Saturday, May 26, 2018

மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!

Published : 24 May 2018 09:28 IST

the hindu tamil




தூ த்துக்குடியில் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிரான போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்டுவரும் விதம், இந்த ஆட்சி யின் சகல அலங்கோலங்களையும் ஒருசேர வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘ஆலையை மூட வேண்டும்’ என்று பல்லாண்டுகளாகப் போராடிவரும் மக்கள், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே தற்போதைய போராட்டத்தை முன்னெடுத்தனர். முறையான பேச்சுவார்த்தை வழியே இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராமல் அலட்சியப்படுத்தி, மூன்று மாதங்களுக்கும் மேல் அந்தப் போராட்டத்தை நீடிக்கவிட்ட அரசு, போராட்டத்தின் நூறாவது நாளன்று காவல் துறை மூலம் சகிக்க முடியாத முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடுகளில் பத்து பேர் கொல்லப்பட்டிருப்பது ஜீரணிக்கவே முடியாத படு பாதகம். சம்பவம் தொடர்பான காணொலிகள் ஒவ்வொன்றும் பதறவைக்கின்றன. ஏதோ வேட்டைக் காரர்கள் குருவியைச் சுடுவதுபோல, போலீஸ் வண்டியின் மீது நின்றபடி, நிதானமாகக் குறி பார்த்து போலீஸ்காரர்கள் மக்களைச் சுடும் காட்சி களானது தமிழகக் காவல் துறைக்கு மனித மாண்பு கள் மீது துளியேனும் மதிப்பிருக்கிறதா எனும் கேள்வியையே எழுப்புகிறது.

இன்று நாம் கடைப்பிடித்துவரும் தொழில் கொள்கையானது தமிழகத்தின் பல பகுதிகளிலும் சூழலி யல் கேடுகளை உண்டாக்கியிருக்கிறது. அவ்வகையில், தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் கெட சம்பந்தப்பட்ட ஆலையும் ஒரு காரணமாகி இருக்கிறது. விளைவாகவே அந்த ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி மறுத்தது. தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின் நிறைய நியாயங்கள் இருக்கின்றன. அரசே முன்வந்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு அதைச் செய்யாத சூழலிலேயே போராட்டத்தில் மக்கள் இறங்கினர். அதற்குப் பின்னரேனும் மக்களுடன் ஆட்சியாளர்கள் நேரடியாகப் பேசியிருக்க வேண்டும்; நடக்கவில்லை.

நூறு நாட்கள் வரை போராடிய மக்களை அலட்சியப்படுத்தியது அரசு. நூறாவது நாளன்று பேரணியாகப் பெருந்திரள் மக்கள் திரள்வார்கள் என்ற சூழல் எழுந்தபோது, மக்கள் ஒன்றுகூடத் தடை விதித்தது. அரசியல் கட்சிகள் முன்னின்று மேற்கொள்ளாத இத்தகைய போராட்டங்களில் உள்ள மிக முக்கியமான அபாயம், ‘யாரும் அங்கு வந்து கலக்கலாம் - நிலைமை கட்டு மீறலாம்’ என்பது. அமைதியாக நீடித்த போராட்டம், திடீரென்று வன்முறைச் சூழலுக்கு மாறியதும் கலவரம் வெடித்ததும் இதையே வெளிப்படுத்துகின்றன. ஆட்சியின் பிரதி நிதிகள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையைக் காவல் துறை மூலம் கையாள முற்பட்டதன் விளைவு, தம் சொந்த மக்களையே கொல்லும் அரசைக் கொண்ட மாநிலம் எனும் அவலத்துக்கு தமிழ்நாட்டை இன்று கொண்டுசென்றிருக்கிறது.

முதல்வராக பழனிசாமி ஆட்சிப் பொறுப்பேற்றது முதலாகவே காவல் துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துவருகின்றன. அரசு அவற்றை முளையிலேயே கிள்ளாததாலேயே இவ்வளவு மோசமான சூழல் இன்று ஏற்பட்டிருக்கிறது. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று இது. அளவுக்கு அதிகமாக அதிகாரிகளை நம்புவதும், விளைவாக அரசு இயந்திரத்தை உரிய வகையில் கையாளத் தெரியாமல் திணறுவதும். சமூகப் பிரச்சினைகளைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கையாளும் தவறு இந்த இடத்தில்தான் உருவாகிறது.

மக்கள் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகள் வாயிலாகவே எதிர்கொள்ள வேண்டும். போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, போராட்டம் நடத்துபவர் கள் மீது தடியடி, போராட்டங்களை ஒருங்கிணைப் பவர்களின் மீது குண்டர் சட்டத்தில் வழக்குகள் பதிவுசெய்வது என்று இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்துவரும் சட்டம்-ஒழுங்குக் கொள்கை, காலனியாட்சிக் காலத்தையே நினைவுபடுத்துகிறது. மக்கள் குரலுக்கு மதிப்பளித்து அவர்களோடு உரையாட வேண்டிய ஓர் அரசு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையைக் கொண்டு சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவது கூடாது. அடக்குமுறையால் ஏற்படுத்தப்படும் மவுனத்துக்குப் பெயர் சமூக அமைதியும் அல்ல.

உடனடியாக முதல்வர் தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளோடு கலந்து பேசி இந்தப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவரே முன்னின்று மேற்கொள்ள வேண்டும். இனி ஒருமுறை இப்படி யான தவறுகள் நடக்காதவண்ணம் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள் ஒவ்வொருவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் அமைதி திரும்ப சகல தரப்பினரும் கைகோக்க வேண்டும்.

No comments:

Post a Comment

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan The Governor reaffirms his commitment  to upholding the constit...