Sunday, December 7, 2014

குழந்தை விரல் சூப்புவது ஏன்?

பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தான் தெரியும். ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால் விளைவுகள் விபரீதமாகிவிடும். இதற்கு நல்லதொரு உதாரணம், குழந்தைகளிடம் காணப்படும் விரல் சூப்பும் பழக்கம்.

தாயின் கருப்பையில் இருக்கும்போதே, குழந்தை விரல் சூப்புகிறது. தாயின் கருப்பையில் பழகிய அப்பழக்கத்தை, வெளியுலகுக்கு வந்த பிறகும் தனிமையை உணரும்போது தொடர்கிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை இப்பழக்கம் இருக்கும். அதன் பிறகு மறைந்துவிடும். சில குழந்தைகளுக்கு மட்டும் ஏழு வயதுவரை இது தொடரும். இதுதான் பல பெற்றோருக்குக் கவலை தரும் பிரச்சினை.

என்ன காரணம்?

விரல் சூப்பும் பழக்கம் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளைவிடப் புட்டிப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணமும் இருக்கிறது. குழந்தை ஆசைப்படும்வரை தாய் தன்னிடம் பால் குடிக்க விட்டுவிடுகிறார். குழந்தையும் தன் ஆசை தீரக் குடித்து, அப்படியே உறங்கிவிடுகிறது. விரல் சூப்ப நினைப்பதில்லை.

அதேவேளையில், குழந்தை புட்டிப்பால் குடிக்கும்போது, புட்டியில் பால் காலியானதும் தாய் அதை அப்புறப்படுத்திவிடுகிறார். இதனால் குழந்தைக்குச் சுவைக்கும் இன்பம் நிறைவடைவதில்லை. இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்ய குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.

குழந்தைக்குத் தூக்கம் வரும்போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் கிடைக்காவிட்டால், விரல் சூப்பும் பழக்கம் ஏற்படுகிறது. சரியாகத் தூக்கம் பிடிக்காதபோது, சோர்வாக இருக்கிறபோது, போரடிக்கும்போது… இப்படிப் பல சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதுகாப்புக் கவசமாக நினைத்து, குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.

வளரும் பருவத்தில் தாய், தந்தையின் பாசத்தைக் குழந்தை எதிர்பார்க்கிறது. அதற்குப் பேச்சுத் துணை தேவைப்படுகிறது. மற்ற குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படுகிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்று குழந்தை விரும்புகிறது. இந்த வாய்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாதபோது, குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் உண்டாகிறது.

சில குழந்தைகள் பசி எடுக்கும்போதெல்லாம் விரல் சூப்பும். இன்னும் சில குழந்தைகள் பல் முளைக்கத் தொடங்கும்போது, ஈறுகளில் உண்டாகிற உறுத்தல் காரணமாக விரல் சூப்பத் தொடங்குவார்கள். பல் முளைத்த பிறகு பத்தில் எட்டுக் குழந்தைகள் இந்தப் பழக்கத்தை நிறுத்திவிடுகின்றனர். மீதி இரண்டு குழந்தைகள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

பயப்படும் குழந்தைகள் கவனம்!

பயம், பதற்றம், ஏமாற்றம், திகில், அதிர்ச்சி, கவலை, கோபம், பிரிவு, தனிமை, இயலாமை, புறக்கணிப்பு போன்ற மனம் சார்ந்த காரணங்களால் குழந்தை சிரமப்படும்போது அவற்றை மறைக்கவும், மாற்றவும், மறக்கவும் விரல் சூப்புகிறது.

பெற்றோரின் கவனம் இல்லாத குழந்தைக்கும் அதனால் பயப்படும் குழந்தைக்கும் விரல் சூப்பும் பழக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

விரல் சூப்பும் பழக்கத்தால் உளவியல் ரீதியாகத் தனக்குப் பிடித்தமான சூழலைக் குழந்தை உணருகிறது என்பதால், ஒரு வயதுவரை இந்தப் பழக்கத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு மேலும் இந்தப் பழக்கம் தொடருமானால், உடனே கவனிக்க வேண்டும்.

என்னென்ன பாதிப்பு?

