Monday, May 14, 2018

கருந்துளை எல்லாவற்றையும் இழுக்கும்... வெளியே தள்ளும் வெண்துளை தெரியுமா?
மு.பிரசன்ன வெங்கடேஷ்   vikatan 09.05.2018

அண்டத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினால் நம் ஆயுள் போதாது. இவ்வண்டத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான். அந்த அளவிற்குக் கோடிக்கணக்கான விஷயங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது பேரண்டம். கருந்துளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றால், நல்லா தெரியுமே என்று பதில் வரும். அந்தளவுக்குச் சாமானியன் வரை கருந்துளையைக் கொண்டு சேர்த்திருக்கிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். சரி, வெண்துளையை (White hole) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? "என்ன ப்ரோ புது ஐட்டமா கேக்குறீங்க" என்கிறீர்களா? கருந்துளை, வெண்துளை எல்லாம் அண்ணன் தம்பிகளைப் போலத்தான்.

தன் அருகில் இருக்கும் எந்தவொரு பொருளையும் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்வதைத்தான் கருந்துளை என்கிறோம். கருந்துளையினுள் ஈர்க்கப்பட்ட பொருளால் மறுபடியும் வெளியேற முடியாது, அது ஒளியாக இருந்தாலும் சரி. அந்த அளவிற்கு வலிமையானது கருந்துளையின் ஈர்ப்புவிசை. இப்போது வெண்துளை என்பது கருந்துளையின் அப்படியே நேரெதிர். வெண்துளை தன்னுள் இருக்கும் பொருளை வெளியே கக்கிக் கொண்டே இருக்கும். வெளியில் இருக்கும் எந்தவொரு பொருளாலும் வெண்துளையினுள் செல்ல முடியாது. ஏனெனில் வெண்துளையின் வெளியேற்று திசைவேகம் அதிகமாக இருக்கும். ஆனால், வெண்துளை என்பது இன்றும் ஒரு கோட்பாடாக மட்டுமே உள்ளது. அது இவ்வண்டத்தில் உள்ளது என்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.



எனினும் வெண்துளைக்கான தேடுதல் வேட்டையும் ஆய்வுகளும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெண்துளை இருப்பதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். கண்டறிந்த கோட்பாட்டின் படியே வெண்துளையின் இயக்கம் வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) இரண்டாம் விதியினை சுக்கு நூறாக உடைக்கிறது. அதாவது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின்படி எந்த ஒரு பொருளின் இயல்பாற்றலும் (Entropy) அதிகரித்த வண்ணமே இருக்கும். ஆனால், வெண்துளையின் இயக்கப்படி அதன் அருகில் இருக்கும் பொருட்களுக்கு இயல்பாற்றல் குறைய வாய்ப்பிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டின்படி பார்த்தால் தெளிவாகப் புரியும். ஒரு பழத்தை இரண்டு வாரங்கள் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். இதுதான் பொதுவாக இயல்பாற்றல் அதிகரிப்பால் நடக்கும். அதே பழம் மீண்டும் கெட்டுப் போனதில் இருந்து நல்ல பழமாக மாறும் சாத்தியக்கூறுகள் உண்டா? உண்டு, அது இயல்பாற்றல் குறைந்தால் நடக்கும். ஆனால், அது பூமியில் நடக்காது. எனவே வெண்துளை, இயல்பாற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கானது மட்டுமே, மொத்த அண்டத்திற்குமானது அல்ல என உரைக்கிறது.

வெண்துளை எப்படி உருவாகின்றது?

