காற்றில் கரையாத நினைவுகள் 18: நட்பெனும் நிழலில்!
Published : 03 Jul 2018 08:56 IST
வெ. இறையன்பு
அன்று நட்பை வசிக்கும் இருப்பிடமும், படிக்கும் பள்ளியுமே தீர்மானித்தன. ஒரே பகுதியில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படிப்பார்கள். அண்ணன்கள் இருவரும் ஒரே வகுப்பிலும், தம்பிகள் இருவரும் ஒரே வகுப்பிலும் படிக்க குடும்பங்கள் இரண்டும் நெருங்கிவிடும். அன்று பரீட்சை என்பது முதல்நாள் படிப்பு என்பதால் கூடிப் பேசவும், ஓடி ஆடவும் அவகாசம் இருந்தது.
நண்பர்களை விளையாட்டு என்கிற கண்ணுக்குத் தெரியாத கயிறே இணைத்தது. நன்றாகப் படிக்கிற மாணவனை நண்பன் எனச் சொல்வதைவிட, அதிகமாக கோல் அடிக்கிற மாணவனை நண்பன் எனச் சொல்வதே அன்று பெருமையாக இருந்தது.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே எங்களுக்கு அகலமான மைதானங்கள் தட்டில் வைத்துத் தரப்பட்டன. அதிகம் ஆக்கிரமிக்கப்படாத வீட்டுமனைகள் உள்ள பகுதி என்பதால் காலியிடங்களெல்லாம் கால்பந்து மைதானங்கள்; அரைகுறைக் கட்டிடங்கள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாட்டரங்கங்கள். எப்போதும் விளையாட்டு, பருவத்துக்கு ஏற்ப விளையாட்டு. பொங்கல் பண்டிகை சமயத்தில் கடைகளில் பம்பரம் வந்துவிடும். கோடைக் காலத்தில் கில்லி தாண்டல். அவ்வப்போது பச்சைக் குதிரை, சோடா மூடியை வட்டத்துக்குள் வைத்து சல்லியால் அடித்து வெற்றி பெறுவது என்று பணமே இல்லாத பலவித விளையாட்டுகள். பந்து மட்டும் இருந்தால் ஒருவருக்கொருவர் அடித்து விளையாடும் சூரப்பந்து. கொஞ்சம் வசதி இருந்தால் கட்டுமானச் செங்கல் ஸ்டம்ப்ஸ் ஆகும். விறகுக் கட்டைதான் பந்து அடிக்கும் மட்டை.
கால்சட்டையில் ‘தபால்பெட்டி’
அன்று மாவட்டம் முழுவதும் ஒன்றிரெண்டு பணக்காரப் பள்ளிகள் மட்டுமே. மற்றவற்றில் அனைவரும் சங்கமம். எனவே, ஏற்றத் தாழ்வற்ற நட்பு நிலவியது. என்னுடன் தொடக்கப் பள்ளியில் படித்த அன்வரும், அரவிந்தனும் நெருங்கிய நண்பர்கள். அரவிந்தனோ துணிக்கடை வைத்திருப்பவரின் மகன். அன்வரின் தந்தையோ மாட்டுவண்டி வைத்திருந்த எளிய மனிதர். எங்களுக்கு இடையே எந்த இடைவெளியும் நட்பில் இருந்தது இல்லை. சில மாணவர்களுக்கு கால்சட்டையில் கிழிசல் இருக்கும். மற்றவர் அதை ‘தபால்பெட்டி’ என்று கேலி செய்வார்கள். அந்த கால் சட்டையை அணிந்த மாணவனும் அதற்கு சிரித்துக்கொள்வான். அந்த நொடியோடு அந்தக் கேலி மறைந்துவிடும்.
ஏழை மாணவர்களே பள்ளிக்குக் காசு கொண்டு வருவார்கள். வீட்டில் கூழ் குடித்தாலும் பள்ளியில் விருப்பமானதை வாங்கித் தின்னட்டும் என்பதில் அவர்களின் பெற்றோர் குறியாக இருந்தனர். அம்மாணவர்கள் வாங்குகிற தேன்மிட்டாயையும், சவ்வு மிட்டாயையும் அத்தனை நண்பர்களுக்கும் பகிர்ந்து தருவார்கள்.
