Friday, June 8, 2018

``ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு ஒருவருஷம் செலவழிச்சாதான் நீட்ல பாஸ் ஆக முடியும் போல!'' - நீட்டில் 316 மதிப்பெண் எடுத்த அழகுலெட்சுமி

எம்.புண்ணியமூர்த்தி
Coimbatore:

``ஹோட்டல்ல பாத்திரம் கழுவுற அம்மா… வாட்ச்மேன் வேலைக்குப் போற அப்பா… இவ படிச்சா டாக்டருக்குத்தான் படிப்பாளாம். எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. நம்ம தகுதிக்கு ஏத்தாப்புல ஆசைப்படணும்... இப்படி என் காதுபட எல்லோரும் ஏதேதோ பேசினாங்க. நான் எதையுமே காதுல வாங்கிக்கல. என்னோட பாதை இதுதான்னு தெளிவா முடிவு பண்ணி அதுல போய்க்கிட்டே இருந்தேன்'' நறுக்கெனப் பேசும் அழகுலெட்சுமி குரலில் ஆனந்தம் தாண்டவம் ஆடுகிறது. கோவையை அடுத்து உள்ள சொக்கம்புதூரைச் சேர்ந்த சிவக்குமார் - செல்வி தம்பதியின் ஒரே மகள் அழகுலெட்சுமி. கடந்த ஆண்டு திடீரென நடத்தப்பட நீட் தேர்வுக்கு `டாக்டர் கனவை' பலி கொடுத்த அரசுப் பள்ளி மாணவிகளுள் இவரும் ஒருவர். விடா முயற்சியால், இந்த ஆண்டு நடைப்பெற்ற நீட் தேர்வு மூலமாக 316 மதிப்பெண்ணைப் பெற்றிருக்கிறார். இந்த மதிப்பெண்ணுக்குக் கட்டாயம் டாக்டர் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆர்ப்பரிக்கிறது அழகுலெட்சுமியின் குடும்பம்.

அழகுலெட்சுமியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம், ``பத்தாவதுல 495 மார்க், பன்னிரண்டாவதுல 1120 மார்க்.. இப்படி ஸ்கூல்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ணியும் பிரயோஜனம் இல்லாமப் போச்சு. நீட் நடக்குமா நடக்காதாங்குற குழப்பம் கடைசி நேரம் வரைக்கும் நீண்டதால கட்-ஆஃப்லயே கவனம் செலுத்திப் படிச்ச என்னைப் போன்ற பிள்ளைங்களின் டாக்டர் கனவு அநியாயமா கலைஞ்சுபோச்சு. கடைசி நேரத்தில் அப்ளை பண்ணினாலும் போன வருஷம் நீட் தேர்வுல 202 மார்க் எடுத்தேன். MBBS கிடைக்காதுன்னு தெரிஞ்சும் கவுன்சிலிங் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கறதுக்காக எங்க அம்மாகிட்ட பொய் சொல்லி சென்னைக்குக் கூட்டிட்டுப் போனேன். டென்டல் சீட்தான் கிடைச்சது. நான் வேணாம்னு சொல்லிட்டேன்.



படிச்சா MBBS-தான்னு என் மைண்ட்ல ஃபிக்ஸ் ஆனதை, மத்த காரணங்களுக்காக அத்தனை ஈஸியா துடைச்சுப் போட்டுடுட முடியல. அதே நேரம், இதுக்குப் பிறகு என்ன செய்றதுன்னும் தெரியல. டாக்டர்ங்கிற கனவு பேராசை. அது நமக்கெல்லாம் வேண்டாம். பேசாம டிகிரி படிச்சுட்டு பேங்க் வேலைக்குப் போன்னு சொல்லி என்னை ஆர்ட்ஸ் காலேஜுக்கு இழுத்துட்டுப் போனாங்க எங்க அம்மா. நான் ப்ளஸ்டூல சயின்ஸ் குரூப். அந்தக் குரூப் எடுத்தா என்னென்ன படிக்கலாம்னே தெரியாத எங்க அம்மா, சொந்தக்காரவங்க பேச்சைக் கேட்டுட்டு என்னை பேங்க் மேனேஜராகிரு... உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சு எங்க கடமையை முடிச்சுக்குவோம்னு சொன்னாங்க. அவங்க ஆசைக்காக ஒரு அப்ளிகேஷனை வாங்கிட்டு வந்து வீட்ல வெச்சவதான் இப்போவரைக்கும் அதைத் திறந்துகூட பார்க்கல.

