Wednesday, April 15, 2015

எல்லாம் எண்ணத்தின் உருவாக்கமே!

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage

நேர்மறை எண்ணம் எது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதே போல எதிர்மறை எண்ணம் வருகிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

மிக எளிய வழி ஒன்று உள்ளது. எண்ணத்தைக் கண்காணிப்பதைவிட உணர்ச்சியைக் கண்காணிப்பது சுலபம். நேர்மறை உணர்வுகள் நேர்மறை எண்ணங்களின் விளைவு. எதிர்மறை உணர்வுகள் எதிர்மறை எண்ணங்களின் விளைவு.

பதற்றமும் உற்சாகமும்

மேடைப் பேச்சுக்குத் தயார் செய்கிறார் ஓர் இளைஞர். அவர் மனம் படபடப்பாக இருக்கிறது. “என்னால் மேடையில் பேச முடியுமா? சொதப்பினா கேவலமாயிடும்” என்ற எண்ணம் பின்னணியில் படபடப்பை இயக்குகிறது.

அதே மேடைப் பேச்சுக்கு இன்னோர் இளைஞரும் தயார் செய்கிறார். அவர் மனம் உற்சாகமாக இருக்கிறது. “கடைசியில் அந்த ஜோக்கைச் சொல்லி ஒரு பெரிய அப்ளாஸ் வாங்கணும்” என்று எண்ணுகிறார். அந்த எண்ணம் அவருக்கு உற்சாகம் தருகிறது.

“ஏற்கெனவே ஒரு தோல்வியை அடைந்திருந்தால் எதிர்மறை எண்ணம் தானே வரும்? நிறைய ஜெயித்தால் நேர்மறை எண்ணம் தானாக வரும்” என்று நீங்கள் வாதிடலாம். அப்படியானால் எண்ணங்களும் உணர்வுகளும் நம் செயல்களின் விளைவுகளா?

இது பாதி நிஜம்.

எண்ணம் - உணர்வு - செயல்

எண்ணம் - உணர்வு - செயல் மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கக் கூடியவை. “என்னால் முடியாது” என்ற எண்ணம் பதற்றம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. பதற்றம் என்ற உணர்வு வாய் குழறுதல் என்ற செயலை நிகழ்த்துகிறது.

அதே போல வாய் குழறும் போது பதற்றம் வரும். பதற்றம் வந்தால் ‘நம்மால் முடியாது’ என்ற எண்ணம் வருகிறது.இதே போல நேர்மறையாகவும் நடக்கலாம். “என்னால் முடியும்” என்ற எண்ணம் நிதானம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. நிதானம் கணீரென்ற குரலில் பேச வைக்கும்.

அதே போலக் கணீரென்று பேசும் போது நிதானம் வரும். நிதானம் நம்மால் முடியும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இந்த எண்ணம் - உணர்வு - செயல் என ஒரு வளையம் போலச் சுற்றிச் சுற்றி வருவதுதான் நம் வாழ்க்கையில் அனைத்தையும் நிகழ்த்துகிறது.

உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் இந்த மூன்று விஷயங்களையும் அலசுங்கள். எது அதிகம் பாதித்தது என்று யோசியுங்கள். பெரும்பாலும் எண்ணம்தான் பிரதான காரணமாக இருக்கும்.

எண்ணத்தின் உருவாக்கமே

உலகில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் முதலில் யாரோ ஒருவர் தன் உள்ளத்தில் உருவாக்கியதே. நாடுகள், எல்லைகள், கட்சிகள், கட்டிடங்கள், கொள்கைகள், பதவிகள், சாதிகள், குற்றங்கள் என அனைத்தும் யார் எண்ணத்திலோ தோன்றியவை தான்.

நம் செயல்கள் அனைத்துக்கும் நம் எண்ணங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொள்வதில் நம்மில் பலருக்குச் சிக்கல் இருக்கிறது. நம் முடிவுகளும் செயல்களும் தானே வாழ்க்கை? அப்படியானால் நம் வாழ்க்கையைப் பெரிதும் நிர்ணயிப்பது நம் எண்ணங்கள் தானே?

