Friday, July 6, 2018


திருடனை பிடித்த நிஜ, 'ஹீரோ'வுக்கு டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை

Added : ஜூலை 06, 2018 00:41




சென்னை : செயின் பறிப்பு திருடனை, சினிமா, 'ஹீரோ' போல, துணிச்சலாக, தனி நபராக விரட்டிப்பிடித்த சூர்யாவுக்கு, சென்னை மாநகர போலீசார், டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'ஏசி மெக்கானிக்' வேலை வாங்கி தந்துள்ளனர்.

சென்னை, அண்ணா நகரை சேர்ந்தவர், அமுதா, 50; டாக்டர். வீட்டின் கீழ் தளத்தில், 'கிளினிக்' நடத்தி வருகிறார். இவர், ஏப்ரல், 17ம் தேதி இரவு, 8:40 மணிக்கு கிளினிக்கில் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர், அவர் அணிந்திருந்த, 10 சவரன் செயினை பறித்து தப்பினான். கிளினிக்கை விட்டு வெளியே வந்த, அமுதா கூச்சலிட்டார்.

அப்போது, அங்கு நின்றிருந்த, அண்ணாநகர், சி.வி.நகர், பாரதி தெருவைச் சேர்ந்த சிறுவன், சூர்யா 17, துணிச்சலாக, சினிமா ஹீரோ போல, செயின் பறிப்பு திருடனை, மின்னல் வேகத்தில் துரத்தினான். திருடனை கீழே தள்ளி, நெஞ்சில் ஏறி உட்கார்ந்து, செயினை மீட்டான். அவனது துணிச்சல் நடவடிக்கையால் வியந்த, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

அப்போது, 'ஏசி மெக்கானிக் கடையில் வேலை பார்க்கிறேன். பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லை. உடன் பிறந்தோரும் கிடையாது. ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுங்கள்' என, கமிஷனரிடம், சூர்யா கேட்டுள்ளான்.

ஒன்பதாம் வகுப்பு படித்துள்ள அவனை, போலீசார் தொடர்ந்து படிக்க வைக்க முயன்றனர். ஆனால், அவன், 'வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்' என, தெரிவித்து விட்டான். எனவே, அவனுக்கு, 18 வயதாகட்டும் என, போலீஸ் கமிஷனர் காத்திருந்தார்.

தற்போது, அண்ணா சாலையில் உள்ள, டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'ஏசி மெக்கானிக்' வேலை வாங்கி தந்துள்ளார். சென்னை, வேப்பேரியில், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில், நேற்று, டி.வி.எஸ்., நிறுவன, மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர், சீனிவாசன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

சூர்யாவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 'ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ்' நிர்வாகிகள் மற்றும் எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் தலைவர், ரவி பச்சமுத்து ஆகியோர், மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.

'ஒளிவீசும் எதிர்காலம்!'

டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை பெற்ற சூர்யா கூறியதாவது: திருடனை பிடிக்கும் போது, பலர் உதவி செய்வர்; பாராட்டுவர் என, நினைத்து பார்க்கவில்லை. போலீஸ் கமிஷனர், தன் மகன் போல், என் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளார்.

அண்ணா நகர் காவல் நிலைய போலீசார், தங்களின் செல்லப்பிள்ளை போல பார்த்துக் கொள்கின்றனர். டாக்டர் மல்லிகாவும், அவர்களது குடும்பத்தில் ஒருவன் போல் பாசம் காட்டி வருகிறார். அறிமுகமே இல்லாதவர்கள் பாராட்டுகின்றனர். போலீசார் என் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, மூன்று லட்சம் ரூபாயை, 'டிபாசிட்' செய்துள்ளனர்.

பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான், போலீசாரால் குற்றங்களை குறைக்க முடியும். திருடனை துணிச்சலுடன் பிடிக்கும் போது, வேகம், விவேகம் இரண்டும் முக்கியம். செருப்பு இல்லாமல், பள்ளிக்கு சென்றுள்ளேன். 'ஏசி மெக்கானிக்' கடையில் வேலை பார்த்த போது, என் வருமானத்திற்கு ஏற்ப, செருப்பு வாங்கி அணிந்து வந்தேன். ஒரு நாளாவது, 'ஷூ' போட மாட்டோமா என, ஏங்கியுள்ளேன்.

சென்னை மாநகர போலீசாரால், 'ஷூ' போட்டு, காக்கி சீருடை அணிந்து, டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலைக்கு செல்லப் போகிறேன். நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவன் கூறினான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024