Wednesday, April 15, 2015

ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டம்



ஏழை மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கும் தமிழக அரசின் சிறந்த திட்டத்துக்கு பல கல்லூரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக ஏழை மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அரிய வாய்ப்பு மறுக்கப்படுவதாக பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வரும் 2015-16 கல்வியாண்டுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி முடிவடைந்துவிட்ட போதும், 40-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள் இன்னும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மிகுந்த வசதி படைத்த மாணவர்கள் மேற்படிப்புகளை, வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதைப்போல, வசதி இல்லாத ஏழை மாணவ, மாணவிகள் வெளிநாடு சென்று படித்து வரும் வகையில் சிறந்த திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

அதாவது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் ஒரு பருவம் (6 மாதம்) பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகங்களில் முழுவதும் அரசு செலவில் படிக்க வைக்கும் திட்டம்தான் இது. ஆண்டுக்கு 25 மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். இவர்களுடன் 5 பேராசிரியர்கள், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்படுகின்றனர்.

தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பொதுவாக மார்ச் மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்படும்.

கல்லூரிகள், படிப்பில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, விண்ணப்பங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு முதுகலை பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் அவர்கள் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இவர்கள் முதல் கட்டமாக கல்லூரி அளவில் நடத்தப்படும் தேர்வில் தகுதி பெற வேண்டும். பின்னர் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் திறன் தேர்வு (ஐஇஎல்டிஎஸ்), பேச்சுத் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள்தான் பிரட்டனுக்கு அனுப்பப்படுவர்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்கள் பிரிட்டனின் கலை, கலாசாரம், கல்வித் திட்டங்களை அறிந்து கொள்வதோடு, உலக அறிவையும் பெற முடிகிறது.

ஆனால், இந்தச் சிறந்த திட்டத்தின் மீது பல அரசு கல்லூரிகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் இப்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர் கல்விமன்ற நிர்வாகிகள் கூறியது:

கடந்த 2013-14, 2014-15 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 ஏழை மாணவர்களும், 10 பேராசிரியர்களும் வெளிநாடு சென்று படித்து வந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 15 லட்சத்தை தமிழக அரசு செலவிடுகிறது.

இப்போது 2015-16 கல்வியாண்டுக்கு இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சியை தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான சுற்றறிக்கை 62 அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கடந்த மாதம் அனுப்பப்பட்டுவிட்டது.

கல்லூரிகள் மாணவர்களைத் தேர்வு செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 11 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடைசித் தேதி முடிந்துவிட்ட நிலையில் 20 கல்லூரிகளிலிருந்து 100 விண்ணப்பங்கள் வரை மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. மீதமுள்ள 42 கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை.

அதோடு, இந்தத் திட்டம் குறித்து மாணவர்களிடம் போதிய விளம்பரமோ, கல்லூரி அறிவிப்புப் பலகையில் அறிவிப்போ இதுவரை செய்யவில்லை என சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகள் அடுத்த ஓரிரு நாள்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத கல்லூரிகள் குறித்து அரசிடம் புகார் அளிக்கப்படும் என்றனர்.

திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாண்டில் அரசுக் கல்லூரிகளிலிருந்து 250 விண்ணப்பங்களும், இரண்டாம் ஆண்டில் 400 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TN govt: Have already taken possession of MRC premises

TN govt: Have already taken possession of MRC premises  TIMES NEWS NETWORK  20.09.2024  Chennai : Tamil Nadu govt has told Madras high court...