Friday, May 11, 2018

  இரண்டாவது நாளாக திருச்சியில் வெளுத்துவாங்கிய மழை…! தடுமாறும் திருச்சி மாநகராட்சி
 
விகடன் 
 



திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாகக் கொட்டித்தீர்க்கும் மழையால் திருச்சி மக்கள் தத்தளிக்கிறார்கள்.

கோடைவெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாகவே அதிகமாகக் காணப்பட்டது. திருச்சியில் அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே வெயில் 104 டிகிரியை தாண்டியது. இதேபோல் பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் வெயில் கொளுத்தியது.

கடந்த 4 -ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் என்றதும் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என நினைத்திருந்தபோது, மெல்ல மழை பரவலாக பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக திருச்சி, கருர் பகுதிகளில் மேக மூட்டமாகக் காணப்பட்டது. இதனை அடுத்து திடீரென மழை கொட்டத்தொடங்கியது. நேற்று முந்தினம் மாலை 4 மணிக்குப் பிடித்த மழை, 5.30 மணிவரை வெளுத்துவாங்கியது. இடி, மின்னலுடன் கூடிய மழை என்பதாலும், காற்று வீசாததால் மழையின் அளவு கூடியது. இதனால், திருச்சி மாநகர வீதிகள் வெள்ளக்காடானது. குறிப்பாகப் பாலகரை, தென்னூர், புத்தூர், தில்லைநகர், திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கால்வாய்கள் நிரம்பி வழிந்தது. அதிலும் திருச்சி மேலபுதூர் ரயில்வே சுரங்க பாலத்தில் சுமார் 5 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீர் தேங்கியது.


அவ்வழியே சத்திரத்திலிருந்து பாலகரை, ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம் வழியாக எரங்குடி செல்லும் அரசு பேருந்து வந்தது. பேருந்தில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்தப் பேருந்து திருச்சி மேலபுதூர் ரயில்வே சுரங்க பாலத்தில் சென்றபோது, தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கியதால், பேருந்து திடீரென பழுதானது. அதில் இருந்த பயணிகள் உடனடியாக மீட்கப் பட்டனர். அதனையடுத்து அவ்வழியே பேருந்து போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

இந்நிலையில் மழைநீரில் சிக்கிய பேருந்தை அரசு போக்குவரத்து கழகத்தின் மீட்பு வாகனம் மூலம் மீட்டனர். மேலும் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஒருநாள் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் போராடி தண்ணீரை வெளியேற்றி வந்த நிலையில், நேற்று(10-05-2018) மதியம் மீண்டும் மழை வெளுத்து வாங்கியதால் ஊழியர்கள் செய்வதறியாமல் தவித்துக் கிடக்கின்றனர்.

நேற்றும் தனியார் பேருந்து ஒன்று அதே பாலத்தில் சிக்கிக்கொண்டது. அதனையடுத்து கிரேன் மூலம் பேருந்தை மீட்டனர். மேலும் பலத்த மழை காரணமாக திருச்சி விமான நிலைய வளாகத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விமான நிலையத்திற்குள் சென்று வரும் வழியில் உள்ள போர்டிகோ வரை மழைநீர் தேங்கி நின்றதால், சிங்கப்பூர், இலங்கையில் இருந்து திருச்சி வரவேண்டிய விமானங்கள் வழக்கமான நேரத்தைவிட, காலதாமதமாக வந்தன.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...