Saturday, July 7, 2018


முதியோர் பாதுகாப்பு மசோதா!

By ஆசிரியர் | Published on : 04th July 2018 01:31 AM

 உலகிலேயே அகவை அறுபதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது இந்தியா. ஒருபுறம் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே மற்றொருபுறம் முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2050-இல் இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 20% முதியோர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல முதியோர்களுக்கான மருத்துவ வசதிகளையும் சமூகப் பாதுகாப்பையும் உருவாக்குவதற்கான முனைப்பில் நாம் ஈடுபட்டாக வேண்டும்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு முதியோருக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்கிறது. அதேபோல மருத்துவமனைகள், முதியோர் சிறப்பு மருத்துவத் தேவைகள் என்று முதியோர் நலன் பேணலை மேலை நாடுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அதுபோன்ற திட்டமிட்ட முதியோர் நலன் பேணலுக்கான வளர்ச்சியில் இந்தியா இதுவரை முனைப்பும் காட்டவில்லை; முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.

இந்தியாவில், அறுபது வயதுக்கும் மேலான முதியோர்களில் ஏறத்தாழ 7% தனியாக வாழ்கிறார்கள். தங்கள் இணையருடன் வாழ்பவர்கள் 11%. குடும்பங்களுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 35%. இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் தங்களது பெற்றோர்களுக்காக கவலைப்பட போதுமான நேரமோ, அக்கறையோ இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வேதனை. அதிலும் குறிப்பாக, வேற்று இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பிள்ளைகள் வேலை தேடி இடம் பெயர்ந்து விடுவதால் மூத்த குடிமக்களில் பலரும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோடி அரசு மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக கொண்டுவர இருக்கும் சட்டத்திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு பாகங்களில் முதியோர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு நாடுகள் அதைத் தடுக்கவும் முதியோர்களை புறக்கணிப்பது, கைவிடுவது போன்ற செயல்களை எதிர்கொள்ளவும் சட்டம் இயற்றி வருகின்றன. இந்தியாவில் 2007-இல் முந்தைய மன்மோகன் சிங் அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தை இயற்றி இருந்தாலும், அதில் காணப்பட்ட பல்வேறு குறைகளால் அந்தச் சட்டம் நடைமுறையில் பலன் அளிக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது நரேந்திர மோடி அரசின் சமூக நீதி அமைச்சகம் மூத்த குடிமக்கள் மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர இருக்கிறது.
இந்தத் திருத்த மசோதா, வரும் மழைக்காலத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவிலுள்ள 20 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 32 சதவீத மூத்த குடிமக்கள் தங்களது பிள்ளைகளால் அவமரியாதைக்கும், கைவிடப்படலுக்கும் ஆளாகிறார்கள். 56 சதவீத நிகழ்வுகளில் மகன்களும், 23 சதவீத நிகழ்வுகளில் மருமகள்களும் அதற்குக் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. அவமரியாதைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகியிருக்கும் மூத்த குடிமக்களில் 80%-கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப கெளரவத்திற்காக அதை வெளியில் தெரிவிக்காமல் சகித்துக்கொள்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத் திருத்த மசோதா 2018-இன்படி, இந்தியாவிலுள்ள மாவட்டங்களில் மட்டுமல்லாமல் அனைத்து வட்டங்களிலும் மூத்த குடிமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். போதுமான உணவு, இருப்பிடம், உடை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை தங்களது பிள்ளைகளிடமிருந்து கிடைக்காமல் போனால் மூத்த குடிமக்கள் அந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். அவர்களது குறைகளும் பிரச்னைகளும் ஆணையத்தால் 90 நாள்களில் தீர்வு காணப்பட வேண்டும்.

தங்களது சொந்த சேமிப்பிலும் வருமானத்திலும் பூர்விக சொத்திலும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத மூத்த குடிமக்கள் இந்த ஆணையத்தை அணுகலாம். ஆணையம் அவர்களது பிள்ளைகள் அல்லது சட்டப்படியான வாரிசுகள் அதிகபட்சமாக ரூ.10,000 வரை வழங்க உத்தரவிட முடியும்.

தங்களது பெற்றோரை புறக்கணிக்கும் வாரிசுகளுக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை வழங்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. புதிய திருத்த மசோதா ஏற்கெனவே உள்ள சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. முதியோர்களின் பாதுகாப்புக்காகவும் தேவைக்காகவும் மருத்துவமனைகளையும், முதியோர் இல்லங்களையும் நிறுவ வழிகோலுகிறது. அதேபோல மூத்த குடிமக்களின் முழு அனுமதியில்லாமல் அவர்களின் பாதுகாப்பாளர்கள் அவர்களது சொத்துகளை விற்பது தடை செய்யப்படுகிறது. மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை, தூரத்து உறவினர்களின் மீதும் இந்தத் திருத்த மசோதா சுமத்துகிறது.
இந்தத் திருத்த மசோதாவின்படி, மூத்த குடிமக்களுக்கான எல்லா வசதிகளும் கொண்ட பாதுகாப்பு மையங்களை நிறுவும் கடமையை மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த திருத்த மசோதா ஏற்படுத்துகிறது. அதேபோல தன்னார்வ அமைப்புகள், மூத்த குடிமக்களுக்கான மையங்களையும், முதியோர் இல்லங்களையும், மருத்துவ வசதி மையங்களையும் ஏற்படுத்துவதற்கு அரசு ஊக்கமும் உதவியும் தருவதை இந்த மசோதா உறுதிப்படுத்துகிறது.

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்படுத்தப்பட்டால் மூத்த குடிமக்களின் கெளரவமும் நல்வாழ்வும் உறுதிப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024