Sunday, December 7, 2014

நேரடி காஸ் மானிய விவகாரத்தில் சிக்கல்: மக்களை குழப்பும் எண்ணெய் நிறுவனங்கள்

சமையல் காஸ் சிலிண்டருக்கு, நேரடியாக மானியம் பெறும் திட்டத்தில், இணைவதற்கான விண்ணப்பம் வழங்குவதில், பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள், மக்களை குழப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசு, ஜன., முதல் சமையல் காஸ் சிலிண்டருக்கு, வாடிக்கையாளர், வங்கி கணக்கில், நேரடியாக மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும்:

இத்திட்டத்தை, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த, அரசு, தீவிரம் காட்டி வருகிறது.அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவங்கள், நாடு முழுவதும் உள்ள, காஸ் ஏஜன்சிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.தமிழகத்தில் உள்ள, காஸ் ஏஜன்சிகள், நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்காக, ஆதார் அட்டை இருந்தால், ஒரு விண்ணப்பம்; ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, மற்றொரு விண்ணப்பம் என, இரண்டு வகை விண்ணப்பங்களை வழங்கி வருகின்றன.ஆனால், விண்ணப்ப படிவங்களை பெற, சம்பந்தப்பட்ட, காஸ் ஏஜன்சிகளுக்கு சென்றால், அங்கு, ஒரு விண்ணப்ப படிவத்தை மக்களிடம் கொடுத்து, அதை நகல் எடுத்துக் கொண்டு திருப்பித் தருமாறு, ஏஜன்சி ஊழியர்கள் கூறுகின்றனர்.இல்லையென்றால், அருகில் உள்ள, ஜெராக்ஸ் கடை முகவரியை கொடுத்து, அங்கு, ஐந்து முதல், 10 ரூபாய் கொடுத்து, படிவத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர். இதனால், மக்கள், வீணாக அலைகின்றனர்.
அவ்வாறு, பெறப்படும், விண்ணப்பம், ஆங்கிலத்தில் இருப்பதால், அதை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என, தெரியாமல் பலரும் தவிக்கின்றனர்.மேலும், விண்ணப்பங்களில், ஆதார் அட்டையின், நகலை ஒட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அதை எப்படி ஒட்டுவது என, புரியாமல், பலரும் தடுமாறி வருகின்றனர்.விண்ணப்பங்களில், 17 இலக்க சமையல் எரிவாயு இணைப்பிற்கான, கன்ஸ்யூமர் ஐ.டி.,யை பூர்த்தி செய்ய, இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐ.டி., பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லாததால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.அதுகுறித்து, ஏஜன்சி ஊழியர்களிடம் கேட்டால், '17 இலக்க கன்ஸ்யூமர் ஐ.டி.,யை ஏற்கனவே, எண்ணெய் நிறுவனங்கள், மொபைல்போன் மூலம், எஸ்.எம்.எஸ்., தகவலாக, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவிட்டன' என்கின்றனர். ஆனால், அந்த, எஸ்.எம்.எஸ்., பலருக்கும் வந்து சேரவில்லை. இதுதவிர, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் போது அளிக்கப்படும் ரசீதிலும், இந்த எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவலும் வாடிக்கையாளர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை.இதனால், கன்ஸ்யூமர் ஐ.டி.,யை பூர்த்தி செய்யாமல், விண்ணப்பத்தை முழுமையாக்கி கொடுக்க முடியாமல், பலர் தடுமாறுகின்றனர்.ஒவ்வொரு வாடிக்கையாளரும், ஆதார் அட்டை இணைத்த விண்ணப்பத்தை, காஸ் ஏஜன்சிகளிடமும், வங்கி கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட வங்கியிலும் கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வங்கியில், விண்ணப்பம் கொண்டு போய் கொடுத்தால், 'நீங்கள் கடைசியாக, வாங்கிய சிலிண்டர் ரசீது நகலை யும், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்; இல்லையென்றால், விண்ணப்பம் பெற மாட்டோம்' என, வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.கஸ்டமர் ஐ.டி., என்ற, 17 இலக்க எண்ணை அறிந்து கொள்ள தான், வங்கிகளில் இப்படி கேட்கப்படுகிறது என, கூறினாலும், அதற்காக எதற்கு, சிலிண்டர் வாங்கிய ரசீது கேட்க வேண்டும் என, புரியவில்லை.
இந்த குழப்பங்களால், பலரும், சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைய முடியாமல் தடுமாறுகின்றனர்; அலைகின்றனர்.ஜன., முதல், நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசால், அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மானியம் இல்லாமல், சந்தை விலை கொடுத்து, சிலிண்டர் வாங்கிய பின், மானிய தொகை, நேரடியாக வங்கி கணக்குக்கு வரவில்லை என்றால், யாரிடம் சென்று முறையிடுவது?

கோரிக்கை:

மானிய தொகை பயன்படுத்திய சிலிண்டருக்கு மட்டும் கிடைக்குமா அல்லது ஆண்டுக்கு இத்தனை முறை மானியம் வழங்கப்படுமா என்பது போன்ற பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.ஆனால், அந்த குழப்பங்களுக்கு, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உட்பட, யாரிடமும் சரியான பதிலை பெற முடியவில்லை.இதனால், நேரடி மானிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய முறைப்படியே காஸ் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
வலுத்துள்ளது.

எத்தனை பேர்?


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.75 கோடி சமையல் காஸ் வாடிக்கையாளர்கள்; 1,200 காஸ் ஏஜன்சிகள் உள்ளன

ஆதார் அட்டை அவலம்:


தற்போது, காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்காக, ஆதார் அட்டை வாங்க, அதற்கான மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால், ஆதார் அட்டை பெற வருவோரிடம், '2010ல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு இருந்தால் மட்டுமே, ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்' என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதனால், ஒப்புகை சீட்டு இல்லாத பலர், ஆதார் அட்டை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024