Thursday, July 12, 2018

ஆங்கில​ம் அறிவோமே 221: இனி உதாரணத்துக்கு இடமில்லையா?

Published : 10 Jul 2018 10:24 IST
 
ஜி.எஸ்.எஸ்.

 






கேட்டாரே ஒரு கேள்வி

“தீக்குச்சியை match என்று சொல்ல வேண்டுமா, Match stick என்று சொல்ல வேண்டுமா?


Can I have a match என்பது சரியா, Can I have a match stick என்பது சரியா? தீக்குச்சியைத் தினமும் உரசும் ஒவ்வொரு முறையும் எனக்கு இந்தச் சந்தேகம் வருகிறது. விடை கூறுங்கள்”

------------------------------

Enervated என்ற ஆங்கிலச் சொல் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக ‘சக்தியெல்லாம் இழக்கச்செய்கிற’ என்ற பொருள் தருகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். வாசகர் ஒருவர், “அதைப் போலதான் restive என்ற வார்த்தையும். இதற்கு ‘அமைதியில்லாத’ என்று பொருள்!”என்பதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நன்றி. ‘The elephant is restive’ என்றால் அதன் அருகே செல்லாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

------------------------------

“ஒரு திரைப்பட விமர்சனத்தில் ‘an ensemble cast’ என்று படித்தேன். இதற்கு என்ன பொருள்?” என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Cast என்ற தலைப்பின் கீழ் அந்தத் திரைப்படத்தில் நடிப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் (ஜாதியைக் குறிப்பது caste என்ற சொல்).

Ensemble cast என்றால் அந்தத் திரைப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைந்து பணியாற்றி இருப்பார்கள்.

------------------------------

தீக்குச்சி என்பது match. அதுவே போதுமானது. Match என்றாலே சிறிய குச்சி என்றுதான் பொருள். Bring me a box of matches. Strike a match to make a fire.

------------------------------

நண்பரின் குடும்பத்துடன் ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றிருந்தேன். கடையில் உள்ள ஐஸ்கிரீம் வகைகளைப் பட்டியலிட்டு இதில் எது வேண்டுமென்று தன் மகளைக் கேட்டார் நண்பர். ‘வெனிலாவா’ இல்லாட்டி ‘பட்டர்ஸ்காட்சா’, இந்த இரண்டு வகை ஐஸ்கி​ரீம்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று திணறினாள் அந்தச் சிறுமி. “எப்போ இந்தக் கடைக்கு வந்தாலும் இது இவளுக்குப் பெரிய டைலமா” என்றார் நண்பர். ஆனால், இந்த இடத்தில் ‘confusion’ என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்.

Dilemma என்ற சொல்லை நிறையப் பேர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டுமே பிடித்திருக்கிறது அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது டைலமா அல்ல. இரண்டுமே பிடிக்காவிட்டாலும், அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றால் அது dilemma.

அதாவது, “உங்களுக்கு ஆண் குழந்தை வேண்டுமா, பெண் குழந்தை வேண்டுமா?” என்று கேட்டால் அது dilemma அல்ல.

மாறாக உங்கள் மனைவிக்குப் பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கும் டாக்டர் உங்களிடம், “பிரசவத்தில் சிக்கல். உங்கள் மனைவி அல்லது குழந்தை ஆகிய இருவரில் ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியும். உங்கள் முடிவு என்ன?” என்று கேட்கும்போது உண்டாவது டைலமா (சில திரைப்படக் காட்சிகளில் இடம்பெற்ற இதுபோன்ற கேள்வியை டாக்டர்கள் நிஜத்தில் கேட்பார்களா என்பதைக் கற்றறிந்த மருத்துவ வாசகர்கள்தான் கூற வேண்டும்).

------------------------------

Euphemism என்றால் என்ன?

ஒரு சங்கடமான விஷயத்தைக் குறிக்க ஒரு கடுமையான சொல் இருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் மிருதுவான ஒரு சொல்லின் ​மூலம் அதை உணர்த்தினால் அது euphemism.

ஒரு நிறுவனத்தில் பலரை dismiss செய்து வீட்டுக்கு அனுப்பப் போவதை ‘downsizing’ என்று நா​​சூக்காகக் குறிப்பிடுவது euphemism.

கிரேக்க மொழியில் euphemism என்பதற்குப் பொருள் மங்கலமாகப் பேசுதல்.

“வேலையில்லாமல் இருக்கேன்”என்பதை bench-ல் இருப்பதாகச் சொல்வதும், “ராஜினாமா செய்யப் போறேன்” என்பதை paper போடுவதாகச் சொல்வதும்கூட euphemism-தான்.

------------------------------

“e.g. என்ற ஆங்கிலச் சுருக்கத்தின் விரிவாக்கம் என்ன?”என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Exempli gratia என்பதன் சுருக்கம் அது. லத்தீன் சொற்களான இவற்றின் பொருள் for example என்பதாகும். You should involve in more games, e.g. swimming, running and tennis.

உங்களுக்குத் தெரியுமா? e.g. என்பதை இனிப் பல ​நூல்களில் நீக்கிவிடப் போகிறார்களாம். பார்வையில்லாதவர்களுக்கு வாசகங்களை உணர்ந்து தானாக ஒலி வடிவில் அளிக்கும் மென்பொருட்கள் e.g. என்பதை egg என்று தவறாக வாசிக்கின்றனவாம். இதுதான் அந்த நீக்கலுக்கான முக்கியக் காரணம்.



போட்டியில் கேட்டுவிட்டால்?

After the ---------- of the new team, the company took a lead in new markets

a) shake down

b) shake off

c) shake out

d) shake up

Shake off என்றால் உங்களுக்குப் பிரச்சினைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து (அது நோயாகவும் இருக்கலாம்) மீண்டு வருவது.

Shake out என்றால் உதறுவது. அதாவது காலையில் எழுந்ததும் படுக்கை விரிப்புகளை உதறிவிட்டு மடிப்போம் இல்லையா, அதுபோல.

Shake up என்றால் குலுக்குவது. மருந்து பாட்டில்களைக் குலுக்கிவிட்டு மருந்தை உட்கொள்வோமே, அதுபோல.

Shake down என்றால் ஒரு புதிய சூழலில் நிலைநிறுத்திக்கொள்வது.

இந்த நான்கில் shake down என்பது இங்கு அதிகமாகப் பொருந்துகிறது. புதிய குழு தன்னை நிலைநிறுத்திக்கொண்டதால், அந்த நிறுவனம் புதிய ச​ந்தைகளில் முதலிடம் பெற்றது.

After the shake down of the new team, the company took a lead in new markets என்பதுதான் சரி.

சிப்ஸ்

# இலைகள் சலசலத்தன என்கிறோமே அந்தச் சலசலப்புக்கான ஆங்கிலச் சொல் எது?

Rustling

# Private information என்பதற்கும், classified information என்பதற்கும் என்ன வேறுபாடு?

Private என்றால் அந்தரங்கமான அல்லது ரகசியமான. Classified என்றால் அலுவல் தொடர்பான ரகசியம் (officially secret).

# Letting the cat out of the bag என்றால்?

ரகசியம் ஒன்றை வெளிப்படுத்துவது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...