Monday, May 14, 2018

கேரள மாணவிக்கு வலுக்கட்டாயமாக டி.சி!’ - பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை
 
விகடன் 12 hrs ago

 

கோவை பாரதியார் பல்கலைகழக, உளவியல் துறை தலைவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக, மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார்.

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை உளவியல் அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியில் தங்கி, தனது படிப்பை ஹரிதா தொடர்ந்து வந்தார். இந்நிலையில், தன்னைத் தகாத வார்த்தைகளில் திட்டி, வலுக்கட்டாயமாக டி.சி வாங்க வைத்ததாக துறைத் தலைவர் வேலாயுதம் மீது அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்துள்ளார் ஹரிதா.

இதுகுறித்து ஹரிதாவிடம் பேசினோம். "கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதையடுத்து,அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டோம். ஆனால்,மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்ததுடன், பிரேமா விடுதியையும் பூட்டிவிட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால், மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்தபோது, கதவை மூடிவிட்டனர். நாங்கள் எவ்வளவு முயற்சித்தும், கதவை திறக்கவில்லை. இரவு முழுவதும், நாங்கள் வெளியேதான் இருந்தோம். பின்னர், விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் எங்களது துறைத் தலைவர் வேலாயுதம் ஆகியோர் சக மாணவிகள் முன்னிலையில் வகுப்பறையில் என்னை அவமானப்படுத்தினர். குறிப்பாக, துறைத் தலைவர் வேலாயுதம், என்னை அவரது அறைக்கு அழைத்து சென்று, அறையினை பூட்டி, மிகவும் ஆபாசமாக தகாத வார்த்தைகளில் பேசினார். மேலும், வலுக்கட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து, பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார்" என்றார்.

இந்நிலையில், வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் ஆகியோரிடம் ஹரிதா புகார் அளித்தார். மேலும், கோவை வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, வடவள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஹரிதா புகார் அளித்துள்ள விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைகழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024