Monday, April 13, 2015

வேண்டாம் "முகமூடி' உறவு

By எம். சடகோபன்

உலகில் உறவுக்கு என்று ஒரு தனி அர்த்தம் உள்ளது. ஆனால், நவீன தொழில்நுட்பக் காலத்தில் உறவுகள் அனைத்தும் முகம் இல்லாமல் தொடர்கின்றன என்பதுதான் யதார்த்த உண்மை. மாயாஜால உலகில் எல்லாமே முகமூடி அணிந்த உறவுகளாகத் தொடர்வதுதான் அதைவிட வேதனை.

தாய்-தந்தை, அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, மாமனார்-மாமியார், சகோதரன்-சகோதரி, தாத்தா-பாட்டி, பேரன்-பேத்தி என்று உறவுகளின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.

மேலும், உற்ற நண்பன், உற்ற நண்பி என்று அலுவலகங்களிலும் நட்பு என்ற பெயரிலும் உறவுகள் தொடர்கின்றன. எல்லாமே பணம் என்று ஆகிவிட்ட இந்த உலகில் உறவுகள் அனைத்தும் முகமூடி அணியத் தொடங்கிவிட்டன.

தந்தை, தாயை ஏமாற்றும் பிள்ளை. பணத்துக்காக சகோதரனை வசைபாடும் சகோதரி. தன் சொந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மாமனார்-மாமியாரை உதறிவிடத் துடிக்கும் மருமகள். தன் ஆணவத்துக்கு அடங்காத மருமகளை விரட்டத் துடிக்கும் மாமியார். ஏதேதோ காரணங்களைக் கூறி, தாலி கட்டிய கணவனைக்கூட மறக்கத் துணியும் மனைவி.

இதேபோல், அலுவலகங்களில் நட்புடன் பழகுவதுபோல் காட்டிக் கொள்ளும் பலர், ஒருவரை ஒருவர் புறம் பேசி தான் மட்டும் முன்னேற்றம் காண முகமூடி அணிகிறார்கள். இவ்வாறு அனைவரும் முகமூடியுடன் உறவுகளைத் தொடர்கின்றனர்.

சகோதரி ஸ்தானத்தில் வைத்து பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்துக் கேலிப் பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்துப் பேசுவது போன்றவற்றை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்ய முனைவார்களா..? இல்லையே..!

உடன் பிறப்பின் மானத்தை மட்டும்தான் காப்பார்கள் - பிற பெண்களின் மானத்தைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா?

அண்ணன்-தம்பியுடன் பிறந்த பெண்கள் மற்ற ஆண்களுடன் இயல்பாகப் பேசுவதற்குத் தயங்கமாட்டார்கள். தங்களைவிட மூத்தவர்களை அண்ணன் என்றும், இளையவர்களை பெயர் சொல்லியோ, தம்பி என்றோ அழைப்பார்கள்.

ஆனால், கூடப் பிறந்தவர்கள் அனைவரும் பெண்களாக இருந்துவிட்டால் எளிதில் வெளி ஆண்களுடன் பழக மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

ஆனால், இந்தக் கலியுக காலத்தில் அப்படி இல்லையே..! பொதுவாக அண்ணனுடன் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், மகளிடம் அம்மா சொல்வாள், அண்ணன்னு கூப்பிடு என்று. அப்படித்தான் நடக்கும்.

ஆனால், நாளடைவில் அண்ணனுடன் வந்தவர்களில் ஒருவரைக் காதலித்து கைப்பிடிக்கும் மகளின் அறியாமையை எண்ணி சொல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகும் ஏராளமான தாய்மார்களைக் காண்கிறோமே.

இது இப்படி இருக்கையில், உறவுகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பண்பு தெரிந்த ஒருவர் "முகமூடி' போட்டுக் கொள்ளாதவராகத்தான் இருப்பார். "தன்னைக் குறித்து யாரும், எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும்-கவலை இல்லை.

நான், நானாகத்தான் இருப்பேன்' என்று சொல்லிக் கொள்ளும் அவர், முகமூடி அணிந்து மனத்துக்குள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் அவர் வித்தியாசமானவராகத்தான் இருப்பார்.

தாலி கட்டிய கணவனுடன் மனைவியும், மனைவியுடன் கணவனும் "முகமூடி' அணிந்து உறவைத் தொடரும் பலரை பார்க்கத்தான் செய்கிறோம்.

இது ஒருபுறம் இருக்க, தன் வீட்டாரின் செயலை நியாயப்படுத்த கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் முகமூடி அணிகிறார்கள். சாயம் வெளுத்தபிறகு உறவைக் கிழிக்கிறது "முகமூடி'.

சகோதர பாசம் சாதாரணமானது அல்ல. அண்ணனை தந்தை போன்றும், தம்பியை மகன் போன்றும் பாவிக்கிறவள் பெண். உடன் பிறந்தவர், அடுத்தவர் என்ற பேதம் சகோதர பாசத்துக்குக் கிடையாது.

அண்ணன் என்றால் அண்ணன்தான் - அதைத் தவிர்த்து வேறு எதையும் சிந்தித்துக்கூட பார்க்கமாட்டாள் ஒரு நல்ல பெண். ஒரு குழந்தைபோல விஷயங்களைப் பகிர்வதற்கும், சிக்கல் நிறைந்த பிரச்னை குறித்துச் சொல்வதற்கும் முதலில் பெண்கள் நாடுவது சகோதரனையே.

நட்புகளிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள மிகவும் யோசிக்கும் பெண், "சகோதர பாசம் துரோகம் இழைக்காது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், தன்னை சகோதரி என்று அழைக்கும் ஆணிடம் தயங்காமல் கூறிவிடுவாள்.

ஆனால், அதையே தனக்கோ, தனது மனைவிக்காகவோ சாதகமாக்கிக் கொண்டு ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். முகமூடி தெரிந்த பிறகு அப்பெண் சொல்வது "குட்பை' தானே.

உன்னத உறவு-சுயநலம் இல்லாதது. சகோதர உறவு-ஆதரவாகத் தோள்கொடுக்கும். இவை இரண்டும் அமையப்பெற்றவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான். ஆனால், இதே உறவை சிலர் தங்கள் விருப்பம் போலக் கையாளும்போதுதான் முகமூடி உறவாக மாறுகிறது.

இதன்மூலம், கிடைத்த நல்ல உறவை தக்கவைத்துக் கொள்ள பலர் தவறிவிடுகின்றனர்.

எதிர்பார்ப்பு எதுவும் இன்றி தன்னை நேசிக்கும் உன்னத உறவை ஈகோ, போட்டி, பொறாமை, சுயநலம், தற்பெருமை போன்றவற்றுக்காக இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

"நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல ஆளுக்கொரு வேஷம் தரிக்கும் முகமூடி உறவுக்காரர்கள், "பிறரை மட்டும் அல்ல; தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்' என்பதுதான் உண்மையிலும் உண்மை...!

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசும் உறவுகளை

ஒவ்வொன்றாக

களைய முயன்றால்

அநாதையாகிவிடுவேன்

ஒருவருமின்றி..!

என்ற கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024