வெண்துளை என்பது கருந்துளையின் அடுத்த கட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு நட்சத்திரம் தன் அந்திம காலத்தில் சூப்பர் நோவா என்னும் பெருவெடிப்பிற்கு உள்ளாகும் போது கருந்துளைகள் தோன்றுகின்றன. கருந்துளைக்கென்று தனியாக நிகழ்வு பரப்பெல்லை உண்டு. அவை தன் அருகில் இருக்கும் பொருட்ளை ஈர்ப்பதோடு நில்லாமல் அதீத ஈர்ப்புவிசை காரணமாக தன் பரப்பையும் சேர்த்து ஈர்க்கும். இதன் காரணமாக தன் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே வரும். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் சுருங்கமுடியாது என்ற நிலை வரும்போது அது ஒரு வெண்துளையின் பிறப்பிற்கு வழிவகுக்கிறது. அதுவரை தான் ஈர்த்த அத்தனை பொருட்களையும் வெண்துளையான பின் வெளியேற்றுகிறது. அப்படியே அது மாறினாலும் பல அடிப்படை இயற்பியல் கோட்பாடுகளின் மடியில் கைவைக்கியது இதன் இயக்கம். எப்படி இருந்தாலும் வெண்துளையை பற்றி கூறப்படும் அனைத்தும் அனுமானக் கோட்பாடுகளே.

கருந்துளை மற்றும் வெண்துளை இடையேயான பந்தம்

கருந்துளையையும் வெண்துளையையும் தனித்தனியாகப் பார்க்காமல் சேர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமான கோட்பாடுகள் கிடைக்கும். கருந்துளை அனைத்தையும் ஈர்த்துக்கொள்கிறது எனவே அதை நுழைவு வாயில் என்று வைத்துக் கொள்வோம், வெண்துளை அதனுள் இருக்கின்ற அனைத்தையும் வெளியேற்றுகிறது எனவே இதை வெளியேற்று வாயில் என வைத்துக் கொள்வோம். இதனை வைத்து கருந்துளையில் நுழைந்து வெண்துளையின் வழி வெளிவருவதன் மூலம் காலத்தையோ, தூரத்தையோ கடக்க முடிந்தால்? பால்வீதியில் உள்ள கருந்துளையில் நுழைந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலையில் அமைந்திருக்கும் வெண்துளையின் மூலம் வெளிவருவதால் தூரத்தையோ அல்லது இதே பால்வீதியில் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும் வெண்துளையில் இருந்து வெளிவருவதன் மூலம் நேரத்தையோ கடக்க முடிந்தால்? இந்த இடத்தில் நாம் கடப்பதற்கான ஆற்றலையும், பாதையையும் வார்ம் ஃஹோல் நமக்குத் தந்தால்? இவை அனைத்தும் அனுமானங்களே. வார்ம் ஃகோல் என்பது வெளியும்-நேரமும் கலந்த அமைப்பாக இருந்து வெவ்வேறு இரண்டு அண்டத்திலோ அல்லது நேரத்திலோ இருக்கும் கருந்துளை மற்றும் வெண்துளைக்கு பாலமாகச் செயல்படும். எனவே தான் அது பரவெளி 'அனுமான' இணைப்பு (Warm hole) என்று அழைக்கப்படுகிறது. இது மட்டும் சாத்தியமானால் நாம் மெட்ரோ ரயிலில் செல்வது போல் காலப்பயணம் செய்ய முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெண்துளையும், வார்ம் ஃகோலும் அனுமானமாக, கோட்பாடாக மட்டுமே உள்ளன. இன்னும் அவை இருப்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் தென்படவில்லை.

வெண்துளையும் பிங்பேங் தியரியும்:

எல்லா இடத்திலும் வெண்துளை என்பது வெறும் கோட்பாடு மட்டுமே. நிஜத்தில் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சொல்லப்பட்டு வந்தது. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க இதோ பிக்பேங் தியரி (இதுவும் அனுமானம் தான்). வெண்துளை என்பது கருந்துளை மேலும் சுருங்கமுடியாத நிலைக்குச் சென்றதும் வெடித்து உருவாவது என்று கூறப்பட்டது அல்லவா? பிக்பேங் தியரி என்பது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது இப்பேரண்டம். ஒருவேளை இப்பேரண்டமே ஒரு கருந்துளையால் ஈர்க்கப்பட்டு அது ஒரு கட்டத்திற்கு மேல் சுருங்க முடியாமல் வெண்துளையாக மாறி தன்னுள் ஈர்க்கப்பட்ட அனைத்தையும் வெளியேற்றியதையே நாம் பிக்பேங் என்று கூறுகிறோமோ? இது அனுமானமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருக்கிறதல்லவா?



