Wednesday, April 15, 2015

தேவை சமநிலை இணைய சேவை!

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) இந்தியாவின் தனியார் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு 20 கேள்விகள் கொண்ட ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. இந்தக் கேள்விகளின் உள்ளடக்கம் இதுதான்: சமநிலை இணைய சேவை (நெட் நியூட்ராலிட்டி) குறித்த உங்கள் கருத்துகள், இதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இதற்கு தாங்கள் கருதும் தீர்வுகள் யாவை?

அலைக்கற்றை ஏலத்தை மார்ச் மாதம் நடத்தி முடித்து, இந்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் பெற்ற அடுத்த கணமே இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டதற்கு காரணம் உள்ளது. 2014ஆம் ஆண்டில் வெறும் ரூ.62,162 கோடி ஏலம் போன அலைக்கற்றை, தற்போது இரட்டிப்பு வருவாயைத் தந்திருப்பதால், ஏலம் எடுத்தவர்களுக்கு அரசும் பதிலுக்கு ஏதாவது நன்மை செய்தாக வேண்டும். ஆகவே, இத்தகைய கேள்விகளை டிராய் தானாகவே கேட்க முனைந்தது.

சமநிலை இணைய சேவை வேண்டும் என்பது உலகம் முழுவதிலும் இணையப் பயன்பாட்டில் இருப்போர் வலியுறுத்தும் கருத்து. இணையத்தைப் பயன்படுத்தும் நபர் எதை வேண்டுமானாலும் பார்க்க, எந்த இணைய சேவை நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்துக்குள்ளும் நுழைந்து பார்க்க, எந்தவோர் இணைய வணிக நிறுவனத்துடனும் இ-வர்த்தகம் செய்யத் தடையில்லாத நிலைமைதான் சமநிலை இணைய சேவை என்பது.

யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம், ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம், கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம். ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும் பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம். மின் கட்டணம் செலுத்தலாம், நெட் பேங்கிங் செய்யலாம், இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஆனால், சேவைகளைக் கட்டுப்படுத்துதல், சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல், சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன. இதில் எதை அனுமதித்தாலும் அது இணையப் பயன்பாட்டாளருக்கு எதிராகத்தான் முடியும். ஆகவேதான் சமநிலை இணைய சேவைக்கு மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. டிராய் அமைப்புக்கு இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மின்அஞ்சல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இதே கோரிக்கை தொடர்பாக அமெரிக்காவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் (ஓபன் இன்டர்நெட் ஆர்டர்) இணையப் பயன்பாட்டாளருக்கு 1. எதையும் தடை செய்யக் கூடாது, 2. தரத்தைக் குலைக்கக் கூடாது, 3. கட்டணம் செலுத்துவோருக்கு முன்னுரிமை என்பதும் கூடாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது.

தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களின் கழுகுப் பார்வையில் படுவது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற சிறப்பு சேவையாளர்கள் (ஓவர் த டாப்) மீதுதான். வழக்கமான தொலைபேசி சேவை, குறுந்தகவல், எம்எம்எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், கட்செவி அஞ்சல், முகநூல், லைன், வைபர், வீசாட் போன்றவற்றின் மூலம் தகவல், விடியோ, புகைப்படம் பரிமாறிக்கொள்வதால் உலகம் முழுவதிலும் உள்ள தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 50 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, தகவல் பரிமாற்றம் செய்வோரில் 52 சதவீத நபர்கள் சிறப்பு சேவை வழங்குவோர் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். இந்தியாவில் கட்செவி அஞ்சல் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு அதிக அளவு தகவல் பரிமாற்றம் (42%) முகநூல் மூலமே நடைபெறுகிறது. 83% பேர் ஸ்மார்ட்போன் மூலம் இணைய சேவை பெறுகின்றனர். இதனால், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது. உண்மையில் பார்த்தால், இது இழப்பு அல்ல. மொத்த வருவாயில் 5% குறைவு, அவ்வளவே.

இந்தியாவில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை நமக்குத் தெரியாமலேயே பிடுங்கி விடுகின்றன. இழப்பு என்பதை மாற்று வகையில் ஈடு செய்துவிடுகின்றன. ஆனால் வெளியே சொல்வதில்லை. நுட்பமாகப் பார்த்தால், இணைய இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல நிலைகளில், நாள் எண்ணிக்கையில் வைத்து, கட்டணத்தை அதிகரிக்கவே செய்கின்றன. ஆரம்பத்தில் செல்லிடப்பேசி இணைய சேவைக்கான கட்டணம் 30 நாள்களுக்கு 1 ஜிபி பதிவிறக்கத்திற்கு ரூ.68 ஆக இருந்தது, இப்போது 3ஜி சேவைக்கு 28 நாள்களுக்கு ரூ.198 வசூலிக்கப்படுகிறது.

இது தவிர, லைப்ஸ்டைல் சேவை என்ற பெயரில், நாம் கோராமலேயே அளித்து, அதற்கும் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள். இந்த அநியாய கட்டணப் பிடிப்பை நாம் கவனித்துத் தட்டிக் கேட்டால் திரும்ப அளிக்கிறார்கள். கண்டுகொள்ளப்படாமல் எடுக்கப்படும் கட்டணம் இதுபோல எத்தனை ஆயிரம் கோடியோ, யாரறிவார்?

வழித்தட நெரிசல் காரணமாகத் தரமான சேவை வழங்க இயலவில்லை என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சொல்லுமேயானால், அவர்கள் இதுகாறும் சம்பாதித்த லாபத்தை முதலீடு செய்து, தங்கள் கருவிகளை மேம்படுத்துவதே நியாயமாக இருக்கும். ஆகவே, இன்றைய தேதியில், இந்தியாவைப் பொருத்தவரை, சமநிலை இணைய சேவை தொடர வேண்டும். தொடரத்தான் வேண்டும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024