எந்த நேரமும் குழந்தை விரல் சூப்பிக்கொண்டிருந்தால், நோய்க்கிருமிகள் உடலுக்குள் எளிதாக நுழைந்துவிடும். இதன் விளைவாக வாய்ப்புண், வாய்நாற்றம், குடல் புழுத்தொல்லை போன்றவை ஏற்படலாம். நான்கு வயதுவரை இந்தப் பழக்கம் இருந்தால், குழந்தையின் தாடை பாதிக்கப்படும். பற்களிலும் ஈறுகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தெற்றுப்பற்கள் முளைக்க இந்தப் பழக்கம் ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக, தாடைப் பகுதியில் காய்ப்பு காய்த்ததுபோல் ஆகி, நிரந்தரப் பற்கள் முளைத்து வெளிவருவது தடைபடும். அப்படியே பற்கள் முளைத்தாலும், முன்னால் இருக்கும் நான்கு பற்கள் தூக்கினாற்போல் ஆகிவிடும். முகத்தின் தோற்றமே மாறிவிடும்.

பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்தால், குழந்தை மனதளவில் மேலும் பாதிக்கப்பட்டு, தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்.

இந்தப் பழக்கம் உள்ள குழந்தைகளுக்குப் பேச்சு தெளிவாக இருக்காது. இவர்களுடைய கவனம் விரல் சூப்புவதிலேயே இருப்பதால் சிந்தித்துச் செயலாற்றும் திறன் குறைவாகவே இருக்கும். விளையாட்டு, நட்பு, பாசம், சுயமுயற்சி போன்ற அனுபவங்கள் இவர்களுக்குக் குறைவாக இருப்பதால், மன வளர்ச்சியும் வயதுக்கு ஏற்றபடி இருக்காது.

விடுவிக்க என்ன செய்யலாம்?

விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவதற்குக் குழந்தையை அடிப்பதோ, மிரட்டுவதோ தவறு. இது உளவியல் ரீதியாகப் பாதிப்பை அதிகப்படுத்துமே தவிர குறைக்க உதவாது. மேலும், குழந்தைகள் விரல் சூப்பும்போது விரல்களை வலுக்கட்டாயமாக இழுப்பது, உங்கள் மீது வெறுப்பையே ஏற்படுத்தும். குழந்தையிடம் வெறுப்பாகப் பேசுவதைக் கைவிட வேண்டும். அதன் சின்னச் சின்ன ஆசைகளைப் புறக்கணிக்கக் கூடாது. மாறாக, அன்பான அணுகுமுறையால்தான் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியும்.

குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்புவதுதான் இதில் முக்கியம். குழந்தை எதன் மீது ஆசைப்படுகிறதோ, ஆர்வமாக இருக்கிறதோ அதைக் கொடுத்து, இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியும். குழந்தையைப் புரிந்துகொண்டு, அதன் ஏக்கத்தைப் போக்குவதற்கு ஏற்ப மகிழ்ச்சியான சூழலை உருவாக்கித்தர வேண்டும். முக்கியமாகச் சிறு குழந்தைகளை அவர்கள் போக்கில் விளையாட அனுமதிக்க வேண்டும். கண்களுக்கும் கைகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தும்படியான விளையாட்டுகளை ஊக்கப்படுத்தலாம். கைவிரல்கள் எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கும்போது, விரல் சூப்பத் தோன்றாது.

வழக்கமாகத் தூங்கப் போகும் நேரத்தில்தான் குழந்தைக்கு விரல் சூப்பத் தோன்றும். அப்போது அதன் கையில் புத்தகத்தைக் கொடுத்துக் கதை சொல்வது, அணைத்தபடி தூங்கவைப்பது, கைகளால் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்க வைப்பது… இப்படி அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தினால், குழந்தை மெல்ல மெல்ல இந்தப் பழக்கத்தை மறந்துவிடும்.

இரண்டு வயதுவரை குழந்தையைத் தனிமையில் விடுவதைத் தவிருங்கள். அந்தக் காலகட்டத்தில் குழந்தையுடன் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள். அதிகம் பேசி, விளையாட்டுக் காட்டி உற்சாகப்படுத்துங்கள். நிறைய கதை சொல்லுங்கள். சில நாட்கள் குழந்தை விரல் சூப்பாமல் இருந்ததைப் பாராட்டிப் பரிசளித்து ஊக்கப்படுத்துங்கள். விரல் சூப்புவதை நிறுத்த ‘டெனடோனியம் பென்சோயேட்’ (Denatonium benzoate) எனும் திரவ மருந்து இருக்கிறது. இதைக் காலை, மாலை என இரு வேளைக்கு விரலில் தடவலாம். ஐந்து வயதுக்கு மேலும் குழந்தைக்கு இப்பழக்கம் தொடருமானால், இதை நிறுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட கருவியைக் கையாளுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024