கமர்கட்டை சட்டை நுனியில் மடித்து ‘காக்காய் கடி’ கடித்துத் தருவார்கள். எச்சிலால் நோய் வரும் என எடுத்துச் சொல்ல ஆளும் இல்லை; அதை நினைத்துப் பார்க்கும் மனமும் அப்போது இல்லை. எந்த மாணவனுக்காவது இருமல் வந்தால் நண்பன் சென்று ‘சளி மிட்டாய்’ என்ற ஒன்றை வாங்கி வந்து தருவான். அதோடு இருமல் நின்றுவிடும்.
நண்பர்களுக்குள் சண்டைகளும் வரும். ஆனால், அது வீடுவரை போகாது. எந்த மாணவனும் சண்டைபோட்டு அடி வாங்கியதை புகாராகச் சொன்னது இல்லை. அடுத்த நாளே சண்டைபோட்ட மாணவர் இருவரும் சமமாக அமர்ந்து கதைகள் பேசி சிரித்திருப்பார்கள்.
மாணவர் திரைப்படம்
ஆண்டு இறுதியில் தேர்ச்சி பெற்றது தெரிந்ததும் பழைய நோட்டுகளை எல்லாம் எடுத்துச் சென்று எடைக்குப் போட்டு காசு பெறுவது வழக்கம். அதில் சக மாணவர்களுக்குத் தின்பண்டம் வாங்கித் தருவதும் உண்டு. ‘மாணவர் திரைப்படம்’ என்று ஆண்டுக்கொரு முறை திரையிடப்படும். பள்ளிக்கூடமே அந்தத் திரைப்படத்துக்கு எங்களை அழைத்துச் செல்லும். பள்ளிப் போட்டிகளில் யார் முதல் பரிசு பெற்றாலும் அனைத்து மாணவர்களும் ஆசையாக கைத் தட்டுவார்கள். இன்று பள்ளிகளில் பரிசளிக்கும்போது கைத் தட்ட ஆளே இல்லை. அடிக்கடி கைத் தட்டும்படி அறிவிப்புகள் மட்டுமே ஒலிக்கின்றன. அடுக்கடுக்காகப் பரிசுகள் தந்தால் கைத் தட்டுவது எப்படி இயல்பாய் நிகழும்.
நாங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வரும்போது ஆங்கில ஊடகத்தில் தொடக்கத்தில் இருந்து படித்த சில மாணவர்கள் வந்து சேர்வார்கள். அவர்கள் பேசுகிற நுனிநாக்கு ஆங்கிலத்தைக் கண்டு நாங்கள் தாழ்வு மனப்பான்மையில் தவழ்வது உண்டு. ஆனால், ஓரிரு மாதங்களில் அவர்களையும் எங்களைப் போலவே தமிழில் பேச தயார் செய்துவிடுவோம். மாலை நேரத்தில் மைதானத்தில் அமர்ந்து குழுவாய்ச் சேர்ந்து படிக்கிற வகுப்புகள் அன்றைக்கு இருந்தன.
இரும்புக் கை மாயாவி
என்னுடன் படித்த மாணவர் ஒருவர், திலீப் என்று பெயர். மூக்குப்பொடி கம்பெனிக்குச் சொந்தக்காரர். அவர் கொண்டுவந்த மூக்குப் பொடியை மாணவர் ஒருவர் வாங்கி மற்றவர் மூக்குகளில் திணித்து ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி வரை சொல்லி அவர்கள் ‘எச்’ என்று தும்முவதைக் கண்டு சிரிப்பது உண்டு. ஓரிரு மாணவர் வாங்கும் ‘இரும்புக் கை மாயாவி’, ‘பெய்ரூட்டில் ஜானி’, ‘மஞ்சள் பூ மர்மம்’ போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் வகுப்பறையையே வலம் வரும்.
ஆண்டு முழுவதும் சீருடை கட்டாயம். தீபாவளிக்கு மறுநாள் மட்டும் வண்ண உடையில் வரலாம் என்ற விதித் தளர்வு உண்டு. அப்போது கிறிஸ்துமஸுக்கு வாங்கிய புதுத் துணியையும், ரம்ஜானுக்கு வாங்கிய புதுச் சட்டையையும் அணிந்துகொண்டு அந்த மாணவர்கள் வருவது உண்டு.
