Sunday, April 12, 2015

சாலையில் தறிகெட்டு வரும் தண்ணீர் லாரி எமன் ... கோடை கால உஷார்!

ண்ணீர் லாரி...தாகத்தால் தவிப்போருக்கு தண்ணீர் தந்து உயிர் காக்கும் தண்ணீர் லாரிகள் இப்போதெல்லாம் உயிர்பறிக்கும் சாலை எமனாக மாறி  அச்ச மூட்டுகின்றன.குடிநீர் சேவைக்கு வந்த லாரிகள், குடிமக்களின் உயிரெடுக்கும் கொடுமையை செய்வதால் சாலையில் பயணிப்போர் அன்றாடம் பயந்து பயந்து போகவேண்டிய அசாதாரண சூழல் நிச்சயம் தவிர்க்கப்படவேண்டும்.
   
நேற்று பல்லாவரம் வாரச் சந்தை..ஷாப்பிங் மால்களும், ஏ.சி. வைத்த பெரிய காய்கறி கடைகளும் நிறைந்த சென்னையில், கிராம மணம் மாறாமல் இன்றளவும் பல ஆண்டுகளாக வாரச் சந்தை நடக்கும் இடம். காய்கறி முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களும் வாங்கலாம் என்பதே வாடிக்கையாளர்கள் அறிந்த செய்தி. ஆனால் சந்தைக்குப் போனால் உயிரையும் இழக்க நேரிடும் என்பது புதிய பயம் தரும் செய்தி.
பல்லாவரம் வாரச் சந்தை நடக்கும் சாலையில், தவறாக வந்த கன்டோன்மென்ட் தண்ணீர் லாரி மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட, ஐந்து பேர் இறந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை நிரப்பியுள்ளது. இவ்விபத்துக்கு தண்ணீர் லாரியின் அதிவேகமே காரணம் என்று கூறப்படுகிறது.

பல்லாவரம் பழைய டிரங்க் சாலையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. நேற்று காலை பொழிச்சலூர் பத்மநாப நகர்  மகேஷ் தனது மனைவி பிரீத்தி,அவர்களின்  இரண்டரை வயது மகள் தியா மற்றும் மகேஷின் தாய் சரோஜா ஆகிய நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றனர்.

சந்தை நடந்த சாலையில் கீழ்க்கட்டளை - பல்லாவரம் மேம்பாலம் இறங்கும் இடத்திற்கு அருகே சென்றபோது, சந்தையில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு, கன்டோன்மென்ட் தண்ணீர் லாரி ஒன்று, தவறான பாதையில் எதிரே வேகமாக வந்துள்ளது. அந்த  லாரியை கன்டோன்மென்ட் பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையில்  திரும்பிய லாரி கட்டுப்பாட்டை இழந்து, பல்லாவரத்தை சேர்ந்த குகன் என்பவரின் கார் மீது லேசாக மோதிய லாரி, சாலையோரம் நின்றிருந்த குரோம்பேட்டையை சேர்ந்த விஜயகுமார்  என்ற பள்ளி மாணவர் மீதும், அதை தொடர்ந்து மகேஷின் வாகனம் மீதும் மோதிவிட்டு வேகமாகச்  சென்று நின்றது.
இந்த விபத்தில், மகேஷின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். பிரீத்தி உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஷும், மற்றொரு நபரும் குரோம்பேட்டை மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லும்  வழியில் இறந்தனர்.படுகாயமடைந்த குழந்தை தியாவும், அவரது பாட்டி சரோஜாவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.மாணவர் விஜயகுமார், நேற்று தான்  பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதி முடித்து விட்டு, சந்தையில் வாகன கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருத நிலையில் இறந்தார்.
இந்த விபத்து  பல்லாவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை உண்டாக்கிய  லாரி ஓட்டுனர் சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கன்டோன்மென்ட் லாரியை ஓட்டியவர் சுரேஷ். அவர் தற்காலிக ஊழியர் என்று கூறப்படுகிறது. வார சந்தை நடைபெறும்  வெள்ளிக்கிழமை தோறும், அந்த லாரி, சந்தையில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி விட்டு, தவறான பாதை வழியாகவே அலுவலகத்திற்கு வழக்கமாகச் செல்லும் .நேற்று காலையும் அதே பாணியில் ஓ ட்டுனர் தவறான பாதையில் சென்றது மட்டுமின்றி, அதிவேகத்திலும் சென்றிருக்கிறார். அது தான் இந்தக் கோர விபத்திற்குக்  காரணம்.


ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேரை பலி கொண்ட, லாரிநிறுவனத்தின் மீதும், ஓட்டுனர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி இதுபோன்ற கொடுமையான விபத்துக்கள் எங்கும் நடக்கவே கூடாது.இது கோடைகாலம்.தண்ணீர் பற்றாக்குறையால் சாலைகளில் அதிவேகமாக லாரிகள் செல்லும்.எனவே அதைக் கட்டுப்படுத்தவும்,கண்காணிக்கவும் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களையும், பைக் ரேஸ் ஓட்டுபவர்களையும் சாலைகளில் மடக்கிப் பிடித்து சட்ட ரீதியிலான நடவ டிக்கை  எடுக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர் தண்ணீர் லாரிகள் தறிகெட்டு ஓடுவதையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பல்லாவரத்தில் நடக்கும் சந்தைக்கு வருவோரின் வாகனங்களை  போக்குவரத்து போலீசார் கண்ட இடத்தில் நிறுத்த அனுமதிக்கின்றனர்.இதனால்  டிரங்க் சாலை ஜி.எஸ்.டி. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாரந்தோறும் நிலவும் இந்த பிரச்னையை தீர்க்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.


ஆனால் இது குறித்து போக்குவரத்து போலீசார், பழைய டிரங்க் சாலையில் வாகன வசதிக்காக கீழ்க்கட்டளை - பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து 250 மீ ,  திரிசூலம் ரயில்வே கேட்டில் இருந்து 250 மீ., இடைவெளி விட்டு  அதற்கு இடைப்பட்ட இடத்தில்  வார சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை மீறி, மேம்பாலம் ஏறும் இடம் வரை, கடைகள் போடப்படுகின்றன. இதுவே, அந்த சாலையில் கடும் நெரிசல் ஏற்பட காரணம்.மேலும், அந்த வழியாக, சந்தைக்குச்  செல்லாத வாகனங்களைக்  கூட வலுக்கட்டாயமாக மடக்கி  கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டணம் வசூலிக்க, சிறுவர்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். கன்டோன்மென்ட் நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை என்று புகார் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Tirupati laddu ghee had pig & beef fat, fish oil: Lab report released by AP govt

Tirupati laddu ghee had pig & beef fat, fish oil: Lab report released by AP govt  Sandeep.Raghavan@timesofindia.com  Tirupati : A labora...