நிகர்நிலை கல்லூரிகளில் ரூ.13 லட்சம் கட்டணம்: ஐகோர்ட்
Added : ஜூன் 09, 2018 04:13சென்னை : நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ கல்லுாரிகளில், 13 லட்சம் ரூபாயை இடைக்கால கட்டணமாக பெற்று, மாணவர்களை சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான, ஜவஹர்லால் சண்முகம் தாக்கல் செய்த மனு: நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ கல்லுாரிகளில், கணிசமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, அரசு துறைகள் தவறி விட்டன. 'நீட்' தேர்வு அறிமுகப்படுத்திய பின், தனியார் மருத்துவ கல்லுாரிகள் பல, கல்வி கட்டணத்தை உயர்த்தி விட்டன. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிக மதிப்பெண்கள் பெற்றும், தனியார் கல்லுாரிகளில் சேர்வதில் பிரச்னை உள்ளது.
மாநில அரசு நியமித்துள்ள, கல்வி கட்டண நிர்ணய குழு, நிகர்நிலை பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லுாரிகளுக்கு, கட்டணம் எதையும் நிர்ணயிப்பதில்லை. அதனால், நிகர்நிலை பல்கலைகள், அவர்கள் விருப்பப்படி கட்டணத்தை நிர்ணயித்து கொள்கின்றன. எனவே, நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ வகுப்புகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.வேல்முருகன், ''கட்டணம் அதிகமாக இருப்பதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இதனால், நீட் தேர்வின் நோக்கம் நிறைவேறாது. எனவே, கட்டணத்தை குறைத்தால் தான், சேர முடியும்,'' என்றார்.
யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர் பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகி, ''கட்டண நிர்ணயம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். அறிக்கை தாக்கல் செய்ய, நான்கு மாத அவகாசம் தேவை,'' என்றார்.
முதல் பெஞ்ச் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:ஆண்டுக்கு, ௨௫ முதல், ௩௫ லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக கூறுவது, அதிகபட்சமானது. பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அமைக்கும் கட்டண நிர்ணய குழு, விரிவான ஆய்வு மேற்கொண்டு, கல்வி கட்டணத்தை பரிந்துரைக்க வேண்டும். அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, கட்டணம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். வரும், ௩௦ம் தேதிக்குள், குழுவை நியமிப்பதாக, யு.ஜி.சி., உத்தரவாதம் அளித்துள்ளது.
கட்டண நிர்ணய குழுவானது, ஆறு வாரங்களில் அறிக்கையை, பரிந்துரைகளை அளிக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 11.50 லட்சம் ரூபாய் கட்டணம், முன்னர் நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, தற்போது சேர்க்கப்படும் மாணவர்களிடம், ௧௩ லட்சம் ரூபாய், நிபந்தனை அடிப்படையில் பெறலாம். குழு, கட்டணத்தை நிர்ணயித்த பின், ௧௩ லட்சம் ரூபாய்க்கு அதிகமாக கட்டணம் இருந்தால், மீதி தொகையை, மாணவர்கள் செலுத்த வேண்டும்.
குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால், மீதி தொகையை மாணவர்கள் பெற உரிமை உள்ளது. கட்டணம் நிர்ணயிப்பதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment