கைபேசியில்கூட இன்று முழு திரைப்படமொன்றைப் பார்த்துவிட முடிகிறது. இந்தத் தொழில்நுட்பத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிய பல திரையரங்கங்கள் மூச்சை நிறுத்திக்கொண்டன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உருவான முதல் திரையரங்கம், 17 ஆண்டுகளுக்குப் பின் நவீனத் தொழில்நுட்பத்தோடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கிழக்கு இரண்டாம் வீதியின் முக்கிய அடையாளமாக இருந்தது வெஸ்ட் திரையரங்கம். அதேபோல் வடக்கு ராஜவீதியில் ராஜா திரையரங்கம். இந்தத் திரையரங்குகளை ராயவரத்தைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் என்பவர் கடந்த 1930-ம் ஆண்டில் தொடங்கினார்.
இத்திரையரங்குகளில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி, பி.யூ. சின்னப்பா நடித்த ஜெகதலப் பிரதாபன் ஆகிய படங்கள் 125 வாரங்கள் ஓடிச் சாதனை படைத்தன. தொடர்ந்து, நாடோடி மன்னன், வீரபாண்டிய கட்டபொம்மன், சகலகலா வல்லவன், தர்மதுரை போன்ற படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடின.
ஆனாலும் சரியான ஆதரவு இல்லாததால் வெஸ்ட் திரையரங்கம் 1998-ல் மூடப்பட்டது. மூடப்பட்ட திரையரங்கம் கடந்த காலத்தின் நினைவுகளைச் சுமந்துகொண்டு கடந்து செல்லும் உள்ளூர்வாசிகளின் கண்களுக்கு ஒரு சோகச் சாட்சியாக நின்றுகொண்டிருந்தது.
இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகங்களுடன் கூடிய கட்டிடத்தில் கடந்த 2015 மார்ச் 22-ம் தேதி மீண்டும் வெஸ்ட் திரையரங்கம் நவீன வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட திரையரங்கில் பழமையை நினைத்துப் பார்க்கும் விதமாக எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தை முதலில் திரையிட்டபோது, ரசிகர்கள் திரண்டுவந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment