Friday, July 6, 2018

மாவட்ட செய்திகள்

தென் மாவட்ட ரெயில்களில் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு 7 நிமிடங்களில் முடிந்தது


தென் மாவட்ட ரெயில்களில் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி, 7 நிமிடங்களில் முடிவடைந்தது.

பதிவு: ஜூலை 06, 2018 05:30 AM
சென்னை,

சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு வி‌ஷயமாக தங்கியிருக்கும் வெளியூர் மற்றும் வெளிமாநில மக்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின்போது, குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். இதில் பெரும்பாலானோர் ரெயில் பயணங்களையே தேர்வு செய்கிறார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் 6–ந்தேதி வருகிறது. எனவே 2–ந்தேதியான வெள்ளிக்கிழமையே ஏராளமானோர் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். ரெயில்வே டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீட்டிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 2–ந்தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்பதிவு டிக்கெட் எடுக்க பயணிகள் முண்டியடித்து வருவார்கள் என்பதால் எழும்பூர், சென்டிரல் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று காலை முன்பதிவு கவுண்ட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவில் பயணிகள் வரவில்லை.

அப்படி வந்த பயணிகளுக் கும் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு, டிக்கெட் வினியோகம் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே நவம்பர் 2–ந்தேதிக் கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. சரியாக 8.07 மணிக்கு (7 நிமிடங்களிலேயே) முன்பதிவு முடிந்தது.

குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், வைகை, பொதிகை, மலைக்கோட்டை, ராமேஸ்வரம், நெல்லை, அனந்தபுரி, முத்துநகர் உள்ளிட்ட எல்லா ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இதனால் பல பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் ஒருவேளை டிக்கெட் கிடைத்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில், வேறு வழியின்றி காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளையும் வாங்கிச் சென்றனர்.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் வரலாறு காணாத வகையில், காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. அதேபோல நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், அனந்தபுரி, மலைக்கோட்டை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 250–ஐ தாண்டிச் சென்றது.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மட்டும் 536 இடங்கள் காலியாக இருந்தன. அதுவும் விரைவில் காலியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:–

எல்லா ஆண்டுகளைப் போல இந்த ஆண்டிலும் பெரும்பாலானோர் ஆன்– லைன் மூலமே டிக்கெட் எடுத்துள்ளனர். அதனால் தான் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதை தவிர்க்க ஆன்–லைன் மூலம் டிக்கெட் எடுப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஆன்–லைன் மூலமே விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024