சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தடையை நீக்க வேண்டும்
டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14-ந்தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சியை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடத்த திட்டமிட்டோம்.
இதற்கிடையில், கடந்த 12-ந்தேதி நாங்கள் நடத்தும் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்த தடையை போலீசார் பிறப்பித்துள்ளனர். எனவே, அந்த தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தன்னிச்சை முடிவு
இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு நேற்று மாலை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவேண்டும் என்று சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்தவரும், இந்து மகாசபா சார்பிலும் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் அரசு தரப்பில் அட்வகேட்ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் தியாகராஜன், டி.வீரசேகரன் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது நடந்த விவாதம் பின்வருமாறு:-
மூத்த வக்கீல் தியாகராஜன்:- தாலி அகற்ற வேண்டும் என்ற எண்ணங்களை கொண்டவர்கள், இது தொடர்பான ஒத்த கருத்தை கொண்டவர்கள் கலந்து கொள்ளும் தனியார் நிகழ்ச்சியாகும். இது பொதுக்கூட்டம் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள யாருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும். பெண்கள் தாலியை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊர்வலம் எதுவும் நாங்கள் செல்லவில்லை. ஆனால், போலீசார் இந்த நிகழ்ச்சியை தவறாக புரிந்துக் கொண்டு, தன்னிச்சையான உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
சட்டஒழுங்கு முக்கியம்
அட்வகேட் ஜெனரல் சோமயாஜி:- சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின்படி, தனியார் இடத்தில் நிகழ்ச்சி நடத்தினாலும், போலீஸ் அனுமதி தேவை. மேலும், போலீஸ் கமிஷனர் 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றுக்கு தடை விதித்து பொதுவாகத்தான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு மனுதாரர் அமைப்புக்கு மட்டும் பிறப்பிக்கவில்லை. உளவுப்பிரிவு அறிக்கையின் அடிப்படையில், சட்ட ஒழுங்கு பிரச்சினையை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களை பொருத்தவரை கருத்துச் சுதந்திரம் என்பதை விட, சட்டஒழுங்குத்தான் முக்கியமானது.
கருத்து சுதந்திரம் முக்கியம்
நீதிபதி:- என்னை பொருத்தவரை கருத்துச்சுதந்திரம்தான் முக்கியமானது. அதனால்தான் இந்த வழக்கை இரவு வரை விசாரிக்கின்றேன். இந்த மனுதாரர் மட்டுமல்ல, நாளை இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து மகாசபா நிர்வாகிகள், நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசுவதற்கும், காந்தியை விமர்சித்து பேசுவதற்கும் அனுமதிக் கேட்டால், அதற்கு அனுமதி வழங்கத்தான் செய்வேன். அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை வழங்கப்பட்டுள்ளது. சட்டஒழுங்குதான் முக்கியம் என்று சொல்கிறீர்கள். இந்த தாலி பிரச்சினையில், டி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடந்ததே, அதை போலீசாரால் தடுக்க முடிந்ததா? இந்த பிரச்சினையால், தாலி தொடர்பான நிகழ்ச்சி ஒளிப்பரப்பவே இல்லையே? தாலி அகற்றும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளதே?
மாட்டுக்கறி
சோமயாஜி:- அவர்கள் 1987 முதல் 1995-ம் ஆண்டு வரை நடத்தியதாக ஏதோ ஒரு போட்டோ, செய்தித்தாள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். ஆனால், அது போதுமான ஆதரமாக இல்லை. இந்த நிகழ்ச்சி மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியினால் சட்டஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று உளவுப்பிரிவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், நிகழ்ச்சி முடிவில் மாட்டுக்கறி வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.
நீதிபதி:- அதனால் யாரும் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்கிறீர்களா?
சோமயாஜி:- அப்படியில்லை. சட்டஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது. அதுதான் போலீசாரின் எண்ணம்.
இவ்வாறு விவாதம் நடந்தது. இந்த விவாதம் இரவு 7 மணி வரை நடந்தது.
உத்தரவு ரத்து
இதன்பின்னர் இரவு 9 மணிக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14-ந்தேதி (இன்று) நடத்திக்கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர் அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும் விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும் போலீசார் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment