வாட்ஸ் அப்பில் பரவும் போலி கூப்பன்கள்!
வாட்ஸ் அப்பில் பரவும் போலி கூப்பன்கள்!
முன்னணி பிராண்டுகளின் போலி கூப்பன்கள் வாட்ஸ் அப் செயலியில் பரவி வருகின்றன. இதுபோன்ற இலவச கூப்பன் சம்பந்தமான குறுஞ்செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள தளத்துக்கு (லிங்க்) சென்று பார்க்கும்போது வாடிக்கையாளரின் சுயவிவரங்கள் பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றன. அவ்வாறு பதிவுசெய்யப்படும் விவரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் டி-மார்ட் சூப்பர் மார்க்கெட்டின் 17ஆவது ஆண்டு வெற்றியை முன்னிட்டு வாட்ஸ் அப்பில் ரூ.2500 மதிப்பிலான இலவச ஷாப்பிங் கூப்பன் வழங்கப்படுவதாகப் போலியான குறுஞ்செய்திகள் பரவின. இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை தரப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் கூறுகையில், “இதுபோன்ற போலி கூப்பன் சம்பந்தமான குறுஞ்செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்த்தால் அந்த நிறுவனங்களின் உண்மையான இணையதள பக்கம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள போலி இணையதளப் பக்கம் தோன்றுகின்றன. அதில் வாடிக்கையாளரின் சுயவிவரங்கள் கேட்கப்படுகின்றன. இதுபோன்ற போலியான இணையதள முகவரியை உற்று நோக்கினால் அந்த லிங்க்கில் உள்ள ஐ (i) என்னும் ஆங்கில எழுத்திற்குப் பதிலாக ஐ போலவே மற்றொரு எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம்” என்று கூறியுள்ளார்.
ஜெட் ஏர்வேஸ், அடிடாஸ் உள்ளிட்ட முன்னணி பிராண்ட் நிறுவனங்களின் போலி சலுகைகள் குறித்தும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில காவல் அதிகாரி பிரிஜேஷ் சிங் கூறியதாவது: “தனிநபர் சம்பந்தமான தனிப்பட்ட ஆவணங்களையும் விவரங்களையும் பெறுவதற்கு இதுபோன்ற போலியான லிங்க்குகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதுபோன்ற போலியான இலவச கூப்பன்கள் குறித்த குறுஞ்செய்திகள் வரும்போது அவற்றைச் சாதுரியமாகத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment