறாமல் கீழே சென்றால் கனக்புரா சாலை வரும். அதன் வழியே கனக்புராவை கடந்து மைசூர் நைஸ் ரோடு வழியாகப் போகலாம். மைசூர் நைஸ் ரோடு எக்ஸ்பிரஸ்வேயில் பைக்கின் வேகத்தை அனுபவிக்கலாம். ஆனால், 100 முதல் 120 கி.மீ வேகத்தில் போவது நல்லது. அதற்கு மேல் போனால் இன்ஜின் அதிகமாகச் சூடாகும். பைக்கை அவ்வப்போது நிறுத்தவேண்டியிருக்கும். மாலை 3 மணிக்கு கிளம்பினால், 8 மணிக்கெல்லாம் பெங்களூரை அடைந்துவிடலாம். விடியற்காலையில் பெங்களூரில் இருந்து கிளம்பினால் பயணத்துக்கு சரியாக இருக்கும்.



கனக்புராவைத் தாண்டி அதே சாலையில் மாண்டியா வரை செல்லாமல் மத்துரு, மலவள்ளி, சாமராஜநகர் வழியாகப் பயணித்தால் பெட்ரோல் கொஞ்சம் மிச்சம்பிடிக்க முடியும். மலவள்ளியைத் தாண்டிவிட்டால் சாலை, விவசாய நிலங்கள், கிராமங்கள், மலைக் குன்றுகள், காவல் தெய்வங்கள் தவிர எதுவுமே இருக்காது. இன்னும் கமர்ஸியல் ஆக்கப்படாத இடங்கள் இவை. சில இடங்களில் அவ்வப்போது நின்று இளைப்பாறுவது நல்லது. பெங்களூரில் இருந்து இந்த வழியாக பயணித்தால் 5 முதல் 6 மணிநேரத்தில் பந்திபூரை அடைந்துவிடுவோம். புலி மற்றும் சிறுத்தைகள் வாழும்காடு பந்திபூர். அடர்த்தியாக மரங்கள் இருக்காது. பாதை வளைந்து நெளிந்து பாம்புகள் போல போகும். வளைவான பாதைகள் நெய் ஊற்றிச் செய்த லட்டுபோல. அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். லட்டில் திராட்சை வருவதுபோல, ஸ்பீடு பிரேக்கரும் இங்கு அதிகம். சில கிலோமீட்டர்களுக்கு ஒரு ஸ்பீடு பிரேக்கர் வரும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.



போகும் வழியில் மான்கள், புலித்தடங்கள், காட்டு யானை போன்றவற்றை பார்க்கலாம். பார்த்தால் இன்னும் த்ரில் கூடிவிடும். பந்திபூரை தாண்டியதும் முத்தங்கா வன உயிர்க் காப்பகம் உள்ளது. இதில் பாதுகாப்புடன் வனத்தில் சுற்றிவரலாம். வனத்துறையினர் ஏற்பாட்டில் யானைச் சவாரிகூட இங்கு உண்டு. முத்தங்காவை அடுத்து 30 நிமிட பயணத்தில் வயநாடு வந்துவிடும். சுல்தான் பத்தேரி, வயநாடு இரண்டு இடங்களிலும் தங்குவதற்கான வசதிகள் உண்டு. வயநாடு பாதை பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. வளைந்து வளைந்து பயணிப்பது செம த்ரில்லிங்காக இருக்கும்.



வயநாடு வருவதற்கு மாண்டியா, ஹன்சூர் வழியாக இன்னொரு பாதையும் உள்ளது. நம் பாதையைவிட அந்தப் பாதையின் தூரம் குறைவு. ஆனால், முழுவதும் நெடுஞ்சாலையில் மட்டுமே பயணிக்க வேண்டும். கர்நாடகாவின் செழுமையைப் பார்க்க குறைவான வாய்ப்புகளே இருக்கும். மோட்டல்கள் அதிகம் என்பதால் பொதுவான உணவுகளே இருக்கும் கர்நாடக கிராமங்களின் உணவுகளை ருசிக்கமுடியாது.



(நாகர்ஹோலே வழியாக வயநாடு போகும் பாதை)






மைசூருக்கு போகும் ஆசை இருந்தால் இந்தப் பாதை வழியாக போகலாம். இந்த வழியில் நாகர்ஹோலே தேசிய பூங்கா உள்ளது. இது பந்திபூர் போல் வளைந்து நெளிந்து போகும் பாதை அல்ல. அடர்த்தியான காடு, அமைதியான நேர் பாதை. இந்தப் பாதையில் பந்திபூரைவிட வாகனங்கள் குறைவு என்பதால் கார் டிரைவிங் அருமையாக இருக்கும். வயநாடை பார்த்துவிட்டு இன்னும் இரண்டு நாள் லீவ் எடுப்போம் என்று முடிவெடுத்துவிட்டால், இங்கிருந்து 100 கி.மீ தொலைவில் கோழிக்கோடு கடற்கரை உள்ளது. 60 கி.மீ தொலைவில் மசினகுடி உள்ளது. அருகிலேயே தெங்குமரஹடா காடு உள்ளது. தெங்குமரஹடாவுக்கு போக வனத்துறை அதிகாரிகளின் ஒப்புதல் வேண்டும். பந்திபூர், நாகர்ஹோலே இரண்டு காடுகளுக்குள்ளும் இரவு 10 மணிக்குமேல் அனுமதி கிடையாது. அதனால், அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டால் சரியான நேரத்தில் வயநாடு அடையலாம்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...