Thursday, May 17, 2018

சட்ட வல்லுனர்கள் ஆலோசனைக்கு பின் கவர்னர்... அழைப்பு : கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்பு : 15 நாட்களில் மெஜாரிட்டி நிரூபிக்க அவகாசம்

Updated : மே 17, 2018 00:25 | Added : மே 17, 2018 00:23




  பெங்களூரு: கர்நாடக தேர்தலில், அதிக இடங்களை பிடித்துள்ள, பா.ஜ.,வின் எடியூரப்பாவை, ஆட்சி அமைக்குமாறு, கவர்னர் வஜுபாய் வாலா, நேற்றிரவு அழைப்பு விடுத்தார். இன்று காலை, 9:00 மணிக்கு, கர்நாடகாவின், 27வது முதல்வராக பதவியேற்கிறார். இவருடன், நான்கு அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அவருக்கு, 15 நாட்களில் மெஜாரிட்டி நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், 15ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள, 222 தொகுதிகளில், 104ல் பா.ஜ.,வும், 78ல் காங்கிரசும், 37ல் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளன. மூன்றில், பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க, 112 எம்.எல்.ஏ., ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு பொறுப்பேற்பதில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே, பா.ஜ., ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, குமாரசாமி முதல்வராக பதவியேற்க, முழு ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. எனினும், காங்., கட்சியின் சட்டசபை தலைவர், இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ், எம்.எல்.ஏ.,க்கள் என, மொத்தம், 116 உறுப்பினர்களின் பலம் இருப்பதாக, கவர்னரிடம், குமாரசாமி கடிதம் அளித்துள்ளார். அதே சமயம், 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., அதன் சட்டசபை தலைவராக, எடியூரப்பாவை தேர்ந்தெடுத்துள்ளது.தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ., எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் உரிமை கோரியது.இதையறிந்த, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் முன் அணிவகுக்க, அனுமதி கோரினர். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்து, 10 பேரை மட்டுமே அனுமதித்தார். இதனால், ராஜ்பவன் முன், பா.ஜ.,வுக்கு எதிராக, இரு கட்சி தொண்டர்களும் கோஷம் எழுப்பினர். அவர்களை மிகவும் சிரமப்பட்டு, போலீசார் அப்புறப்படுத்தினர்.பின், கவர்னரை, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் சந்தித்தனர். 'தங்கள் கூட்டணிக்கு தான் முழு பெரும்பான்மை உள்ளது. இதன் சட்டசபை குழு தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தன்னை ஆட்சி அமைக்க, அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினர். இதற்கு பதிலளித்த கவர்னர், ''சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்தும், இது போன்ற நிலை, கோவா மாநிலத்தில் ஏற்பட்ட போது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்தும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கிறேன்,'' என, தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழகத்தில் நடந்த, 'கூவத்துார் பார்முலா'வை பின்பற்றி, நீச்சல் குளம், பார் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய, பிடதியிலுள்ள ஈகிள் டன் சொகுசு விடுதிக்கு, காங்., சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், சொகுசு பஸ்களில் நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.இதற்கிடையில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு வசந்த்நகரிலுள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில், இரண்டு நாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய மூன்று கட்சிகளுமே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், கவர்னர் வஜுபாய் வாலா, உச்சநீதிமன்ற மூத்த வக்கீல்கள் சோலி சொரப்பா, முகுல் ரோத்தகி ஆகியோருடன் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். நேற்றிரவு, 9:30 மணியளவில், பா.ஜ.,வை ஆட்சி அமைக்கும்படி அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு கவர்னர் வஜுபாய் வாலா எழுதிய அதிகாரபூர்வ கடிதம் வெளியானது. 15 நாட்களுக்குள், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வராக எடியூரப்பா, இன்று காலை 9:00 மணிக்கு பதவியேற்பதாக, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ் அறிவித்தார். இவருடன், ஈஸ்வரப்பா, அசோக், கோவிந்த் கார்ஜோல், ஸ்ரீராமுலு ஆகிய நான்கு அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ், ம.ஜ.த.,வினர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.

சுயேச்சையை தப்ப விட்ட ஈஸ்வரப்பா : முல்பாகல் சுயேச்சை எம்.எல்.ஏ., நாகேஷை, காங்கிரஸ் பிரமுகர் டி.கே.சிவகுமார், நேற்று முன்தினமே தன்னுடன் அழைத்து வந்தார். மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.,வான ராணிபென்னுாரின் சங்கரை, பா.ஜ.,வை சேர்ந்த மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, பெங்களூரு டாலர்ஸ் காலனியிலுள்ள எடியூரப்பா வீட்டுக்கு அழைத்து வந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தார். இதை அறிந்த, சங்கரின் மைத்துனர்களும், எம்.எல்.ஏ.,க்களுமான பைரதி பசவராஜ், பைரதி சுரேஷ் ஆகியோர், தொலைபேசியில் பேசி, உடனடியாக சித்தராமையா வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டனர். அங்கு வந்த சங்கரை, சித்தராமையா, தன் காரில் ஏற்றி கொண்டு, குயின்ஸ் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தார். சங்கரை தப்பிக்க விட்ட, ஈஸ்வரப்பாவை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக திட்டினார்.

ஆனந்த் சிங் வராததால் பரபரப்பு : காங்., - எம்.எல்.ஏ.,க்கள், ௭௮ பேரில், பல்லாரி விஜயநகராவை சேர்ந்த ஆனந்த் சிங் மட்டும் வரவில்லை. காலை முதல் மாலை வரை காத்திருந்தும் பயனில்லாமல் போனது. ரிசார்ட்டுக்கு செல்வதற்கு தயாரான நிலையில், அவர் வராததால் பதற்றம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கொண்டு முயற்சித்தும், தொடர்பில் கிடைக்கவில்லை. அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரித்த போது, விமானத்தில் பெங்களூரு வருவதாக அறிந்த காங்கிரஸ் தலைவர்கள், ஜமிர் அகமது கான், நாகேந்திரா ஆகியோர் சென்றனர். ஆனால், ஆனந்த் சிங் வராததால், திரும்பி வந்தனர். இவர், தேர்தலுக்கு முன், பா.ஜ.,விலிருந்து காங்கிரசுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...