கல்லூரிக்கு படிக்க வரும்போது ‘நட்பு’ என்பது அன்பினால் மட்டுமே அன்று நிகழ்ந்தது. பலதரப்பட்ட பொருளாதாரப் பின்னணியில் இருந்து மாணவர்கள் கல்லூரியில் சேர்வார்கள். அவர்கள் இணக்கத்தை பணம், காசு தீர்மானிக்காது. ஏழை மாணவன் ஒருவனுக்கு விடுதிக் கட்டணம் கட்ட தாமதமானால் மற்றொரு மாணவன் மனம் உவந்து கட்டுவான். சுற்றுலாச் செல்லும் இடங்களில் யாராவது பணத்தைத் தொலைத்துவிட்டால், எல்லோரும் கொஞ்சம் பங்களித்து அந்த மாணவனுக்கு செலவுக்குக் கொடுப்பார்கள். எந்த மாணவனாவது விபத்தில் சிக்கினால் ஓடிச் சென்று ரத்தம் கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள்.
இன்றும் எங்கள் பள்ளியில் படித்து சேலத்திலேயே பணியாற்றும் மாணவர்கள் அன்று இருந்ததைப் போலவே இன்றும் நெருக்கமாக இருக்கிறார்கள். அடிக்கடி சந்திக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்துகொள்கிறார்கள். யாருக்கேனும் பிரச்சினை என்றால் ஓடிச்சென்று உதவுகிறார்கள். சின்ன வயதில் பள்ளியில் இட்ட நட்பு உரம் இன்று வரை கனிகளைத் தந்து பசியாற்றுகிறது.
‘என்னை மறந்துவிடாதே...’
என்னுடன் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த மாணவன் ராஜசேகர். உயர்நிலைப் பள்ளியில் வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டார். ஒரு நாள் மாலையில் பள்ளி திரும்பும்போது ‘அன்பு’ என யாரோ கூப்பிட திரும்பிப் பார்த்தேன். கையில் மண்வெட்டியுடன் ராஜசேகர். ‘‘அப்பா இறந்துவிட்டார். படிக்க இயலாதச் சூழல். கொத்துவேலைக்கு வந்துவிட்டேன். என்னை மறந்துவிடாதே’’ என்றார். அன்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. இப்போது எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.
என்னோடு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த நண்பர்கள் உண்டு. அன்று அமைதியாக இருந்த ஹரன் இன்று ‘பாரதியார்’ நாடகத்தில் சுப்பிரமணிய சிவா பாத்திரத்தில் கலக்குகிறார். உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் எங்கள் பள்ளி நட்புகளை ‘புலனம்’ (வாட்ஸ் அப்) என்கிற ஒற்றைச் சரடு இணைத்துவிட்டது. அவர்கள் ஒருமையில் என்னை அழைத்தாலும் என்னால் அவர்களை அப்படி அழைக்க முடியவில்லை. ஒரே இடத்தில் ஓடினாலும் இறங்கும்போது இன்னொரு வெள்ளமாக இருக்கும் நதிகள் அவர்கள் என்பதால்.
இன்றோ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாவட்டரீதியாகவும், சாதிரீதியாகவும் நட்பு எல்லைகள் சில இடங்களில் குறுகிவிட்டன.
பிரிவுகளைத் தாண்டிய அன்றைய நட்பில் எதேச்சையாக அறிமுகமாகி, நாகையில் நான் சார் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது என்னுடன் தங்கிப் படித்த சுரேஷ் என்கிற நண்பர், துணை ஆட்சியராகத் தேர்வு பெற்றார். திருவில்லிப்புத்தூருக்கு அவர் திருமணத்துக்குச் சென்றிருந்த நான், பால்கோவா வாங்கி வந்தேன். அந்தப் பால்கோவா தீர்வதற்குள் அவருடைய மரணம் சம்பவித்து விட்டது.
ஒவ்வொரு நல்ல நண்பரின் எண்ணையும் அலைபேசியில் இருந்து அகற்றுவதைவிடப் பெரிய சோகம் எதுவுமில்லை.
- நினைவுகள் படரும்...

No comments:
Post a Comment