Monday, May 14, 2018

மாவட்ட செய்திகள்

சென்னை சேலையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்



சென்னை சேலையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்.

மே 14, 2018, 05:00 AM

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 10 நாட்களுக்கு முன் புதிததாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இங்குள்ள மதுபான பாரில் குடிக்க வருபவர்கள் அருகில் உள்ள வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் வம்பு செய்வது, வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த மதுக்கடையை மூடவேண்டும் என அப்பகுதியினர் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தங்களிடம் மதுக்கடை அமைக்க அனுமதி எதுவும் வாங்கவில்லை என்றும், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வாரவிடுமுறை நாட்கள் என்பதால் அதிகமானவர்கள் வந்து மது அருந்திவிட்டு குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பகல் 12 மணிக்கு மதுபான கடை திறந்ததும் கடைக்குள் புகுந்தனர்.

மதுபான கடைக்குள் கற்களையும் வீசி எறிந்தனர். பின்னர் மதுபான பாரில் மது அருந்த வந்தவர்களை விரட்டியடித்து அங்கிருந்த மேஜை, நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள். உணவு பொருட்களையும் தூக்கி எறிந்தனர். இதைக் கண்டதும் மதுக்கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டனர். பாரில் இருந்த ஊழியர்களும், மது அருந்த வந்தவர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த மதுக்கடையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024