“என் வாழ்க்கை இப்படி இருக்க என் எண்ணங்கள் தான் காரணமா?” என்று நம்ப முடியாமல் கேட்பவர்களுக்கு என் பதில்: ஆம்.

எந்த மனநிலை?

எண்ணம் போலத் தான் எல்லாம் நடக்கும் என்று பெரியவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி என்றால் தோல்வி அடைபவர்கள் தோல்வி வேண்டும் என்றா எண்ணுகிறார்கள்? அவர்கள் தோல்வி வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆனால் தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் தோல்வியின் விளைவுகள் பற்றி அதிகம் யோசித்திருப்பார்கள். வெற்றி பற்றி யோசிப்பதை விடத் தோல்வி அடையக்கூடாது என்று அதிகம் யோசித்திருப்பார்கள். நம் மனம் எந்த மன நிலையில் இருக்கிறதோ அதற்கேற்ற நிகழ்வுகள்தான் நம்மைத் தொடரும்.

அப்பாவும் மகனும்

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். அப்பாவுக்குத் தன் மகனின் திறமை மேல் நம்பிக்கை இல்லை. பொறுப்பில்லாதவன் என்ற எண்ணம். நண்பரிடம் குறைபடுகிறார். “ஒரு வேலையைக் கூடச் சரியா செய்ய மாட்டான்!” கடைக்குப் போகும் வேலை வருகிறது. “நீங்க வேணா பாருங்க, எப்படி சொதப்புவான்னு” என்று மகனின் முன்பாகவே சொல்லி நூறு ரூபாய் கொடுத்துச் சில பொருட்கள் வாங்கி வரச்சொல்கிறார்.

அப்பாவின் எண்ணமும் மனப்பான்மையும் மகனின் தன்னம் பிக்கையைக் குறைக்கிறது. பயம் வருகிறது. சொதப்பக்கூடாது என்ற எண்ணம் வலுவடைகிறது. எரிச்சலும் வருகிறது. பயந்தது போலவே மீதம் தரப்பட்ட சில்லறையில் ஒரு ரூபாயைக் குறைத்து வாங்கி வருகிறான். எண்ணிப்பார்த்த அப்பா தன் நண்பரிடம், “ நான் சொன்னேன்ல சொதப்புவான்னு. சரியாத்தானே சொன்னேன். பாருங்க ஒரு சில்லறையைக்கூட சரியா எண்ணி வாங்க முடியலை! இவன் எல்லாம் என்ன பண்ணப் போறானோ?”

இப்பொழுது அப்பாவுக்கு இருக்கிற தன் மகன் பற்றிய எண்ணம் சான்றோடு ஊர்ஜிதப்படுகிறது. மகனும் அதை மெல்ல நம்ப ஆரம்பிக்கிறான். “சரி தான். நான் மற்றவர்கள் போலச் சாமர்த்தியம் குறைவு தான்!”

பெரும் பிரச்சினை

முன்கூட்டியே தீர்மானிக்கும் எண்ணங்கள் நாம் நம்பும் விளைவுகளைத் தந்து அந்த எண்ணங்களை வலுப்படுத்தும். காலப்போக்கில் அந்த எண்ணங்கள் அனுபவத்தால் வந்தால் அபிப்பிராயங் களாய் மனம் பதிவு செய்து கொள்ளும். இது தான் மனம் செய்யும் தந்திரம்.

நம் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் இது தான் நடக்கிறது. ஆங்கிலத்தில் Self Fulfilling Prophecy என்று ஒன்று உண்டு. அதை விரிவாக விவாதிப்பதற்குள் உங்கள் வாழ்க்கையின் பெரும் பிரச்சினை எது என்று யோசியுங்கள் . அது பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். அவற்றில் ஏதாவது pattern (முறை) தெரிகிறதா என்று பாருங்கள்.

உங்கள் வாழ்வைத் திருப்பிப் போடும் விசையில் நீங்கள் கை வைத்து விட்டீர்கள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...