வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை நேரடியாக, வங்கியில் செலுத்தும் நடைமுறையைப் பொருத்தவரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பாஜக அரசுக்கும் இரண்டு வித்தியாசங்கள்தான்.
முந்தைய அரசு ஆதார் அட்டை கட்டாயம் என்றது. இன்றைய அரசு ஆதார் அட்டை இல்லாவிட்டால், வங்கி சேமிப்புக் கணக்கு விவரத்தைக் கொடுப்பது கட்டாயம் என்று கூறியுள்ளது. முந்தைய அரசு, மாதம் ஒரு எரிவாயு உருளை வீதம் ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு மானியம் கிடைக்கும் என்றது. இன்றைய அரசு, ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு மட்டுமே மானியம் என்கிறது.
வங்கிச் சேமிப்பு கணக்கை ஏற்றுக்கொள்வதும், ஆண்டுக்கு மொத்தம் 12 உருளைகளுக்கு மானியம் என்பதும், அடம்பிடித்து அழும் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பதைப் போன்றதுதான். அரசின் இலக்கு ஒன்றுதான். அதாவது, தற்போது பெட்ரோல், டீசலை சந்தை விலைக்கு வாங்கப் பழக்கிவிட்டதைப் போலவே, சமையல் எரிவாயு உருளை விவகாரத்திலும், மானியத்தை மெல்ல மெல்ல மறக்கடிக்க வைப்பதுதான்!
இந்தியாவில் எரிவாயுவுக்கான தேவை ஆண்டுதோறும் பெருகி வருகிறது. 2012-13-ஆம் ஆண்டு 13.5 லட்சம் டன் எரிவாயு உற்பத்தியானது. அது 2013-14-ஆம் ஆண்டில் 15 லட்சம் டன்னாக உயர்ந்தது. இவற்றில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு 75%!
2012-13 நிதியாண்டில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானியம் மட்டும் ரூ.46,458 கோடி என்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். ஆகவே, மத்தியில் ஆள்வது எந்த அரசாக இருந்தாலும், அவற்றின் ஒரே நோக்கம் சமையல் எரிவாயு உருளைக்கு மானியம் இல்லாமல் செய்வதே! ஆனால், அதைச் செய்யும்போது வாக்குவங்கிக்கு குந்தகம் ஏற்படாமல், ஒட்டகத்தின் மீது சுமையை ஏற்றி, ஒட்டகத்தின் திருப்திக்காக அதன் கண் எதிரில் ஒரு சிறு மூட்டையை கீழே வீசுவதைப்போன்று, சில கபட நாடகங்களை நடத்துகிறார்கள்.
இந்தியாவில் சுமார் 13 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் சற்றொப்ப 1.5 கோடி குடும்பங்கள் இணைப்பு பெற்றுள்ளன. இவற்றில் குறைந்தபட்சம் 10% இணைப்புகள் போலியானவை என்பது எண்ணெய் நிறுவனங்
களின் கணிப்பு. ஆதார் அல்லது வங்கிக் கணக்குடன் எரிவாயு இணைப்பை இணைத்து, நேரடி மானியம் வழங்கத் தொடங்கினால், இந்த 10% போலி இணைப்பை இல்லாமல் செய்துவிடலாம் எனக் கருதுகின்றன.
சில குடும்பங்கள், குடும்பத் தலைவர் இறந்தபிறகு எரிவாயு இணைப்பை வாரிசு பெயரில் மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வந்திருக்கின்றன. வருவாய்த் துறையில் வாரிசு சான்று பெறுவது "செலவு' ஏற்படுத்தும் என்பதால் மெத்தனமாக இருந்துவிட்டனர். இப்போது இவர்கள்தான் அல்லல்படப் போகிறார்கள். இவர்களுக்கான எளிய மாற்றுத் திட்டத்தையும் அரசு அறிவிக்க வேண்டும்.
2015 மார்ச் மாதத்துக்குப் பிறகு எல்லாருக்கும் சந்தை விலையில்தான் சமையல் எரிவாயு கிடைக்கும். ஜூன் மாதத்துக்குள் சேர்ந்தால் அந்த மூன்று மாத மானியத்தை பெறலாம். இல்லாவிட்டால் சந்தை விலையில்தான் அவர்கள் எரிவாயு உருளையைப் பெற முடியும். அதாவது, நேரடி மானியம் பெறுவோர் சந்தை விலைக்கு மறைமுகமாகப் பழகுவார்கள். மானியம் பெறாதவர்கள் சந்தை விலைக்கு நேரடியாகவே பழகிவிடுவார்கள். இதுதான் அரசின் திட்டம்.
வங்கிச் சேமிப்புக் கணக்கு இருந்தால் போதும் என விதித்தளர்வு ஏற்பட்ட பிறகும், ஆதார் அட்டை பணியை முடுக்கிவிடும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது ஏன்? இந்த விவகாரத்தில் எரிவாயு உருளையைக் காட்டிலும், இதை முன்வைத்து அனைவருக்கும் ஆதார அட்டை வழங்கிவிட வேண்டும் என்ற துடிப்பையே காண முடிகிறது. ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் ஆதார் இணைந்த நேரடி மானியத் திட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டால், அடுத்ததாக நியாயவிலைக் கடைகளில் பெறும் சர்க்கரை, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள் மானியத்தையும் இதே முறைக்குக் கொண்டுவந்துவிட முடியும்.
அனைவருக்கும் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு தருகிறோம் என்று கூறி, வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தவர்களின் மானிய விலை மண்ணெண்ணெய்க்கு அரசு முதலில் முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது நேரடி மானியம் என்கிற பெயரில் எரிவாயு மானியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருக்கிறது.
சந்தையில் முழு விலை கொடுத்து வாங்கிக்கொள். மானியத்தை வங்கியில் பார்த்துக்கொள் என்கிறது அரசு. முன்கூட்டியே முழுத் தொகையும் கட்டி எரிவாயு உருளையை வாங்குவது எத்தனை ஏழைகளுக்கு சாத்தியம்? அதைப்பற்றி யாருக்கென்ன கவலை!
No comments:
Post a Comment