ஆழ்குழாய் கிணறுகளில் மழலைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடந்து, அனைவரையும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது. கடந்த 2012 முதல் தொடர்ந்து 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும், அதிர்ஷ்டவசமாக ஓரிருவர் மரணத்தின் வாயிலுக்கு சென்று உயிர்தப்பியதும் நடந்து இருக்கிறது. இப்போது மீண்டும் நெஞ்சை கசக்கிப்பிழியும் ஒரு சோக சம்பவம் வேலூர் மாவட்டம், கூராம்பாடி கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்தில் தண்ணீர் வராத ஆழ்குழாய் கிணற்றில் தவறிவிழுந்த 2½ வயது பச்சிளம் குழந்தை மரணத்தால் ஏற்பட்டுள்ளது. 300 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வராததால், அதில் இருந்த பிளாஸ்டிக் குழாயை எடுத்துவிட்டு, பலகாலமாக கல்லை வைத்து மூடிஇருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா? என்று பார்க்க அந்த கல்லை எடுத்து பார்த்துவிட்டு தண்ணீர் இல்லை என்றவுடன், மீண்டும் கல்லை வைத்து மூடாமல் சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில், அந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் தவறிவிழுந்து பல மணி நேர போராட்டத்துக்குப்பிறகு அவனை மீட்டும் உயிரைக்காப்பாற்ற முடியவில்லை.
தமிழ்நாடு ஒரு விவசாய மாநிலம். இங்கு ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நிச்சயமாக நிறுத்தமுடியாது. ஆனால், ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக்கவேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சென்னை ஐகோர்ட்டு இதுபோன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்கவேண்டிய அதிகாரிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வாக்குமூலம் தாக்கல் செய்யச்சொல்லியது. ஆகஸ்டு மாதம் 12–ந் தேதி தமிழக சட்டசபையில் இதுபோல ஆழ்குழாய் கிணறுகளை தோண்டுவதற்கும், தண்ணீர் இல்லாததால் கைவிடப்படும் ஆழ்குழாய்கிணறுகளை மூடுவதற்கும் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேறியது. இந்த சட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் உரிமையாளர்கள் மற்றும் அத்தகைய கிணறுகளைத் தோண்டும் முகவாண்மைகளின் அக்கரையற்ற தன்மையினால், சிறு குழந்தைகளின் இறப்புக்குரிய விபத்துக்கள் மற்றும் இறப்புகள் நடக்கின்றன. இந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இருப்பவர் யாராயினும் 3 ஆண்டுகளுக்கு குறையாத, ஆனால் 7 ஆண்டுகள்வரை நீடிக்கும் வகையிலான சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம்வரை அபராதம் விதிக்கமுடியும். உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தெளிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, ஆழ்குழாய் கிணறுகளை தோண்டவோ, பழுதுபார்க்கவோ விரும்பினால், 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி அமைப்புகள், நிலத்தடிநீர் துறை, பொதுசுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் தரைமட்டம்வரை சரியாக நிரப்பப்பட்டு, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறவேண்டும் என்பது உள்பட பல வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது.
அரசு ஏற்கனவே நிறைவேற்றிய சட்டத்தோடு, உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளையும் உடனடியாக நிறைவேற்றும் வகையில் சட்டதிருத்தமோ, விதிகளோ கொண்டுவரவேண்டும். நில உரிமையாளர்கள், தோண்டுபவர்களை மட்டுமல்லாமல், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். எந்த பழுதுபார்க்கும் பணிகள் என்றாலும், கைவிடப்பட்ட ஆழ்குழாய்கிணறுகளில் தண்ணீர் இருக்கிறதா? என்று மீண்டும் பார்க்க வேண்டுமென்றால், அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் பார்க்க வேண்டும் என்று விதிகள் வகுத்து நிறைவேற்றவேண்டும். உடனடியாக தமிழ்நாடு முழுவதும் எத்தனை ஆழ்குழாய் கிணறுகள் இருக்கின்றன?, எத்தனை கைவிடப்பட்டுள்ளன? என்ற பட்டியலை எடுத்து, அனைத்தையும் அரசின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
No comments:
Post a Comment