Friday, June 8, 2018

சென்னை விமான நிலைய கண்ணாடி மேற்கூரை விபத்துகளுக்கு எவ்வளவு செலவு? #VikatanRTI
ஸ்ரீராம் சத்தியமூர்த்தி


சென்னை விமான நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை இடிந்து விழுவது வழக்கமான செய்தியாக மாறியுள்ளது! ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என்று இருந்த சம்பவங்கள் தற்போது அரை சதம் கடந்து 65 என்ற அளவில் வந்து நிற்கிறது. இந்த விமான நிலையக் கண்ணாடி மேற்கூரை விபத்துகள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டுப் பெற்றோம்.

ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலின்படி, சென்னை விமான நிலையம் 2,200 கோடி ரூபாய் செலவில் 2013-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கண்ணாடி மேற்கூரை அமைப்பதற்கான ஒப்பந்தமானது Harve Pomerleau International Ltd என்ற நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ளது. இதில் கண்ணாடி மேற்கூரைக்கான செலவு என்பது 55.55 கோடி ரூபாயாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



2013-ம் ஆண்டு சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததிலிருந்து, ஆண்டு தோறும் சராசரியாக பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் (மேற்கூரை கண்ணாடி விழுவது) நடந்துள்ளன. 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வரையிலும் கண்ணாடி மேற்கூரைகள் இடிந்து விழுந்த விபத்துகளின் எண்ணிக்கை 65 ஆக உள்ளது. செய்திகளில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை 75ஐ தாண்டியுள்ளது. ஆனால், பிப்ரவரி 21 வரை கண்ணாடி மேற்கூரை விழுந்த விபத்துகள் மட்டும் 65 என விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மற்றவிபத்துகள் விமான நிலையத்துக்குள் நிகழ்ந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்துகளால், எந்த ஒரு பயணிக்கும் பாதிப்பில்லை என்று ஆர்.டி.ஐ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுவாரியாக நடைபெற்ற கண்ணாடி மேற்கூரை விபத்துகள் :

2013 - 14
2014 - 8
2015 - 19
2016 - 13
2017 - 6
2018 பிப்ரவரி 21 வரை - 5

'2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை, மேற்கூரை கண்ணாடிகள் இடிந்து விழுந்த விபத்துகளையடுத்து அவற்றைச் சீரமைக்க செய்யப்பட்ட செலவு மட்டும் 46.03 லட்சம் ரூபாய்' என்று கூறப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மேற்கூரை கண்ணாடி விழுந்தால், அதற்கு 70,815 ரூபாய் செலவிடப்படுகிறது. இத்தனை விபத்துகள் நிகழ்ந்துவிட்ட பின்பும்கூட.... 'இனி விபத்து நடக்காமல் இருக்க...' என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. தனியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.



விபத்து நடைபெற்ற - மக்கள் செல்லும் பாதைகளில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தும், பாலிகார்பனேட்டுகளால் ஆன ரூஃப் ஷீட்டுகளை அமைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது விமான நிலைய நிர்வாகம். மேலும் 'இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது உலக அளவில் வழக்கமான ஒன்றுதான்' என்ற பதிலையும் விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், 'சென்னை விமான நிலைய விபத்துகளில் மக்களுக்கோ அல்லது பொருள்களுக்கோ எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்பட்டதில்லை' என்றும் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

 மக்கள் பயன்பாடு பெரிதாக இல்லாத இடங்களில்தான் இதுவரை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதே விபத்துகள் மக்கள் பயன்பாடு உள்ள பகுதிகளில் நடந்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என்பதுதான் அனைவரது கேள்வியும். இந்த ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 5 விபத்துகள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன. இப்படிக் கண்ணாடி மேற்கூரைகள் சரிந்து விழுவதை விமர்சித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்தாலும்கூட, எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல், தொடர்ந்து விபத்துகள் நடைபெற்றுவருவது வேதனையளிக்கும் செய்தி. இனிமேலாவது, விமான நிலைய நிர்வாகம் தனி கவனம் செலுத்தி 'பாதுகாப்பு விஷயங்களில் அக்கறை செலுத்தி, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்' என்பதே அனைவரது விருப்பம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024