பெட்ரோல்–டீசல் கமிஷன் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நாளை(சனிக்கிழமை) பகலில் மட்டும் இயங்கும் என்று விற்பனை டீலர்கள் அறிவித்துள்ளனர்.
கமிஷன் தொகை
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள்(டீலர்கள்) சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
கடந்த 2010–ம் ஆண்டு அபூர்வா சந்திரா கமிட்டி குழு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.50–ம், டீசலுக்கு ரூ.2–ம் கமிஷன் தொகையாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2–ம், டீசலுக்கு ரூ.1.20–ம் கமிஷனாக வழங்கி வருகிறது.
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த காலக்கெடு கடந்த மார்ச் 31–ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே உடனடியாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு நியாயமான விளிம்புத் தொகையை வழங்கிட வேண்டும்.
புதிய பங்க்குகள்
நாட்டில் 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்தநிலையில் எண்ணெய் நிறுவனங்கள் புதிதாக 33 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளை திறக்க விளம்பரம் செய்துள்ளனர். இது தேசிய அளவிலான பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வளர்ச்சிக்கும், புதிய விற்பனை நிலையங்களின் அறிவிப்புக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை. எனவே புதிய பெட்ரோல் பங்க்குகள் நிறுவுவதை நெறிமுறைப்படுத்திட வேண்டும்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் கொடுத்துள்ள குத்தகை நிலத்தை திரும்ப பெறுவதற்கான கொள்கை வரைவினை எளிதாக்க வேண்டும்.
விற்பனை நிலையங்களில் பெட்ரோல்–டீசல் எண்ணெய் நிறுவன லாரிகளில் இருந்து பெறப்படும்போது, அதன் அளவினை கண்காணித்திட ரசீதுடன் கூடிய அளவீட்டு கருவியை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவிட வேண்டும்.
கொள்முதல் நிறுத்தம்
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை மாறும் தேதி குறித்து, முன் அட்டவணையின்படி கால நிர்ணயம் செய்திட வேண்டும். சில்லறை விற்பனை நிலைய உரிமையாளர்களின் குடும்ப உறுப்பினருக்கு விற்பனை நிலையத்தின் உரிமத்தினை மாற்றிடும்போது, புதிய கட்டணம் வசூலிப்பதில் விலக்களித்திட வேண்டும்.
பெட்ரோல்–டீசல் இரண்டு பொருட்களை வெவ்வேறு இடங்களில் ஒரே உரிமத்தில் விற்பனை செய்து வருபவர்களை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரே இடத்தில் விற்பனை நிலையத்தினை அமைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்கில் 10–ந்தேதி(நாளை) ஒரு நாள் பெட்ரோல்–டீசல் கொள்முதலை நிறுத்தப்படும்.
ரூ.1,025 கோடி இழப்பு
மேலும் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் பங்குகள் செயல்படும். பெட்ரோல்–டீசல் கொள்முதலை நிறுத்துவதன் மூலம் ரூ.300 கோடியும், பகுதி நேரமாக பெட்ரோல் பங்க்கை இயக்குவதன் மூலம் ரூ.725 கோடியும் இழப்பு ஏற்படும். தமிழ்நாடு–புதுச்சேரியில் உள்ள 4 ஆயிரத்து 500 பங்க்குகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment