Sunday, July 8, 2018


வீட்டில் கடிதம் எழுதிவைத்துவிட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிணற்றில் குதித்து தற்கொலை: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

 
தமிழ் முரசு  08.07.2018




கூடுவாஞ்சேரி: கடிதம் எழுதிவைத்துவிட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் மேற்கு கோதண்டராமர்நகர் ஜெயலட்சுமி தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62).

இவர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி கடந்த 2013ம் ஆண்டு ஓய்வுப்பெற்றார். இவரது மனைவி கலைவாணி (50). இவர்களுக்கு ராஜேஸ்வரி (33) என்ற மகளும் அரி (27) என்ற மகனும் உள்ளனர்.

இதில் அரி, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நாகராஜன் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக சரிவர சாப்பிட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த நாகராஜன், இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

அவரை குடும்பத்தினர் தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே வீட்டில் நாகராஜன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், ‘ என் சாவுக்கு யாரும் காரணமில்லை.

தீராத வயிற்றுவலி காரணமாக விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் திடுக்கிட்ட குடும்பத்தினர், உடனடியாக அப்பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளுக்கும் சென்று தேடினர். அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் நாகராஜனின் சடலம் மிதந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில் போலீசார் சென்றனர். மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

அவர்கள் நாகராஜனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024