இன்றுவரை வெண்துளை எங்காவது கண்டறியப்பட்டுள்ளதா?

2006 ஜூன் 14, நாசாவின் 'ஸ்விப்ட்' (Swift) செயற்கைக்கோள் ஒரு மிக வலிமையான சக்திவாய்ந்த காமா கதிர் வெடிப்பைப் பதிவு செய்கிறது. ஆனால் அது வந்த திசை அதிகமாக நட்சத்திரங்கள் இல்லாத ஒன்று. இது இதற்குமுன் கண்டறியப்பட்ட அல்லது நிகழ்ந்த எந்தவொரு நிகழ்வுடனும் ஒத்துப்போகவில்லை. இந்த நிகழ்வை 'ஜி.ஆர்.பி 060614' (GRB 060614) என்றழைக்கிறது நாசா. இதற்கு முன் பல காமா கதிர் வெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அவை எல்லாம் ஓரிண்டு நொடிகள் நிலைப்பதே அதிகம். ஆனால் இந்தக் காமா கதிர் வெடிப்பு 102 நொடிகள் வரை நிலைத்திருந்தது. அதோடு அதன் சக்தி நம் சூரியனை விட 'ட்ரில்லியன்' (Trillion) மடங்கு அதிகமாக இருந்தது. இது ஒரு சாதாரண நட்சத்திரப் பெருவெடிப்பால் இருந்து நிகழவில்லை. இது நாம் வெண்துளையினைப் பற்றிச் செய்து வைத்திருக்கும் அனுமானங்களோடு ஒத்துப் போகிறது. இது வெண்துளை இருக்கிறது என்று உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வலுசேர்க்கிறது.

வெண்துளையும், ஹாலிவுட்டும்

இருக்கா இல்லையானு நீங்க சண்ட போடுங்க, என வெண்துளையை தங்கள் படங்களில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் ஹாலிவுட்டார். இப்போது அல்ல 1980'களிலே. The Hitch Hiker's Guide to the Galaxy என்ற படத்தில் வேறு ஒரு உலகத்தில் வாழும் ஏலியன்கள். தங்கள் கிரகத்துக்கு அருகில் இருக்கும் வெண்துளையில் இருந்து வரும் பொருட்களை பயன்படுத்தியே தங்கள் உலகைக் கட்டமைக்கிறார்கள். Transformersல் கூட ஒரு எபிஸோடில் சில ட்ரான்ஸ்பார்மர் கேரக்டர்கள் கருந்துளையில் உள்ளே உள்ள ஒரு நெகடிவ் யுனிவர்சில் மாட்டிக் கொள்வார்கள். பின்னர், ஒரு வெண்துளையை கண்டறிந்து அதன் வழி மீண்டும் தங்கள் பழைய யுனிவர்சுக்கே வந்து சேர்வார்கள். 1979ல் வெளிவந்த The Black Hole என்ற படத்திலும் ஒரு 'ஸ்பேஸ் கிராஃப்ட்' கருந்துளையினால் உள்ளிழுக்கப்பட்டு வெண்துளையில் வழி வெளிவரும் ஆனால் அவர்கள் வேறொரு அண்டத்தில் இருப்பார்கள். இப்படி தங்கள் கற்பனைக் குதிரைகளை இஷ்டத்துக்குத் தட்டிவிட்டு படம் இயக்கியிருக்கின்றனர்.



வெறும் கோட்பாடுகளை வைத்து வெண்துளை இருக்கிறது என்று அடித்துக் கூற முடியாது, அதே நேரம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கருந்துளையும் ஒருநாள் கோட்பாடாகத்தான் இருந்தது. இன்று நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பல அறிவியல், மற்றும் புவியியல் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு காலத்தில் கோட்பாடாக இருந்தவைதான். அதை மறந்துவிட வேண்டாம்.

No comments:

Post a Comment

Asset details of government employees cannot be shielded from public: Madras HC

Asset details of government employees cannot be shielded from public: Madras HC These details, particularly the date of joining and superann...