Saturday, May 26, 2018

'என்னத்த சொல்றது...'கண்ணீர் சிந்திய ஜெ., தோழி

Added : மே 25, 2018 23:48 | 

 


சென்னை, மே 26-''ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, அவரை பார்க்க அனுமதிக்கவில்லை,'' என, அவரின் பள்ளித் தோழி, பதர் சயீத் கண்ணீர் மல்க கூறினார்.ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இதுவரை, 50க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சயீத் ஆகியோர், விசாரணை கமிஷனில் ஆஜராகினர். காலை, 10:30 மணி முதல், மதியம் 12:30 வரை, இருவரிடமும் விசாரணை நடந்தது.விசாரணை குறித்து, பதர் சயீத் கூறுகையில், ''ஜெயலலிதாவின் பள்ளித்தோழி என்ற முறையில், என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர் உயிரோடு இருந்தபோது, அவரை பார்க்க அனுமதி மறுத்தனர். மருத்துவமனையில் இருந்த போதும், பார்க்க அனுமதிக்கவில்லை. அவர் இறந்த பின், நான் என்னத்தை சொல்வது; சொல்வதற்கு ஒன்றுமில்லை...'' என, கண்ணீர் சிந்தினார். சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், நேற்றைய விசாரணைக்கு வரவில்லை. சசிகலா உறவினரான டாக்டர் சிவகுமார், ஜெ., உதவியாளர் பூங்குன்றன், பாதுகாவலராக இருந்த, கூடுதல் எஸ்.பி., வீரபெருமாள், ராஜ்பவன் உதவிப்பிரிவு அலுவலர் சீனிவாசன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தாஷீலா நாயர் ஆகியோரிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், இன்று குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.

'அது இறைவனுக்கு தான் தெரியும்!'

பொன்.மாணிக்கவேல், 2011 செப்டம்பரில், உளவுத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்தார். டிசம்பரில், ரயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டார். அவர், உளவுத்துறையில் இருந்தபோது தான், ஜெயலலிதாவுக்கு எதிராக, சசிகலா குடும்பத்தினர் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில், சசிகலா குடும்பத்தை, போயஸ் கார்டனில் இருந்து, ஜெ., வெளியேற்றினார்.இது தொடர்பாக, நேற்றைய விசாரணையில், பொன்.மாணிக்கவேலுவிடம், நீதிபதி கேட்டதற்கு, தான் பணியிலிருந்த போது, அவ்வாறு தகவல் எதுவும் கொடுக்கவில்லை என, கூறியுள்ளார்.ஜெ., தோழி பதர் சயீத்திடம், நீதிபதி ஆறுமுகசாமி, கமிஷன் வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர், பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். பெரும்பாலான கேள்விகளுக்கு, பதர் சயீத் உணர்ச்சி வசப்பட்டுஉள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: என் மீதிருந்த நம்பிக்கை காரணமாக, சிறுபான்மை கமிஷன் தலைவராக, 1991ல், ஜெயலலிதா என்னை நியமித்தார். அதன்பின், அடுத்தடுத்து பதவிகளை வழங்கினார். 2006ல், திருவல்லிக்கேணி வேட்பாளராக நிறுத்தி, வெற்றி பெற வைத்தார். 2011 வரை, பல முறை, ஜெ.,வை சந்தித்தேன். எப்போது வேண்டுமானாலும், அவரை சந்திக்க முடிந்தது.அதன்பின், என்னை அணுகவிடவில்லை. பலமுறை முயற்சித்தும் பார்க்க விடவில்லை. அவரின் உதவியாளர் பூங்குன்றனிடம், பல முறை அனுமதி கேட்டு, கடிதம் கொடுத்தேன். 'வேண்டுமானால் சாலையில் நில்லுங்கள்; காரில் வரும்போது பார்த்தால், உங்களிடம் பேசுவார்' என, கூறினார். அதில், எனக்கு உடன்பாடில்லை.கடந்த, 2011ல் இருந்து, ஜெ., இறக்கும் வரை, பல முறை அவரை சந்திக்க முயற்சித்தும், முயற்சி கைகூடவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோதும், அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. ஒரு முறை மட்டும், இரண்டாவது தளம் வரை அனுமதித்தனர். அங்கு, சுகாதாரத்துறை செயலரை சந்தித்து பேசினேன். அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஜெ., இருந்த அறையை பார்த்து, வணங்கிவிட்டு வந்தேன்.இவ்வாறு பதர் சயீத் கூறியுள்ளார்.'ஜெ.,வை சந்திக்க விடாமல் தடுத்தது யார்' என, கமிஷன் வழக்கறிஞர் பார்த்தசாரதி கேட்டதற்கு, 'அது, இறைவனுக்கு தான் தெரியும்' என, பதர் சயீத் பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Govt sets timeline for nod to set up self-financing colleges

Govt sets timeline for nod to set up self-financing colleges Poulami.Roy@timesofindia.com 07.11.2024 Kolkata : The state higher education de...