Friday, June 8, 2018


மீண்டும் பஸ் ஸ்டிரைக்! - தாங்குமா தமிழகம், தடுக்குமா அரசாங்கம்? 


இரா.தமிழ்க்கனல்  vikatan 



பொங்கலுக்கு முன்னர் நடத்தப்பட்ட பஸ் ஊழியர் ஸ்டிரைக்கை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாத நிலையில், மீண்டும் அப்படியான வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ள நேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஊழியர்களுக்குத் தரப்படவேண்டிய ஓய்வுகாலப் பணப்பயன், சேமநல நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றை நிலுவையின்றி வழங்கவேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஜனவரியில் மாநிலம் முழுவதும் எட்டு நாட்கள் பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் ஜனவரி 12 அன்று போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், ஜனவரி 20-ல் பேருந்துக் கட்டண உயர்த்தப்பட்டது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதியத்துக்காகத்தான் முக்கியமாக கட்டணம் உயர்த்தப்பட்டது என்று அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அமைச்சர்களின் பேட்டிகளில் மட்டுமின்றி ஊடகங்களிலும் அரசின் சார்பில் விளம்பரமும் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்ட சமரசத் தீர்ப்பாளரின் கருத்துப்படி, ஊழியர்களுக்கான சம்பளவிகிதமும் அறிவிக்கப்பட்டது. அதை தொழிலாளர் சங்கங்கள் மனமுவந்து வரவேற்காவிட்டாலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டன. இந்நிலையில், அந்த சம்பள உயர்வைக்கூட முழுமையாக வழங்கவில்லை என இப்போது தொழிற்சங்கங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. அது மட்டுமின்றி அரசுப் போக்குவரத்துக் கழகங்களையே முற்றிலுமாக முடக்கிப்போடும் வகையில் அரசு செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 19ஆம் தேதி முதல் பேருந்து ஊழியர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.



இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் லட்சுமணன் நம்மிடம், “ ஆறு மாதங்களுக்கு முன்பு நடத்திய வேலைநிறுத்தம், தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய பல நூறு கோடி ரூபாய் ஓய்வுகாலப் பணத்தைத் தரக்கோரியது ஆகும். இப்போதோ அரசுப் போக்குவரத்துக் கழகத்தைக் காப்பாற்றக் கோரி, பொதுத்துறைப் போக்குவரத்தைக் காக்கக்கோரிதான் முக்கியமாக நடத்தப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “பேருந்துக்கட்டணத்தை உயர்த்தினால் நிலைமை சரியாகிவிடும் என அரசு கூறியது. புதிய பேருந்துகளை விடவில்லை. ஏற்கெனவே இயக்கப்பட்ட பேருந்துகளின் பராமரிப்பும் மோசமாக உள்ளது. சரியாகப் பழுதுபார்ப்பதும் இல்லை. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பு குறைந்துபோனது. கட்டண உயர்வுக்குப் பிறகு 30 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்துகளை விட்டுவிட்டு, தனியார் பேருந்து, பகிர்வுக்கட்டண ஆட்டோ, மெட்ரோ ரயில் என வேறு போக்குவரத்துக்கு மாறிவிட்டனர். அதாவது 2.20 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, இப்போது 1.80-1.90 கோடியாகக் குறைந்துவிட்டது.

முன்னரே வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தும் அது அதிகரிக்கவே செய்துள்ளது. 8 ஆயிரம் பேருந்துகள் ஏற்கெனவே நஷ்டத்தில்தான் இயக்கப்பட்டுவந்தன. இப்போது 6,500 பேருந்துகள் இயக்கப்படாதநிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கட்டண உயர்வுக்குப் பிறகு டீசலின் விலை ரூ.5 அதிகரித்துவிட்டது. அரசுப் பேருந்துகளுக்கு தினமும் 17 இலட்சத்து 600 லிட்டர் டீசல் தேவைப்படுகையில், முன்னர் நாளொன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.8 கோடியாக இருந்தது; இப்போது ரூ.9 கோடியாக அதிகரித்துவிட்டது. இந்தக் கட்டண உயர்வு தனியாருக்குதான் ஊக்கமாக அமைந்திருக்கிறது. ஓய்வுபெற்ற 20 ஆயிரம் பணியாளர்களுக்குப் பதிலாக மாற்றுப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஊழியர்களுக்கு சட்டவிரோதமுறையில் அமைக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தையும்கூட முழுமையாகச் செயல்படுத்தவில்லை. அதிகாரிகளுக்கு மட்டும் ஊதிய உயர்வைப் பெற்றுக்கொண்டார்கள். அரசு இதில் உடனே தலையிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தையும் பொதுத்துறையையும் காப்பாற்றவேண்டும்; ஊழியர் நலனையும் காக்கவேண்டும் என்பதற்காகவே மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அறிவிப்பு கொடுத்திருக்கிறோம்” என விளக்கம் அளித்தார், இலட்சுமணன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024