எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஊரும் உறவோடும் கொண்டாடி மகிழ்வது தமிழர்களின் பண்பாடு. அத்தனை விஷயங்களிலும் தவறாது மகிழ்ச்சியின் அடையாளமாக நாம் முன்னிறுத்துவது இனிப்பு.
பழங்காலம் தொட்டே ஒவ்வொரு நல்ல காரியங்களையும் இனிப்புடனே தொடங்கி உள்ளனர் நம் தமிழ் மக்கள்.
இதனால்தான் தமிழர்களின் கலாச்சாரத்தில் எத்தனை எத்தனை இனிப்பு பட்சணங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அதில் ஒரு இனிப்பின் பெயரைச் சொன்னால், முகத்தில் புன்னைகையும் நாவில் கரைந்து செல்கிற உணர்வும் உடனே வெளிப்படும். அது அல்வா...
யாரிடமாவது நாம் ஏமாற்றப்பட்டால் 'அவன் எனக்கு அல்வா கொடுத்துட்டான் பா 'என்போம். ஆனால் தன் சுவையில் அல்வா என்றுமே ஏமாற்றுவதில்லை. முத்தாய்ப்பாக நாம சாப்பிடும் அல்வாவிற்கு மூன்று மாதம் வரை கியாரண்டி தருகிறது , மதுரை கீழ ஆவணி மூல வீதியில் இருக்கும் ''ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை''
என்னங்க முழிக்கறீங்க....இது நாம கொடுக்கிற பாராட்டு அல்ல, கடையின் பெயரே அதுதான்.
மதுரையில் நான்கு தலைமுறையினராக நடத்திவரப்படுகிறது என்பதும் ஆச்சர்யமான தகவல். கடைவழியாக செல்வோர் மிதந்துவரும் அல்வாவின் நெய்வாசத்தில் ஒரு கணம் நின்று செல்லவைக்கிறது. மற்றபடி இந்த கடைக்கு எந்த விளம்பரங்களும் கிடையாது. சிறிய கடைதான் ஆனால் நிறைய வாடிக்கையாளர்கள், சுத்தமான நெய்மட்டுமே கொண்டு தயாரிப்பதுதான் இவர்களது ஸ்பெஷல்.
ஒரு முறை குறிப்பிட்ட அளவு அல்வா தயாரிக்க குறைந்தபட்சம் 6 நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர். முதல்நாள் கோதுமையை ஊற வைப்பது, பால் எடுப்பது, புளிக்கவைப்பது, பின் செயல்முறைகள் என்று ஒவ்வொரு நாளும் பக்குவமாக தயாரிக்கின்றனர்.
உள்ளுர் வாடிக்கையாளரான எஸ்.சேர்மக்கனி, “ பாரம்பரிய கடை இது. எட்டு வருடமா நான் இங்க அல்வா வாங்கிட்டு வர்றேன். என் பிள்ளைகளுக்கு இந்தஅல்வாவை ரொம்ப பிடிக்கும்.
நல்ல முறையில் இங்கு செய்துதருகிறார்கள். தரமானதா இருக்கும். பெரிய கடைகள்ல கூட இப்படி ஒரு சுவையை நான் கண்டதில்லை. உண்மையை சொல்லனும்னா எங்க குடும்பம் இந்த கடையின் அல்வாவிற்கு அடிமை" என்றார்.
நான்காவது தலைமுறையாக இந்தக் கடையை நடத்திவரும் கி.ரமேஷிடம் பேசினோம்.
“ எங்க கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, இப்போ நான்னு நாலாவது தலைமுறையா இந்தக் கடையை நடத்திவர்றோம். நாங்க தயாரிக்கிற அல்வாவிற்கு கியாரண்டி மூன்று மாதம் வரை தர்றோம். ஆனாலும் 100%. சதவீதம் அல்வாவின் நிறம், சுவை, மணம் எதுவும் மாறாது“ என்றார் மென்மையான புன்னகையோடு.
“தரம் தான் எங்க கடையோட பலமா கருதுகிறோம். என்னதான் எங்க கடையின் அல்வா பிரபலம்னாலும் கடைக்கு வர்றவங்ககிட்ட எடுத்ததும் ஆர்டர் எடுப்பதில்லை. காரம், அல்வா இதில் எதை கேட்கறாங்களோ இதில் கொஞ்சம் ருசி பார்க்கிறதுக்கு கொடுப்போம். அவங்க சாப்பிட்டு திருப்தியாக தலையசைத்தபின் பின் அவங்க கேட்டதை கட்டித் தருவதை இன்றளவும் வழக்கமாக வெச்சிருக்கோம்.
இதற்காகவே ஒரு நாளைக்கு தினம் 5 கிலோ காரம், இனிப்பு செலவிடுகிறோம். இதுதான் எங்கள் கடைக்கான விளம்பரம்“ என்றபடி வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தார்.
''ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்கடையில்'' பல்வேறு திருமணம், சினிமா, அரசியல் பிரமுகர்கள் வீடுகளுக்கு ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்.
மதுரையின் முக்கியப் புள்ளி ஒருவர் இந்த கடைக்கு தீவிர ரசிகர் என்கிறார்கள். “அண்ணனை பார்க்கப் போறியா, மிட்டாய்க் கடையில கொஞ்சம் அல்வா கட்டிக்கிட்டுப் போ. போன காரியம் முடியும் “ என்ற வார்த்தை அவரின் வட்டாரத்தில் பிரசித்தமாம்.
கடையின் பிரபல்யமும் அல்வாவின் வாசமும் மக்களிடையே பரவி இருந்தாலும் பல வருடங்கள் ஆகியும் கடை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதுபற்றிக் கேட்டால், “ பெயருக்கேத்த கடை, கடைக்கேத்த பெயர் என்கிறார், இந்த ஆதிகாலத்து ஒரிஜினல் கடைக்காரர்.
அல்வா மட்டுமின்றி காரமான காராசேவும், தாமரை இலையில் சுற்றிய உருளைக்கிழங்கு மசாலாவும் இந்தக் கடையில் பிரசித்தம்.
ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடையினை விட்டு நாம் வெளியேறி சில மணி நேரங்கள் கழித்தும் அதன் வாசம் மனதிலேயே தவழ்கிறது. மதுரை மல்லியின் வாசத்திற்கு சரியான போட்டி இந்த அல்வாதான். பழமை என்றாலே நினைத்தாலும், ருசித்தாலும் சுவைதானே....
-சி.சந்திரசேகரன்
படங்கள்: ராஜமுருகன்
No comments:
Post a Comment