Saturday, July 7, 2018

நீட் தேர்வு முடிவில் அவசரம் ஏன் : சி.பி.எஸ்.இ.,க்கு கோர்ட் கேள்வி

Added : ஜூலை 07, 2018 01:59

மதுரை: 'நீட் தேர்வு குறித்து வழக்கு தாக்கலானதும் ஒருநாள் முன்கூட்டியே அவசரமாக முடிவை வெளியிட்டது ஏன்? பீஹாரில் 'நீட்' தேர்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எப்படி' என உயர்நீதி மன்ற மதுரை கிளை நேற்று கேள்வி எழுப்பியது.மார்க்சிஸ்ட் எம்.பி.,-டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மே 6 ல் நீட் தேர்வு நடந்தது. 180 வினாக்கள் இடம்பெற்றன. 49 வினாக்களில் தமிழ் மொழி பெயர்ப்பில் தொழில்நுட்ப வார்த்தைகள் தவறாக இருந்தன. ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண் வீதம் 49 க்கு கருணை மதிப்பெண்ணாக 196 வழங்க வேண்டும். முடியாதபட்சத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் மனு செய்தார்.ஜூலை 2 ல் நீதிபதிகள்,'அறிவியல் பாடங்களுக்கு ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக பொருள்கொள்ளும் வகையில் தமிழ் வார்த்தைகளை கண்டறிய சி.பி.எஸ்.இ.,முயற்சி மேற்கொண்டதா?,' என்பன உட்பட 4 கேள்விகளை சி.பி.எஸ்.இ.,க்கு எழுப்பினர்.நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு நேற்று விசாரித்தது.மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர்: மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பற்றி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ் வினா குழப்பமாக இருந்தால், அதற்கு எதிரே உள்ள ஆங்கில வினாவிற்கு விடையளிப்பதுதான் சரியானது என 'நீட்'டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே தெளிவுபடுத்தப்பட்டது. 'நீட்''கீ'பதில்கள் வெளியானபோது, எந்த ஒரு மாணவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.சி.பி.எஸ்.இ.,வழக்கறிஞர்: இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி வினாக்கள் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. மொழிமாற்றத்திற்கு மாநில அரசு நிபுணர்கள் பட்டியல் அளித்தது. அவர்கள் பரிந்துரைப்படி மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் யாரும் இந்நீதிமன்றத்தை நாடவில்லை. அனைத்து மாணவர்களும் சரியாக தேர்வு எழுதியுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் கூறியதாவது: மொழிமாற்றத்திற்கு மாநில அரசிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளீர்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய முடியாத மற்றும் அதற்கு சமமான வார்த்தைகள் உள்ளதா என்பதற்குரிய பட்டியலை மாநில அரசிடம் சி.பி.எஸ்.இ.,கோரியிருக்கலாமே? வினாக்கள் தெளிவின்றி இருப்பதற்கும், முழு தவறுக்கும் வேறுபாடு உள்ளது.இங்கு வழக்கு தாக்கலானதும் ஒருநாள் முன்கூட்டியே அவசரமாக 'நீட்' தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? வினாக்களில் குழப்பமின்றி, அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். பீஹாரில் 'நீட்' தேர்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எப்படி. இங்கு ஏழை மாணவர்கள் பால் பாக்கெட், நாளிதழ் போடுதல் போன்ற பணிகளை செய்து சிரமப்பட்டு தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ., தகுந்த முடிவை எடுத்திருக்கலாம். பள்ளியில் படிக்காமல் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு எழுத வாய்ப்பு மறுப்பது சரியல்ல. இவ்விவகாரத்தை சி.பி.எஸ்.இ., ஜனநாயகப்பூர்வமாக கையாண்டிருக்கலாம். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024