Saturday, June 8, 2019


5 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு: 14 முதல் விண்ணப்பிக்கலாம்

By DIN | Published on : 08th June 2019 02:55 AM |
 

தமிழகத்தில் காலியாகவுள்ள குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்கள் அடங்கிய குரூப் 4 தேர்வும் தனித்தனியாக நடத்தப்பட்டன. இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு இரண்டு தேர்வுகளும் இணைக்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் குரூப் 4-பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டன. அதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 14-இல் வெளியிடப்பட்டது. மொத்தமாக 9 ஆயிரத்து 351 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், மீண்டும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்டது.


எவ்வளவு காலியிடங்கள்: தேர்வு குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குரூப் 4 காலிப் பணியிடங்கள் நேரடி எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு அறிவிக்கை வரும் 14-இல் வெளியிடப்படும். அதாவது அன்றைய தினத்தில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. இணையதளங்களில் (www.tnpsc.gov.in, www.tnpsc.exams.net) விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடத்தப்படும். தேர்வுக்கான கல்வித் தகுதி, வயது, இடஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வாணைய இணையதளத்தில் வரும் 14-ஆம் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. எத்தனை காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது என்பது குறித்த விவரத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடவில்லை.

இதுகுறித்து, தேர்வாணைய வட்டாரங்களிடம் கேட்டபோது, வரும் 14-ஆம் தேதி தேர்வு அறிவிக்கை வெளியிடும்போது காலியிடங்களின் எண்ணிக்கை விவரம் தெரிய வரும். 5 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு அதிகமாகவே தேர்வு நடத்தப்படும். இப்போது வரை காலியிடங்களுக்கான விவரங்கள் அரசுத் துறைகளிடம் இருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. எனவே, தேர்வு அறிவிக்கை வெளியிடும் நேரத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன எனத் தெரிவித்தனர். கடந்த குரூப் 4 தேர்வை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த ஆண்டும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024