Saturday, July 7, 2018

தமிழகத்தில் நடத்துனரில்லா பேருந்து பயணம்... விளைவுகள் என்ன?


ஜெ.அன்பரசன்  vikatan 

ஒரு பேருந்தின் காலஓட்டம் என்பது சுமாராக 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் மட்டும்தான். அதன்பின்பு, அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக் கூடாது



தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஏற்படக்கூடிய பயம், வேறெந்த வாகனங்களில் செல்லும்போது ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் ஒன்றா... இரண்டா, சொல்வதற்கு? படிக்கட்டுகள் இருப்பதில்லை; அமர்வதற்கு சீட்கள் இருப்பதில்லை; மேற்கூரை காற்றில் பறக்கும் அவலம்; உடைந்து தொங்கும் கண்ணாடிகள்; மழை பெய்யும்போது பஸ்ஸுக்குள் குடைபிடிக்கும் நிலைமை; பேருந்துகளைச் சுத்தப்படுத்தாமை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 60 சதவிகிதத்துக்கும் மேலான பேருந்துகள் காலாவதியானவை. அதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் 22,533 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், சென்னை மாநகரப் பேருந்துகள் (MTC) 3,688; நகரப் பேருந்துகள் (TOWN SERVICE) 6,916; புறநகர் சேவைப் பேருந்துகள் (MOFUSSIL SERVICE) 8,561: மலைவழிப் பேருந்துகள் (GHAT SERVICE) 528, மாவட்டங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (INSIDE STATE) 648; வெளிமாநிலங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (OUTSIDE STATE) 435; ஸ்பேர் பஸ்கள் (SPARE BUS) 1,757. இதில், காலாவதியான 60 சதவிகிதப் பேருந்துகள் என்பவை சுமாராக 14,000- க்கும் மேல். ``ஒரு பேருந்தின் காலஓட்டம் என்பது சுமாராக 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் மட்டும்தான். அதன்பின்பு, அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக் கூடாது'' என்கின்றனர் பேருந்தை இயக்குபவர்கள். ஆனால், என்ன செய்வது? அரசு சொல்வதைத்தானே அவர்கள் கேட்டாக வேண்டும்.



இந்த நிலையில்தான் 134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட 515 பேருந்துகளை முதற்கட்டமாக வாங்கியுள்ளது தமிழக அரசு. இந்தப் பேருந்துகள் அனைத்தையும் கடந்த 3- ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். சென்சார் தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், தாழ்தளப் படிக்கட்டுகள், பேருந்துக்கு முன்னேயும் பின்னேயும் வரும் வாகனங்களைத் துல்லியத் தன்மையுடன் அறிந்துகொள்ள சென்சார் கருவிகள், ஜி.பி.எஸ். கருவி, சி.சி.டி.வி கேமரா போன்ற சிறப்பம்சங்களுடன் இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 515 பேருந்துகளில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு (சென்னை) 40 பேருந்துகளும், விழுப்புரம் கழகத்துக்கு 60 பேருந்துகளும், சேலம் கழகத்துக்கு 78 பேருந்துகளும், கோவை கழகத்துக்கு 172 பேருந்துகளும், கும்பகோணம் கழகத்துக்கு 64 பேருந்துகளும், மதுரை கழகத்துக்கு 32 பேருந்துகளும், நெல்லை கழகத்துக்கு 69 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளில் 500 பேருந்துகளை நடத்துநர்கள் இல்லாமல் இயக்குவதுதான் தமிழக அரசின் திட்டம்.

  முதற்கட்டமாகச் சேலத்தில் 40 பேருந்துகள், கோவையில் 91 பேருந்துகள், விழுப்புரத்தில் 28 பேருந்துகள், கும்பகோணத்தில் 42 பேருந்துகள், மதுரையில் 10 பேருந்துகள், நெல்லையில் 20 பேருந்துகள் என மொத்தம் 231 பேருந்துகள் நடத்துநர்கள் இல்லாமல் இயக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமையைக் குறைப்பதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு நீண்டகாலமாகச் சிந்தித்து வருவதாகச் சொல்லிவந்தது. இதனையடுத்து, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டம்தான் நடத்துநர்களின் களையெடுப்புப் பணி. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ``நவீன வசதிகளுடன் கூடிய பேருந்துகள் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால், நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகள் இயக்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தினை உருவாக்கும்'' என்கின்றனர் போக்குவரத்துக் கழகத்தினர்.

இதைப்பற்றி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். ``தமிழகத்தில் இருக்கும் 22,533 அரசுப் பேருந்துகளில் 14,000-க்கும் மேல் காலாவதியானவை. ஆனாலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வேறுவழியில்லாமல் அந்தப் பேருந்துகளை இயக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால்தான் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தில் புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவே இல்லை. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு 5,000 புதிய பேருந்துகளை வாங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாகத் தற்போது 515 நவீன சொகுசுப் பேருந்துகள் இயக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. இது, படிப்படியாக உயர்ந்தால் காலாவதியான பேருந்துகள் அனைத்தும் பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். இது, அனைவருக்குமே நல்ல விஷயம்தான். அதேவேளையில், நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தினை உருவாக்கும். காசை மிச்சப்படுத்த வேண்டும் என்று நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது என்பது, அப்பாவி மக்களை அபாயத்தில் தள்ளிவிடும்.



மேலை நாடுகளில் நடத்துநர்கள் இல்லாமல் ஓட்டுநர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலை நாடு என்பது இந்தியாவுக்கு முற்றிலும் வேறுபட்டது. மேலை நாடுகளில் எதிர்திசையில் வாகனங்கள் வருவதில்லை. அத்துடன், அங்கு வாகனப் பெருக்கமும் குறைவு. ஆனால், இந்தியாவில் வாகனப் பெருக்கம் அதிகம். முக்கியமாக மேலை நாடுகளில் சாலை விதிகளை மக்கள் பின்பற்றுவார்கள். ஆனால், இந்தியாவில் அப்படியா? ஒரு இக்கட்டான நேரத்தில் நடத்துநர் சிக்னல்தான் பேருந்துக்கு மிக அவசியம். நீண்டப்பயணங்களின்போது ஓட்டுநருக்குச் சலிப்பு ஏற்படாமல் இருக்க, நடத்துநர் பேச்சுக் கொடுத்துகொண்டும் இருப்பார். அதுமட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களின் நெளிவு சுளிவுகளைக் குறித்து ஓட்டுநருக்கு, நடத்துநர் எச்சரிக்கை செய்வார். பேருந்தை ஓட்டுவது ஓட்டுநர் வேலை என்றால், அந்தப் பேருந்தை முழுவதும் கண்காணிப்பது நடத்துநரின் வேலை. இந்தியா போன்றதொரு நாட்டில் நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவது என்பது சாத்தியமற்றது. அதோடு, போக்குவரத்து ஊழியர்களும் பாதிப்படைவார்கள். இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக அனைத்துப் பேருந்துகளையும் நடத்துநர்கள் கொண்டு இயக்கப்பட வேண்டும். இதற்காகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடுவோம்" என்றார் மிகத் தெளிவாக.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024