Friday, July 6, 2018

காஸ் சிலிண்டர்கள் வெடித்து குடும்பமே பலி கடன்தொல்லையால் மதுரையில் விபரீதம்

Added : ஜூலை 06, 2018 01:36




திருப்பரங்குன்றம்:மதுரையில் கடன் தொல்லையால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்து மனைவி, மகளை கொலை செய்த மிட்டாய் வியாபாரி தானும் தற்கொலை செய்து கொண்டார்.

துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 37. இவரது மனைவி காஞ்சனா,30, மகள் அக் ஷயா,6. மூன்றரை ஆண்டுகளுக்கு முன், மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் வாடகை வீட்டில் குடியேறினர். மிட்டாய், முறுக்கு உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை வாங்கி சில்லரையில் ராமமூர்த்தி விற்றுவந்தார். காஞ்சனா கடை ஒன்றில் வேலை செய்தார். அக்ஷயா தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்தார்.

நேற்றுமுன்தினம் இரவு 3:00 மணிக்கு வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. அருகில் வசிப்பவர்கள் வந்தபோது ராமமூர்த்தி தீக்காயங்களுடன் சத்தமிட்டபடி ஓடிவந்து ரோட்டில் விழுந்தார். '108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில விநாடிகளில் வீட்டிற்குள் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டதுடன், தீ வீட்டின் வெளியே பரவியது. அதற்குள் அங்கு வந்த ஆம்புலன்சில் ராமமூர்த்தியை அனுப்பிவிட்டு, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், மணிகண்டன், எஸ்.ஐ., க்கள் மணிக்குமார், சாந்தா ஆகியோர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் காஞ்சனா, அக் ஷயா கருகி கிடந்தனர். இரண்டு காஸ் சிலிண்டர்கள் வெடித்த நிலையில் கிடந்தன.

தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்தது தெரிந்தது. துாங்கிக்கொண்டிருந்த மனைவி, மகளை காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கொலை செய்த ராமமூர்த்தியும் தீ விபத்தில் சிக்கி இறந்தார்.

போலீசார் கூறியதாவது: ராமமூர்த்திக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறுமாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். சிலிண்டர் வெடித்த சத்தம் ஒரு கி.மீ., சுற்றளவிற்கு கேட்டுள்ளது. 50 அடி உயரத்திற்கு தீ பரவியுள்ளது.சிலிண்டர் வெடித்ததில் வீட்டு கதவின் ஒரு பகுதி உடைந்து 20 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டது. வீட்டினுள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புகை சூழ்ந்திருந்தது, என்றனர்.

கடன் தொல்லையால்ஓராண்டில் 13 பேர் பலி

மதுரையில் கடந்த ஓராண்டில் 13 பேர் கடன்தொல்லைக்கு ஆளாகி இறந்துள்ளனர். கடந்த 2017 செப்., 25ல் மதுரை யாகப்பா நகரில் தனியார் பள்ளி நர்சரி பள்ளி நிர்வாகி குறிஞ்சிகுமரன் மற்றும் குடும்பத்தினர் 8 பேர் விஷம் குடித்தனர். இதில் 7 பேர் இறந்தனர். இந்தாண்டில் ஏப்.,2ல் மதுரை பழங்காநத்தத்தில் மூர்த்தி என்பவரின் மனைவி பிரியா தனது மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த பட்டியலில் ராமமூர்த்தி குடும்பமும் சேர்ந்தது பரிதாபம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024