Saturday, June 9, 2018

வழிப்பறி நகரமாகும் சென்னை; துணிச்சலுடன் கத்தியால் வெட்டும் கும்பல்: அச்சத்தில் பொதுமக்கள்

Published : 07 Jun 2018 21:37 IST

சென்னை



  சென்னையில் வீட்டைவிட்டு வெளியே வந்து மீண்டும் திரும்பும்போது வழிப்பறி நபர்களிடம் சிக்காமல் வருவோமா? என பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு வழிப்பறி, கத்தியால் வெட்டுவது போன்றவை அதிகரித்து வருகிறது.

சென்னையில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வெளியே தைரியமாக நடமாட முடியாத நிலை உருவாகி வருகிறது. முன்பெல்லாம் பயந்து, பயந்து வழிப்பறி செய்தவர்கள் தற்போது துணிச்சலுடன் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி மறுத்தால் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு வழிப்பறி செய்து தப்பித்து செல்கின்றனர்.

போலீஸார் வாகன சோதனை, ரோந்து என சென்றாலும் இவர்கள் ஆட்டம் நிற்கவில்லை. சென்னையில் நடந்துச் சென்றால் ஆட்டோவில் தூக்கிச் சென்று வழிப்பறி செய்வது, தனியாக வந்தால் கத்தியால் வெட்டி மோட்டார் சைக்கிளையே பறித்து செல்வது போன்ற வழிப்பறிகளும் அதிகரித்து வருகிறது.

இவைகள் பெண்களுக்கு எதிராக அல்ல ஆண்களுக்கே நடக்கிறது. இரண்டு பைக்குகளில் 4 அல்லது 6 பேர் கும்பல் வருகிறது தனியே நிற்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் நகைகளை பறித்துச் செல்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரு நாளில் சென்னையில் 5 வழிப்பறிகள் விதவிதமாக நடந்துள்ளது.

சம்பவம்-1 தாம்பரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு(24). இவர் ஆர்.ஏ.புரம் மூப்பனார் பாலம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூன்று பேர், மிக அவசரம் ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் எனக் கூறி செல்போனைக் கேட்டு கெஞ்சியுள்ளனர். அவர் யோசிக்கும் போதே, திடீரென ஒருவர் கத்தியைக் காட்டியுள்ளார். அவரிடமிருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், செல்போனையும் பறித்து அந்த கும்பல் தப்ப முயன்றுள்ளனர்.

அப்போது மணிகண்டபிரபு கூச்சலிடவே பொதுமக்கள் ஓடி வந்து தப்பி ஓட முயன்ற இருவரை பிடித்தனர். கத்தியை காட்டி மிரட்டிய நபர் ரூ.4000 ரொக்கப்பணத்துடன் தப்பித்து ஓடிவிட்டார். பிடிபட்டவர்களை அபிராமபுரம் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரும் ஆயிரம் விளக்கு பகுதி பேகம் சாகிப் தெருவைச் சேர்ந்த அப்பாஸ்(26), விக்கி(எ) விக்னேஸ்வரன்(23) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம்-2 மந்தைவெளியைச் சேர்ந்தவர் கனகராஜ்(38). காய்கறி வியாபாரியான இவர் அதிகாலை காய்கறி வாங்க தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை நோட்டமிட்ட மர்மநபர்கள் இருவர் தங்களது இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆர்.கே சாலை மேம்பாலத்தில் ஆளரவம் இல்லாத இடத்தில் கனகராஜை மறித்த அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்துள்ளனர்.

கனகராஜ் வண்டியை நிறுத்தி விலாசம் சொல்லும்போது திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இருவரும் அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் வர்ணம் பூசி இருந்ததாகவும், தலை முடியை கலரிங் செய்திருந்ததாகவும் கனகராஜ் போலீஸில் தெரிவித்துள்ளார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம்-3 வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜாகிர் அகமது(26), போரூரில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேப்பேரி அருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த லாப்டாப், செல்போன் , கழுத்திலிருந்த செயின், பணம் முதலியவற்றை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் ஜாகிர் அகமது புகார் கொடுத்துள்ளார்.

சம்பவம்-4 அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். இன்று அதிகாலை அமைந்தகரை என்.எஸ்.கே சாலை அருகே நடந்துச்சென்றபோது மர்ம நபர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துச் செல்ல முயன்றுள்ளனர். கார்த்திகேயன் கூச்சலிட்டதால், கோபமடைந்த அவர்கள் கத்தியால் அவரது கையில் அறுத்து விட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவம்-5 யானைக்கவுனி பி.கே.ஜி கார்டனில் வசிக்கும் ப்ரமோத்(25) என்ற இளைஞர் என்பவர் மதியம் 1 மணி அளவில் கிருஷ்ணப்பா டேங்க் தெருவில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ப்ரமோதின் பக்கத்தில் வரும்போது பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென ப்ரமோதின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்ப முயன்றுள்ளார்.

இதைப்பார்த்த ப்ரமோத் அந்த நபரை பிடித்து இழுக்க அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த கூட்டாளி ஆக்டிவாவில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்த வழிப்பறி நபரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிடித்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்டவர் பெயர் ராஜேஷ்(18) என்பதும் வியாசர்பாடி முல்லை நகரைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடியவர் பெயர் முருகன்(19) என்பதும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தற்போது வழிப்பறி நபர்கள் அதிகரித்து வருவதும் சென்னை முழுதும் மோட்டார் சைக்கிளில் சுற்றியே இவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதும், பலரிடமும் கத்தி போன்ற ஆயுதங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் பயன்படுத்துவது பெரும்பாலானவை திருட்டு மோட்டார் சைக்கிள்களே.

ஆகவே போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி முறையாக ஆவணங்களை வைத்திருப்பவர்களை தொல்லைப்படுத்தாமல் வழிப்பறி நபர்களை பிடிப்பதற்காக வாகன சோதனை என்ற நோக்கத்துடன் சோதனை நடத்தினால் கட்டாயம் வழிப்பறி நபர்கள் சிக்குவார்கள். பொதுமக்களும் அச்சமின்றி நடமாடலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024