Saturday, June 9, 2018

‘காலா’ டிக்கெட் விற்காததால் பணத்தை திருப்பி கேட்ட கும்பல்; தர மறுத்த விநியோகஸ்தர் கடத்தல்: 5 பேர் கைது

Published : 07 Jun 2018 20:20 IST

மதுரை
 


காலா, கடத்தல் சித்தரிப்பு படம்

‘காலா’ படத்தின் டிக்கெட்டுகளை விற்க முடியாததால் பணத்தை திருப்பி கேட்ட கும்பல் அதனால் ஏற்பட்ட தகராறில் விநியோகஸ்தரை கடத்தியது. 5 பேரை கைது செய்த போலீஸார் விநியோகஸ்தரை மீட்டனர்.

‘காலா’ திரைப்படம் மதுரையில் விநியோகம் செய்யும் பொறுப்பை எஸ்.கே. பிலிம்ஸ் செல்வராஜ் என்பவர் வாங்கியுள்ளார். இவரிடம் இரண்டு நாட்களுக்கு முன் மதுரை பிபீ குளத்தைச் சேர்ந்த அஜித், விக்னேஷ் ஆகியோர் அணுகி கோல்டன் ரீகல் தியேட்டரில் ‘காலா’ படத்தின் முதல் காட்சிக்கான 500 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

  500 டிக்கெட்டுகளை ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட் விற்கவில்லை. இதனால் விற்காத மீதி டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு நேற்றிரவு செல்வராஜை சந்தித்துத்துள்ளனர். விற்காத டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

டிக்கெட் விற்றது விற்றதுதான், ஒரு டிக்கெட்டை வாங்கிய விலையைவிட பல மடங்கு விற்றிருந்தால் என்னிடமா வந்து லாபப்பணத்தை தருவீர்கள். இப்ப டிக்கெட் விற்கவில்லை என்றதும் என்னிடம் வந்து பணம் கேட்டால் எப்படி என்று செல்வராஜ் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அஜித், விக்னேஷ் மற்றும் அவர்களுடன் வந்த 3 பேர் சேர்ந்து செல்வராஜை தங்களது சொகுசு காரில் கடத்திச் சென்றனர்.

இதைப்பார்த்த செல்வராஜின் நண்பர், அங்கிருந்த போலீஸாரிடம் தகவல் சொல்ல உடனடியாக ரோந்துப்பணியிலிருந்த போலீஸார் உஷார்படுத்தப்பட்டு, சில கிலோ மீட்டர் தொலைவில் அவுட்போஸ்ட் என்ற இடத்தில் வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்திய போலீஸார், செல்வராஜை மீட்டனர்.

அஜித், விக்னேஷ் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். செல்வராஜை கடத்திய சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் மாட்டுத்தாவணி அருகே அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சோதனையிட்டனர். அப்போது விடுதி அறையில் 2 மூட்டைகளில் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. அவர்கள் கள்ள நோட்டு கும்பலா என்கிற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024