நான் ராஜ வீதில உள்ள சி.சி.எம்.ஏ பெண்கள் மேல்நிலைப் பள்ளிலதான் படிச்சேன். என் மனசுல உள்ள எண்ணத்தை யார்கிட்ட கொட்டுறதுனு தெரியல. அந்த நேரம் ஞாபகம் வந்தவர் எங்க ஸ்கூல் ஹெச்.எம் சந்திரசேகர் சார். என்மேல அவருக்கு நம்பிக்கை ஜாஸ்தி. உடனே அவருக்குக் கால் பண்ணி ஐடியா கேட்டேன். `நீ… ஏன் ஒரு வருஷம் ப்ரேக் பண்ணி படிக்கக் கூடாதுன்னு கேட்டார். உன்னால கண்டிப்பா முடியும்'னு அடிச்சுச் சொன்னார். அவரோட நம்பிக்கையை வெச்சுதான் ஒரு வருஷம் படிப்புக்குப் பிரேக் விடலாம்னு முடிவெடுத்தேன். என் எண்ணத்தை வீட்ல சொன்னப்ப பலத்த எதிர்ப்பு. அத்தனை ஏச்சுப் பேச்சுகளையும் தாங்கிக்கிட்டேன். ஆனாலும் என் முடிவுல இருந்து நான் பின் வாங்கலை.

ஒருகட்டத்துல வீட்லயும் ஒத்துகிட்டாங்க. ஒருவருஷம் கடுமையா படிச்சு இப்போ நடந்து முடிஞ்ச நீட் தேர்வுல 316 மார்க் வாங்கியிருக்கேன். நான் டாக்டராகிட்டா என்னோட லைஃபே டோட்டலா மாறிடும். இன்னைக்கு ஹோட்டல்ல பாத்திரம் கழுவுற வேலை பாக்குற எங்க அம்மாவும் வாட்ச்மேன் வேலை பார்க்குற அப்பாவும், என் பொண்ணு டாக்டர்னு பெருமையா சொல்லிப்பாங்க. என்னைப் பெத்ததுக்கு அவங்க பெருமைப்படுவாங்க. இப்படி ஒரு பெருமைக்காகத்தான் ஒரு வருஷம் தவம் இருந்தேன். இதைவிட அவங்களுக்கு நான் பெருமை தேடித்தர முடியாதில்லையா... அவங்க படிக்காதவங்க. அவங்களுக்குச் சொன்னா புரியாது. செஞ்சு காட்டினாதான் புரியும். நான் அதைக் காட்டியிருக்கேன். ஆனா நீட் என்பது எங்களை மாதிரி வறுமைக்கோட்டுல இருக்கிறவங்களுக்கு ஏத்தது இல்லைங்க. அதுக்கு முயற்சி, உழைப்பை அதிகமா கொட்டணும். ஸ்கூல் முடிச்சதும் வேலைக்குப் போகணுங்கிற நிலைமைக்கு ஆளாகாதவங்களா இருக்கணும். மொத்தத்துல வசதியான குடும்பத்துல பொறந்திருக்கணும்'' என்றவர் தன் அம்மாவைப் பார்த்துத் திரும்புகிறார்.

``எனக்கு என்னப்பா தெரியும். நான் படிக்காதவ…என் பொண்ணு நல்லா இருந்தால் போதும்'' என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் அழகுலெட்சுமியின் அம்மா...!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024