Thursday, May 17, 2018

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியீடு





சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

மே 17, 2018, 05:29 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் பட்டியலை அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், முறையாக தமிழக அரசின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா? என்றும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்யுமாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதன்குமாருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தங்களது பகுதியில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரும்பாலான நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடர் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஒருசில பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது தெரியவந்தது.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 107 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மட்டுமே அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், 112 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல்கள் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் உள்ள தகவல் பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் நகர்ப்புற உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகரில் அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி பள்ளிகள் எது? அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எது? தொடக்க அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எது? போன்ற விவரங்களை உதவி தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டினர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலங்களிலும் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு அங்கீகாரம் இல்லாத நர்சரி, பிரைமரி பள்ளிகள் அடங்கிய பட்டியல் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன்பு அந்த பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா? என தெரிந்து சேர்க்க வேண்டும். மேலும், அரசு விதிமுறைகளை பின்பற்றாத 35 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...