நல்ல டைப் என்று சொல்லத்தக்க ஒருவரிடம் கொஞ்ச காலம் வேலை செய்தேன். அதிர்ந்து பேச மாட்டார். கடிந்து பேச மாட்டார். மதிப்புக் குறைவாகப் பேச மாட்டார். பேச மாட்டார் என்றே சொல்லக்கூடாது. அது அவருக்கு தெரியவே தெரியாது. 24 மணி நேர ஏஸி மனிதர்.
அடுத்தவரைப் புண்படுத்துவதைத் தவமாகப் பயின்றவர்கள்தான் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களால் நிறையப் பேருக்கு வார்த்தைக் காயங்கள் கிடைக்கின்றன. அதனால்தான் வார்த்தை ஒத்தடங்கள் தருகிற மேலே சொன்ன நபரைப் போன்றவர்களை மக்கள் விரும்புகிறார்கள்.
வசையே மேல்
அவர் எல்லோருக்கும் நண்பர்.அவரது உலகில் எங்கெங்கு காணினும் நண்பர்களடா. ஆனால் இத்தகையவர்கள் உண்மையிலேயே நல்ல டைப்தானா? அவர்களது இன்சொற்கள் நமக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும்? இப்படித் தேன் தடவிய வார்த்தைகளை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா? தலைவா, பாஸ், ஜீ, தோழரே, மேடம், சார், அண்ணாச்சி போன்ற வார்த்தைகளில் தவறு இல்லை. ஆனால் அவை எல்லோரிடமும் சொல்லப்படுமானால் அவை பெரும்பாலும் பாசாங்கு வார்த்தைகளாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அவை ஆயத்த ஆடைகள்போல. உங்களுக்கானவை அல்ல.
சம்பிரதாயமான, உண்மையான அக்கறையில்லாமல் சொல்லப்படுகிற இனிமையான சொற்களைவிட உங்களுக்காகவே தயாரிக்கப்பட்ட வசைச் சொற்களான ‘கோமாளி, முட்டாளே’வில் நேர்மை இருக்கிறது அல்லவா?
எப்போதும் இன்சொற்களைப் பேசுவது நல்ல குணம்தானா? அடுத்தவரை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே பேசப்படும் வார்த்தைகள் ஆபத்தானவை அல்லவா? அவற்றைப் பேசுபவரும் ஆபத்தானவர் என்று சொல்லலாம் அல்லவா?.
எந்த முகம்?
ஆனால் துரதிருஷ்டம், அத்தகையோரின் வார்த்தை மஸாஜ்களைத்தான் பலரும் விரும்புகிறார்கள். அவர்கள் எல்லோரும் வில்லன்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்களில் பலரது சுபாவம் அவர்களது சொற்களைப் போலவே இருந்துவிடுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காரணம், எல்லா நேரங்களிலும் இன்முகம் காட்டி இன்சொல் பேசுவது இயற்கைக்கு முரணானது.
எதற்கு வம்பு? அவரை ஏன் கஷ்டப்படுத்தணும்? நம்முடைய நல்ல பெயர் போய்விடுமோ என்கிற தற்காப்பு பலரது இன்சொல்லின் அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஒருவர் எல்லோரையும் எப்படித் திருப்தி செய்ய முடியும்? கத்தியின் நண்பர்கள் கோழியின் கழுத்துக்கும் எப்படி நண்பராக முடியும்? எல்லோருக்கும் நண்பராய் இருப்பவருக்குச் சொந்த முகம் என்ற ஒன்று இருக்குமா? அதை யாராவது பார்த்திருக்கிறார்களா?
விலாங்கு மீன்கள்
அப்படியானால் ‘உலகையே உறவின’ராகத் தழுவும் கணியன் பூங்குன்றனார் மனதுக்காரர்கள் யாரும் இல்லையா? ‘எல்லோரும் இன்புற்றிருக்க’ எனப் பராபரத்தை இறைஞ்சும் ஆன்மிகர்கள்’ இல்லையா? சக மனிதன் சுரண்டப்படுவதை சகிக்காத ‘நீயும் என் தோழனே’ என்கிற பேரன்புக்காரர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர்?
தனக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இன்சொல் பொழிந்தவாறு நிறைய விலாங்கு மீன்கள்தான் நழுவிக்கொண்டிருக்கின்றன.
மனச்சாட்சியின் குரல்?
எனது நண்பர், அ.தி.மு.க.வினரிடம் “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. அடுத்தும் நீங்கதான்” என்பார். தி.மு.க.காரரிடம், “ஆட்சியா நடத்துறாங்க இவங்க” என்பார். பிரதமர் மோடியின் வேட்டி அணிந்து பாஜக பிரச்சாரம் செய்வார். பா.ம.க., த.மா.க., கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., தே.மு.தி.க. என எல்லோரையும் ஒரு ரவுண்டு திருப்தி செய்வார். கடைசியாக ஆம்ஆத்மிக்கும் “ஒரு வாய்ப்பு இருக்கு” என்பார்.
நாளை யார் வந்தாலும் “நான் அப்பவே சொன்னேனே?” என்பார். இவரிடம் வெளிப்பட்ட பல குரல்களில் எது மனச்சாட்சியின் குரல்?
எனக்கு மட்டும் ஏன்?
இத்தகைய இன்சொல் வேந்தர்கள் தங்கள் நல்லவன் இமேஜைத் தக்க வைக்க எதையும் செய்வார்கள். அதற்கு ஆபத்து வரும்போது அவர்களை நம்பி இருப்பவர்களில் உள்ளதிலேயே பலவீனமானவரைப் பலிபீடம் ஏற்றுவார்கள்.எம்.ஜி.ஆர். படத்தில் வருவதுபோலத்தான் வில்லன்கள் இருப்பார்கள் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என உணர்வதற்குள் தலை இழந்தவர்கள்தான் அதிகம்.
அப்போதுதான் எ.ம.ஏ.இ. ( எனக்கு மட்டும் ஏன் இப்படி ) நடக்குது ? என்று நாம் புலம்புவோம். நண்பர்களை நம்புங்கள். எல்லோருக்கும் நண்பர்களை நம்புவதைப் பற்றி நன்றாக யோசியுங்கள்.
தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com
No comments:
Post a Comment