Saturday, July 7, 2018


இவருக்கு 80 வயதாகிவிட்டதா? வியக்கும் ரசிகர்கள்! பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய பிரபல நகைச்சுவை நடிகர்!

By சினேகா | Published on : 06th July 2018 12:32 PM |

தம்ப்ப்ப்ப்றீறீ...பாப்பா......பப்..பப்.., புர்..ர்..! என்பதை எல்லாம் இவர் சொல்வதைப் போல வேறு யாராலும் சொல்ல முடியாது. சிலர் நடிக்க ஆரம்பித்தால் தான் சிரிப்பு வரும், ஆனால் இவர் திரையில் தோன்றினாலே அடுத்து இவர் என்ன சேஷ்டை செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்களுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அந்த அளவுக்கு உடல்மொழியிலும், குரலிலும் தனித்துவம் காண்பித்து அசத்தியவர். மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுக்கே சவால் விடும் குரல் இவருடையது. அவர்தான் பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தில் 1965-ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானவர். வக்கீல் படிப்பு படித்தும் மூர்த்திக்கு நடிப்பின் மீது தீராத ஆசை ஏற்படவே, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் திரையுலகம் பல காமெடியன்களைக் கண்டிருந்தாலும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் சில காமெடிகள் மறக்க முடியாதவை. சிவாஜி, கமல், ரஜினி, விஜய்காந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். காமெடி மட்டுமல்லாமல் குணசித்திர வேடத்திலும், சில படங்களில் வில்லனாகவும் கூட நடித்துள்ளார் மூர்த்தி. முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் ஆகிய படங்களில் இவர் செய்த வில்லத்தனமும், சீவலப்பேரி பாண்டி படத்தில் இவர் செய்யும் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.



50 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நடிகை மணிமாலாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 80 வயது பூர்த்தியானது. எளிமையாக தனது பிறந்த நாளை மனைவியுடன் கொண்டாடி மகிழ்ந்தார். அவரது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பெரிய திரை மற்றும் சின்னத் திரையில் நடித்து வந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, தமிழ் படம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களுக்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா உள்ளிட்ட பலருடன் ‘இட்லி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024